|
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் மீண்டும் யுத்தம்!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
எதிர்க்கட்களின் பொது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் கோஷ்டியின் (சம்பந்தன் - மாவை சேனாதிராசா – சுரேஷ் பிரேமச்சந்திரன்) ஆதரவை பெற்று கொள்வதற்காக, அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கியுள்ளார். சம்பந்தன் கோஷ்டிக்கு சரத் பொன்சேகா கொடுத்த இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் மீண்டும் யுத்த சூழ்நிலை தோன்றும் அபாயம் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பிரதியுபகாரமாக, மூன்று முக்கியமான விடயங்களை, சரத் பொன்சாகாவிடம் சம்பந்தன் கோஷ்டி எழுத்து மூலமான வாக்குறுதியாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று, வன்னி யுத்த இறுதி நாட்களில் படையினரால் கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த பத்தாயிரத்துக்கும் மேலான புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல். இரண்டாவது, வடக்கு கிழக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குதல். மூன்றாவது, அவசரகால சட்டத்தை நீக்குதல். இந்த மூன்று நடவடிக்கைகளும் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதகாலத்தில் நிறைவேற்றப்படும் என சம்பந்தன் கோஷ்டிக்கு, சரத் பொன்சேகா – ரணில் விக்கிரமசிங்கா கோஷ்டியால் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகள், மீள் குடியேற்றமும், இயல்பு வாழ்க்கையை மீள உருவாக்குதலும் ஆகும். அதற்கு அடுத்ததாக அவர்களுக்கு தேவையானது தமிழ் பகுதிகளின் பொருளாதார அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பனவாகும். அதைத் தொடர்ந்து இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான, நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதாகும். இவை எல்லோருக்கும் தெரிந்த, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களாகும். இந்த விடயங்களை நிறைவேற்றுவதில், தற்போதைய ராஜபக்ச அரசாங்கம், அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதும் அனைவருக்கும் தெரிந்த விடயங்களாகும். தமிழ் மக்களின் இந்த அத்தியாவசிய பிரச்சினைகளை பற்றி சரத் பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடாத்தாத சம்பந்தன் கோஷ்டி, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகளில் தளர்வு ஏற்படுத்துவது குறித்து அதிக அக்கறை செலுத்துவதும், அது சம்பந்தமாக சரத் பொன்சேகாவிடம் எழுத்துமூலமான வாக்குறுதி பெறுவதும், ஏன் என்ற கேள்வி, இப்பொழுது அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சரத் பொன்சேகாவை பொறுத்தவரையில், சம்பந்தன் கோஷ்டி, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை குறித்து வாக்குறுதிகள் எதுவும் கேட்காதது, பெரிதும் ஆறுதலளிக்கும் விடயமாகும். ஏனெனில், சரத் பொன்சேகாவை எதிர்க்கட்களின் பொது ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திய பிரதான கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி, இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லையென்றும், எனவே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் வழங்க தேவையில்லையென்றும் வலியுறுத்தி வரும் கட்சியாகும். அப்படியிருக்க, சம்பந்தன் கோஷ்டி இனப்பிரச்சினை பற்றி ஏதாவது பேசி, அது பற்றி சரத் பொன்சேகா அவர்களுக்கு ஏதாவது வாக்குறுதி வழங்கப்போனால், அதன் காரணமாக ஜே.வி.பியின் ஆதரவை அவர் இழக்க வேண்டி வந்துவிடலாம். எனவே சம்பந்தன் கோஷ்டி தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து சரத் பொன்சேகாவிடம் வாக்குறுதி எதுவும் கேட்காதது அவருக்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் சம்பந்தன் கோஷ்டி, தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி சரத் பொன்சேகாவிடம் எதுவும் பேசாதது, அவரை இக்கட்டில் மாட்டாமல் இருப்பதற்காகவா அல்லது வேறு எதாவது பின்னணி நோக்கங்களுடனா என்ற கேள்வியும் இருக்கிறது. ஏனெனில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகளை விட்டுவிட்டு, அவர்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத, அதேநேரத்தில் நாட்டின் அதிமுக்கிய பிரச்சினையான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில், சரத் பொன்சேகாவிடம் வாக்குறுதி பெற்றிருப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வி, நாட்டு பற்றுள்ள அனைவரிடமும் எழுந்திருக்கிறது. ஏனெனில், யுத்தம் முடிவுற்று ஏழு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் இன்னமும் முற்றாக நீங்கிவிடாத சூழ்நிலையில், புனர்வாழ்வு எதுவும் அழிக்கப்படாமல், கைதுசெய்யப்பட்ட புலிகளை விடுவிக்க கோருவதும், படையினருக்கு இன்னும் சிறிது காலத்துக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற கோருவதும், அவசரகால சட்டததை நீக்க கோருவதும், நிச்சயமாக நல்ல நோக்கங்கள் கொண்டவையாகவோ, தமிழ் மக்களுக்கோ அல்லது இலங்கையின் ஏனைய இன மக்களுக்கோ நன்மை பயப்பனவாகவோ இருக்க முடியாது என்பதால் தான். சம்பந்தன் கோஷ்டியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், புலிகள் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்து, சுதந்திரமாக மீண்டும் தமது செயல்பாட்டை ஆரம்பிப்பார்கள். இலங்கை இராணுவ முகாம்களுக்கு அருகே ஆயுதங்களை குவிப்பார்கள். நாட்டில் சுதந்திரமாக உலவி தற்கொலை குண்டு தாக்குதல்களை நடாத்துவார்கள். அரசியல் எதிரிகளை கொலை செய்வாhகள். கடந்த காலத்தில் என்னென்ன பயங்கரவாத செயல்பாடுகளை மேற்கொண்டார்களோ அத்தனையையும் மீண்டும் செய்வார்கள். இவையெல்லாவற்றையும் மீள கொண்டுவருவதற்காகத்தானா சம்பந்தன் கோஷ்டி நாட்டின் பாதுகாப்பை இல்லாதொழிக்கும் வாக்குறுதிகளை சரத் பொன்சேகாவிடம் பெற்று கொண்டதா என்ற நியாயமான கேள்வி எழுகின்றது. புலி பயங்கரவாதிகளை ஒழிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, பொய் வாக்குறுதிகளை தாராளமாக வழங்கி தன்னும், தான் எப்படியும் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்ற பதவி வெறியில், சம்பந்தன் கோஷ்டியின் சதி வலையில் விழுந்துவிட்டாரா என்ற இன்னொரு கேள்;வியும் கூடவே எழுகின்றது. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் பல இருக்க, தமது தமிழ் கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தன் கோஷ்டி பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க, விடாப்பிடியாக நின்று முடிவு செய்திருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதாவது சம்பந்தன் கோஷ்டியின் இந்த செயல்பாடுகளுக்கு, இன்னமும் வெளிநாடுகளில் பணபலத்துடன் இயங்கிவரும் புலி இயக்கத்தினரின் வற்புறுத்தல் காரணமா அல்லது இறுதி நேரத்தில் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்ற முயன்று தோற்று போன மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் தூண்டுதல் காரணமா அல்லது இரண்டுமா (ஏனெனில் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் புலிகளுக்குமான கள்ள உறவும், ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தமிழ் தலைமைகளுக்கும் உள்ள பாரம்பரிய கள்ள உறவும், பகிரங்க இரகசியமானவை) என்பதை காலம் வெகுவிரைவில் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவரையும் இலங்கையின் ஜனநாயகம், பன்முகத்தனமை, இறைமை என்பனவற்றை நேசிப்பவர்களுக்கு உள்ள ஒரே நிம்மதி, நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில், சரத் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதுதான். அப்படி அதையும் மீறி சரத் பொன்சேகா தற்செயலாக வெற்றி பெற்றாலும், அவர் சம்பந்தன் கோஷ்டிக்கு வழங்கிய தேசத்தை காட்டி கொடுக்கும் வாக்குறிதிகளை நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும் விடமாட்டா என்பதுமாகும்.
|
|