|
சுவிஸ் ரகசிய கணக்கு தகவல்கள் கசியுமா? ஐரோப்பிய நாடுகள் ஆர்வம்
சுவிஸ் வங்கிகளில் உள்ள ரகசியக் கணக்கு தகவல்கள், "சிடி' மூலம் கசியும் வாய்ப்பு உருவாகியிருப்பதால், சுவிட்சர்லாந்து நாட்டுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் , தாங்கள் முறைகேடாகச் சேர்த்த கறுப்பு பணத்தை, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். இவர்களை பற்றிய விவரங்களை, சுவிஸ் வங்கிகள் வெளியிடுவதில்லை; அவற்றை ரகசியமாக வைத்திருக்கும். இந்நிலையில், வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வரும் ஜெர்மனி அரசு, சுவிஸ் வங்கிகளில் பணத்தை டிபாசிட் செய்துள்ள தங்கள் நாட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டுமென, வற்புறுத்தி வருகிறது. இதற்கு சுவிஸ் அரசாங்கமும், வங்கிகளும் செவி சாய்க்கவில்லை. முதலில் அமெரிக்கா போட்ட அதிரடி சட்டம், அதற்கு அடுத்த நடவடிக்கைகளால் தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் சில அமெரிக்கர் பெயர் பட்டியலை வெளியிட, சுவிஸ் வங்கிகள் முன்வந்தன. அந்த நடவடிக்கைகள் முடிவடையும் முன், ஜெர்மனியும் சில ஐரோப்பிய நாடுகளும் அடுத்தடுத்து தகவல் திரட்ட முன்வந்திருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் கெடுபிடி கண்டு எரிச்சலடைந்துள்ள ஜெர்மன் அரசு, தங்கள் நாட்டில் வரி மோசடி செய்து, சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்களை, சிலர் மூலம் ரகசியமாக, "சிடி' மூலம் பெறப் போவதாகக் கூறியுள்ளது.
வங்கி ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வெளியிடப்படும், "சிடி'க்கள் அவை. அப்படி கிடைத்தவுடன், அவற்றை பகிரங்கமாக வெளியிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது. ஜெர்மனிக்கு ஆதரவாக நார்வே, பெல்ஜியம், ஆஸ்திரியா உட்பட வேறு சில நாடுகளும் குரல் கொடுத்துள்ளன. ஜெர்மனி பெறும் தகவல்களை தங்களுக்கும் தர வேண்டும் என்றும் கோரியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் இப்படி ஒன்றிணைந்து செயல்படுவது, சுவிஸ் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சுவிஸ் வங்கியில் பணம் குவித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை, "டிஸ்க்' வடிவில் ஜெர்மனி பெற உள்ளதால், அவற்றில் இருந்து பல முக்கிய விவரங்கள் வெளியாகலாம். சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்துள்ள இந்தியர்களைப் பற்றிய விவரங்கள் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இந்த விவகாரம் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டு அமைச்சரவையும் விவாதித்துள்ளது. அப்போது, ஜெர்மனியின் கோரிக்கையை ஏற்று, பணம் குவித்துள்ள ஜெர்மனியர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவது பற்றி ஆலோசிக்க முன்வந்திருக்கிறது.
ஜெர்மனியுடன் நல்லதொரு வர்த்தகம் வைத்திருப்பதால், எதிர்கால உறவு பாதிக்கப்படும் என்று சுவிஸ் உள்துறை அமைச்சர் டிடீர் தெரிவித்தார். அதற்காக சட்டரீதியான உடன்பாட்டை ஏற்படுத்தலாம் என்றும் சுவிஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், ரகசிய தகவல் ஏதும் கசிந்தால், அதை வெளியிட பல்வேறு நாடுகளும் தயாராக உள்ளன. அப்படி வெளியாகும் தகவல்களை சுவிஸ் சுலபத்தில் மறுக்க இயலாது. சுவிஸ் வங்கி ரகசியங்கள் உடைந்து போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு வங்கி தலைமை நிர்வாகிகள் கலங்கியுள்ளனர். ஐரோப்பிய நாட்டின் அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் பலரும், இந்த லிஸ்ட் வெளிவரலாம் என்று அதிர்ந்திருக்கின்றனர். அப்படி ஒரு ரகசிய தகவல் கசிந்தால், அதில் இந்தியர் பெயர் எத்தனை இருக்கும் என்ற ஆர்வம் தற்போது எழுந்திருக்கிறது.
|