|
சரத் பொன்சேகா பதவிக்கு வந்தால் சிறுபான்மையினரின் பிரச்சினை தீர்ந்துவிடாது
யாழ்ப்பாணத்தில் மனோ கணேசன் தெரிவிப்பு
சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதால் சிறுபான்மையினருக்குத் தீர்வு கிடைத்துவிடாது என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், எம்.பி; தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த சனியன்று பிரசார கூட்டமொன்று நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதோடு இளைஞர்களே இதில் அதிகமாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பலத்த சோதனைகளுக்குப் பின்னரே மக்கள் கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்டதோடு சோதனையின்போது ஒட்டப்படும் “ஸ்டிக்கர்” இல்லாதோர் கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பி.ப 3 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கபடுமென அறிவிக்கப் பட்டிருந்தபோதும் பி.ப.4.45 மணிவரையில் மக்கள் காத்திருந்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன சிங்களத்தில் உரையாற்றியபோது தமிழ் மொழிபெயர்ப்பு வழங்குமாறு மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் சபையில் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது ஜயலத் ஜயவர்த்தனாவின் உரையை சதாசிவம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜயலத் கூறியவற்றை அவரால் சரியாக மொழிபெயர்க்க முடியவில்லை. ஜயலத்தின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்க்க முடியாமல் சதாசிவம் தடுமாறியதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் மேடையில் அமர்ந்திருந்த மனோ கணேசன் மற்றும் ரவ+ப் ஹக்கீம் போன்றோரின் முகங்கள் களையிழந்திருந்தன.
ஜயலத் ஜயவர்த்தனவின் உரையைத் தொடர்ந்து பேசிய மனோ கணேசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்து காரசாரமாக உரையாற்றினார். சனாதிபதியின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே தான் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா யாழ்ப்பாண மக்கள் முன்னிலையில் சிங்கள மொழியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தபோதும் அப்பேச்சைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு எவ்வித முன்னேற்பாடும் செய்திருக்கவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாததால் பொன்சேகாவின் உரையையும் சதாசிவமே மொழிபெயர்த்தார். இதனால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பொன்சேகா ஆங்கிலமொழியிலாவது உரையாற்றி இருக்கலாமென பலரும் விசனம் தெரிவித்தனர். அதியுயர் பாதுகாப்பு வலயம் குறித்து அவர் ஆற்றிய உரையை தமிழில் மொழிபெயர்க்க முடியாமல் சதாசிவம் தடுமாறியபோது மனோ கணேசன் எம்.பி ஒலிவாங்கியைப் பெற்று High Security Zone என்ற வசனத்தை தமிழில் மொழிபெயர்த்தார்.
சரத் பொன்சேகாவின் உரையைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். ஆனால், அவர் பேசும்போது அதிகமான மக்கள் மண்டபத்தை விட்டும் வெளியேறிக் கொண்டிருந்ததாக அறிவிக்கப் படுகின்றது.
|