|
மறுபடியும் மக்களிடம் ஆணை கேட்கும் பம்மாத்தமைப்பு
- தாயகக்குரல்
"பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் முஸ்லிம் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பேன் என்னுடன் விடயங்களைக் கையாள முடியாதென அவர்கள் நினைத்தால் புதிய தலைவர்கள் வருவார்கள். நான் அவர்களுடன் விடயங்களைக் கையாளவேண்டியிருக்கும்" - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
2010 ஏப்ரல் 8ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்மூலம் 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 36 கட்சிகளில் இருந்தும் 301 சுயேச்சைக் குழுக்களில் இருந்தும் 7620 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இலங்கை சரித்திரத்திலேயே இவ்வளவு வேட்பாளர்கள் போட்டியிடுவது இந்த தேர்தலில்தான். ஒவ்வொரு தொகுதியிலும் அதிகப்படியான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிக்கும். எனவே இம்முறை தேர்தலில் வாக்களிக்க வாக்கு சீட்டு பெட்டிகள் பெரிதாக செய்யவேண்டியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சுயேச்சைக் குழுக்கள் பல கட்சிகளின் அனுசரணையுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில குழுக்கள் தாம் சார்ந்த கட்சியின் வெற்றியை உறுதி செய்ய எதிராளிகளின் வாக்குளை பிரிப்பதற்காக போட்டியிடுவதாகவும் சில கட்சிகள் வாககுகள் எண்ணும் முகவர்களை அதிகமாக பெறுவதற்கு சுயேட்சைக் குழுக்களை போட்டுள்ளதாகவும் தெரிகிறது. வாக்குகள் எண்ணும் நிலையம் ஒன்றுக்கு ஒரு கட்சியின் அல்லது குழுவின் சார்பில் இருவர் மாத்திரமே சமூகமளிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயேச்சைக் குழு அதிகரிக்க இன்னொரு காரணம் கூறுலாம். அரசியல் கட்சிகளில் பல காரணங்களுக்காக விரக்தியுற்றவர்கள் அந்தக் கட்சிகளை பழிவாங்கும் நோக்குடன் சில வாக்குகளையாவது அந்தக் கட்சிக்கு போகவிடாது தடுப்பது நோக்கமாக இருக்கலாம்.கடந்த காலங்களில் ஓற்றுமை முயற்சிகளில் ஈடுபட்ட கட்சிகள் மற்றும் கடந்த தேர்தல்களில் கூட்டாக போட்டியிட்ட கட்சிகள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் சின்னாபின்னமாக பிரிந்து போட்டியிடுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவுக்கு எதிராக கூட்டணி அமைத்த எதிர்கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் இரண்டாக உடைந்து ஒரு பிவினர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலும் இன்னொரு பிரிவினர் சரத்பொன்சேகா தலைமையிலும் போட்டியிடுகின்றனர்.
எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்த நிலையில் அவர்கள் இந்த தேர்தலில் பிரிந்து போட்டியிடுவதால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நம்பிக்கையில்தான், எவரிலும் தங்கியிராத வலுவான ஆட்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கு என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் முஸ்லிம் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பேன் அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை என்பதை இப்போது விளங்கிக்கொள்வது அவசியம். நானே நாட்டின் தலைவர், அவர்கள் என்னுடன் வந்து பேசுவது அவசியம். என்னுடன் விடயங்களைக் கையாள முடியாதென அவர்கள் நினைத்தால் புதிய தலைவர்கள் வருவார்கள். நான் அவர்களுடன் விடயங்களைக் கையாளவேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
தமிழ் மக்களே அரசை ஆக்குவதற்கும், வீழ்த்துவதற்கும் சக்தி யுள்ளவர்கள் என்று தமிழ் தலைவர்கள் பெருமை பேசிய நிலை மாறிவிட்டது. தேசிய வாதம் என்ற பெயரில் இனவாதம் பேசிப் பேசி தமிழர்கள்; தங்களுக்குள் பிரிந்துவிட்டனர். சிங்கள மக்கள் தேசியம் என்ற பெயரில் ஒன்றுபட்டுவிட்டனர். இதுதான் இன்றைய யதார்த்தம்.வடக்கு கிழக்கில் புலிகளினால் ஏக பிரதிநிதிகளாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் சின்னாபின்னப்பட்டு விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் தனிக்கட்சியாகவோ அல்லது வேறு கட்சிகளிலோ போட்டியிடுகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது. இவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பனர்களான கஜேந்திரன், பத்மினி ஆயோர் போட்டியிடுகின்றனர்.
யாழ்மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கட்சியை ஆரம்பித்து போட்டியிடுகின்றனர்.
வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கிஷோர் சிவநாதன், கனகரத்தினம் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இவர்களது வெளியேற்றம் தொடர்பான உண்மைநிலை இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்தன் ஆகியோருக்கே தெரியும் . ஆனால் கூட்டமைப்பில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்கள், கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவை எதிர்த்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதே வேளை இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில தீவிரமாக தேசியவாதம் பேசிவர்கள் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஜனநாயக நடவடிக்கைகளின் ஊடாக எமது இனத்தின் விடுதலையை சுயநிர்ணய அடிப்படையில் வென்றெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்குமாறு மக்களிடம் கோருவதாக வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கிறார்.
தமிழரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புவரை எல்லாத் தலைவர்களும் கடந்த 60 வருட காலமாக ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இதையே கூறிவந்தனர். மக்களும் இவர்களுக்கு ஆணையை வழங்கி வந்தனர். ஆனால் இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை. இனப்பிரச்சினை மேலும் சிக்கலானதுதான் முடிவு.
புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜனநாயக வழியில் பிரச்சினைக்கு தீர்வு என்று கூறுகின்றனரே அன்றி அதற்கான வழிமுறைகள் பற்றி இதுவரை தெரிவிக்கவில்லை. தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரிப்பதாக பல மாதங்களாகவே சொல்லி வருகின்றனர். இவர்கள் கடந்த காலங்களில் இனப்பிரச்சினையைத் தவிர வேறெதுவும் பேசவில்லை. இவர்களது தவறான முடிவுகளால் இனப்பிரச்சினை காலத்துக்கு காலம் புதிய பரிமாணம் பெற்று வளர்ந்ததே அன்றிதீர்வு எதனையும் எட்டவில்லை.
மீண்டும் ஆணை கேட்கிறார்கள் . மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
03.03.2010 தாயகக்குரல்
|