|
வளர்ச்சிக்கு ஆதாரமான கண்டி - யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை
இலங்கையின் முக்கிய நெடுஞ்சாலையான ஏ-9, போக்குவரத்துக்கு திறக்கப் பட்டுள்ளது, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் யாழ்ப்பாணம் - கண்டியை இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை, யாழ்ப்பாணம் கோட்டை அருகே துவங்கி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்துகிறது. உள்நாட்டுப்போர் தீவிரமடைந்திருந்த போது, சாலையின் ஒரு பகுதியை ராணுவமும், மற்றொரு பகுதியை புலிகளும் முடக்கி வைத்திருந்தனர். இதனால், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு தரை வழி போக்குவரத்து முடங்கியது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து, அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இச்சாலை திறக்கப் பட்டுள்ளது. இதில் கொழும்பு, திரிகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா என முக்கிய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன; இவற்றில் கூட்டம் அலைமோதுகிறது.
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையே பயணிக்க, 13 மணி நேரம் வரை ஆகிறது. ஏ-9 நெடுஞ்சாலையில் வவுனியாவை அடுத்த ஓமந்தையில் ராணுவ சோதனைச் சாவடியில் வாகனங்கள் கடுமையான சோதனை செய்யப்படுகின்றன. வெளிநாட்டுப் பயணிகள், இந்த சாலையில் பயணிக்க ராணுவ அமைச்சகத்தில் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். மிகக் கடுமையான சோதனை இங்கு நடக்கிறது. ஓமந்தையை அடுத்து, ஏ-9 சாலையின் இரு புறமும் 50 மீட்டர் தூர இடைவெளியில் ராணுவம், கண்காணிப்பு வளைவுகள் அமைத்துள்ளது. 100 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது. ஆங்காங்கே ராணுவ சோதனைச் சாவடிகள் உள்ளன. அகதிகளாக சென்றவர்கள், திரும்பி வந்து சாலையோரத்தில் சில இடங்களில் எளியவகையில் குடிசைகளை அமைத்துள்ளனர்.
இச்சாலையில் அடுத்துள் ளது முல்லைத்தீவு மாவட்டம் தெரு முறிகண்டி. அங்கு வாகனங்களை நிறுத்தி சாலையோர விநாயகர் கோவிலில், பயணிகள் தேங்காய் உடைத்து, மனம் உருகி பிரார்த்திக்கின்றனர். கோவில் அருகே இருந்த பெரிய வணிக வளாக கட்டடங்கள் அனைத்தும் போரில் தரைமட்டமாகிவிட்டன. இடிபாடுகளை அகற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். சோதனைச் சாவடியைத் தாண்டி, சாலையின் இருபுறமும் அடர்ந்த காடு. மரங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடக்கின்றன. இவை உண்மையில் காடுகள் அல்ல என்றார் கிளிநொச்சியைச் சேர்ந்த சுகந்தி சுகிர்தராஜா. புலிகளுடனான இறுதிப்போரில் காயம் பட்டு அகதியான அவர், மீண்டும் தன் சொந்த வீட்டைத் தேடி, 5 வயது பெண் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார்.
மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட அவர் கூறியதாவது: இச்சாலையில் இரண்டு பக்கமும் விளைநிலங்கள்தான் இருந்தன. நீண்டநாட்களாக சண்டை நடந்து கொண்டிருந்ததால் நிலங்களில் சாகுபடி நடக்கவில்லை. அதனால் மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல் மாறிவிட்டது. நிலங்களுக்கு அப்பால் இயற்கையான வனம் உள்ளது. அங்கிருந்துதான் புலிகள் கொரில்லா தாக்குதல் நடத்திவந்தனர். கடந்த ஆண்டு கிளிநொச்சியை இலங்கை ராணுவம் பிடித்த போது நடந்த சண்டையில், என் இடது காலிலும் வலது கழுத்திலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் வவுனியாவில் உறவினருடன் தங்கியிருக்கிறேன். இயல்பு நிலை ஏற்பட்டு போக்குவரத்து துவங்கியுள்ளதால், என் சொந்த வீட்டைத் தேடி செல்கிறேன். அது எப்படி மாறி இருக்கும் என்று தெரியவில்லை. இவ்வாறு சுகந்தி கூறினார். கிளிநொச்சி நகரில், தன் வீடு இருந்த இடத்தைக் கூட அடையாளம் காணமுடியாமல் அவர் திணறிக் கொண்டிருந்தார். நான்கு இடங்களில் பஸ்சை நிறுத்தி, அவரது வீடு இருந்த இடத்தை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கண்ணீருடன் ராணுவ அதிகாரிகளிடம் விசாரிக்கச் சென்றார்.
கிளி நொச்சி நகரம் முற்றாக அழிந்து கிடக்கிறது. தகர்ந்து தரைமட்டமான கட்டடங்கள், மண்கட்டை சுவர்கள், புலிகளின் ஆயுதக்கிடங்கு என அனைத்தையும் ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. புலி முகாம்கள் அனைத்தும் ராணுவ மையங்களாக மாறியுள்ளன. எங்கும் ராணுவத்தினர் நடமாட்டம் தான். தகர்ந்து போன கட்டட இடிபாடுகளை அவர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர். இங்குள்ள ஒரு கட்டடத்தில் தான் பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தததாக, பஸ் பயணிகள் பேசிக்கொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மறு குடியேற்றம் மிகச் சில இடங்களில் நடந்துள்ளது. அதுவும், ஏ-9 நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில் மட்டும் தான். கிழக்குப் பகுதியில் மக்கள் நடமாட அனுமதியில்லை. முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் முழுமையாக ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன.
கிளிநொச்சி - யாழ்ப்பாண மாவட்ட எல்லையில் யாழ்ப்பாண கடல் நீரேரி பரந்து விரிந்துள்ளது. இங்குதான் ஆனையிறவு உள்ளது. யாழ்ப்பாணத்தின் வாசல் போன்ற இந்த பகுதியில், உப்பு உற்பத்தி அமோகமாக நடந்து வந்தது. கடந்த 2003ம் ஆண்டு ஆனையிறவு புலிகள் கட்டுப்பாட்டுக் குள் வந்தது. அங்கு புலிகளின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதை கடக்க புலிகளின் அனுமதி வேண்டும் என்ற நிலை இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் இதை கைப்பற்றிய ராணுவம், இதை மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடியது. அதன் அடையாளமாக, ஒருங்கிணைந்த இலங்கையைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை ராணுவம் அமைத்து வருகிறது. இந்த பகுதியை அடுத்து குறுங்காடுகள் பரந்து விரிந்துள்ளன. குண்டுகளுக்கு இலக்காகி கருகிய நிலையில், ஏராளமான மரங்கள் காணப்படுகிறன்றன. உடைந்து சிதிலமாகிக் கிடக் கும் கட்டடங்களில், குண்டு பாய்ந்த தடயங்களைக் காணமுடிகிறது. தனித்தனியாக அமைக்கப் பட்ட பழமையான வீடுகள், குண்டுகளுக்கு இலக்காகியுள்ளன. பயங்கர குண்டுகள் விழுந்து ஆங்காங்கே பெரிய பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் இன்மையால் சாலைகள் புல் முளைத்து, அடையாளங்கள் அழிந்துள் ளன.
ஆனையிறவு பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் நிலைமை இது. இங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களில் பலர், இன்னும் திரும்பி வரவில்லை. கடைசிக்கட்டமாக போர் தீவிரமடைந்திருந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதுமாக முடங்கிவிட்டன. இங்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த மாவட்டங்களில் உள்ள விவசாய உற்பத்தியையோ, மீனையோ இலங்கையின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல வாய்ப்பில்லாமல் போனது. அதே நேரம், இங்கு வசித்த மக்களுக்கு வெளியில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதும் முடங்கியது. வெளியுலகத் தொடர்பின்றி, இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்லாண்டுகளாக வாழ வேண்டியிருந்தது.
இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியது பற்றி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன் கூறியதாவது: உள்நாட்டுப் போர் துவங்கும் முன் இச்சாலையை நாங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தோம். விளை பொருட் களை சைக்கிளில் கட்டிக் கொண்டு, வவுனியாவுக்கு வருவோம். அங்கு பொருட்களை விற்று விட்டு, அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு செல் வோம். போர் துவங்கிய பின் இந்த சாலையில் வருவது மிகவும் சிக்கலாக இருந்தது. மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்த நாங்கள், பின்னர் கட்டாயத்தின் பேரில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வருவோம். சாலை மூடப்பட்டபின், ஒரு பகுதியில் புலிகளிடம் அனுமதி பெற்றும், மறுபகுதியில் ராணுவத்திடம் அனுமதி பெற்றும் போய் வந்து கொண்டிருந்தோம். பின்னர் முழுவதுமாக இந்த சாலை முடங்கியது. இந்த சாலையில் போனால் சாக வேண்டியதுதான் என்ற நிலை இருந்தது. இப்போது மீண்டும் சாலை திறந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மட்டக் களப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சாலை திறக்கப்பட்டதால், யாழ்ப்பாணத்துக்கு செல்கிறேன். இவ்வாறு ஸ்ரீகாந்தன் கூறினார்.
போர் பாதிப்பு ஒரு புறம்; சாலை மூடப்பட்டதால் ஏற் பட்ட நெருக்கடிகள் மறுபுறம்; இவற்றை சகிக்க முடியாமல், அகதியாக இடம் பெயர்ந்தவர்கள் அதிகம் என்ற கருத்தும் உள்ளது. உள்நாட்டுப் போர் துவங்கியதும், இந்த சாலையைச் சார்ந்துள்ள மாவட் டங்கள் வளர்ச்சியை இழந்தன. இப்போது இச்சாலை திறந்துவிடப்பட்டுள்ளது. குண்டு சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்த சாலையில், வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. தனித்தீவாக ஒதுங்கியிருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். விளை பொருட்கள் பரிமாற்றமும், அத்தியாவசியப் பொருட்களின் வரத்தும் அதிகரித்து சாலையை பரபரப்பாக்கியுள்ளது. சொந்த வீடு, நிலங்களைத் தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கையைக் காலை அகலப்பரப்பி ஒரு பிணம் போல் கிடந்த ஏ-9 நெடுஞ்சாலை, இப்போது உயிரூட்டம் பெற்றுள்ளது. இந்த உயிரூட்டம் மூன்று மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கை சார்ந்து இயங்கும்.
கிளிநொச்சியில் ஆபத்தான கண்ணிவெடிகள்: முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை, மிகவும் ஆபத்தான பகுதிகளாக அறிவித்து, இலங்கை ராணுவம் தடை விதித்துள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டுப்போர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடந்தது. இரு மாவட்டங்களிலும் போரினால் இடம் பெயர்ந்த பலரை, மறு குடியமர்த்தி விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சிதைந்து கிடக்கும் இப்பகுதிகளில் மிகக்குறைந்தவர்களே மறு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இங்கு பல இடங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். பல கிராமங்களை ஒட்டியப் பகுதிகளில் சிவப்பு நாடாவுடன் எல்லையைக் குறிப்பிட்டு, கண்ணி வெடி எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் எச்சரிக்கை அரண் அமைத்து, அவற்றை மிகுந்த ஆபத்து பகுதிகளாக அறிவித்துள்ளனர். இது போன்ற பகுதிகளில் ராணுவத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை. எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் தவறிச்செல்லும் கால்நடைகள் கண்ணிவெடியில் சிக்கி பலியாவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
- தினமலர் நிருபர்
|