|
பொருளாதார வளர்ச்சியை சரிசமமாக பகிர்ந்தளிப்போம்! சீன மக்கள் மாமன்றம் உறுதி
உலகப்பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், சோசலிசத்தை நோக்கிய பாதையில் பீடு நடைபோடும் மக்கள் சீனம், 2010ம் ஆண்டின் இறுதியில் தனது பொருளாதாரத்தை மேலும் உச்சிக்கு கொண்டு செல்ல உறுதியேற்றுள்ளது.
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (சிபி பிசிசி) எனும் உயரிய மக்கள் மன்றத்தின் 11வது தேசியக் குழுவின் மாநாடு புதன் கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. பெய்ஜிங் மாநகரில் அமைந்துள்ள மக்கள் மாமன்ற அரங்கில் துவங்கிய இந்த மாநாடு மார்ச் 13ம் தேதி நிறைவுபெறுகிறது.
சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அரசின் கொள்கைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே தீர்மானிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர கட்சிகளும், கட்சி சாராத மக்கள் அமைப்புகளும் சீனாவில் செயல்படுகின்றன.
உயரிய மக்கள் ஜனநாயகத்தை பின்பற்றும்விதமாக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் அல்லாத இதர அனைத்துக் கட்சிகளுடனும், கட்சிசாராத மக்கள் அமைப்புகள் மற்றும் எந்த பகுதியையும் - எந்தப்பிரிவையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் அரசின் கொள்கைகளை செழுமைப்படுத்துவது குறித்தும், அரசின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் முன் வைக்கும் ஒரு திறந்த மக்கள் மன்றமாக சீன சிபிபிசிசி செயல்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்கள் மாமன்றத்தின் தேசியக்குழு கூடி, அரசின் திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விமர்சன ரீதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விவாதித்து ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றன. அந்த ஆலோசனைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையிலான அரசும் பெரு மிதத்துடன் ஏற்கின்றன.
இந்த அடிப்படையில், பெய்ஜிங்கில் கூடியிருக்கும் சிபிபிசிசி மாநாட்டில் ஜனாதிபதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஹூ ஜிண்டா வோ, பிரதமர் வென்ஜியா பவ், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் வூ பங்குவோ, லீ சாங் சங், ஜீ ஜின்பிங், லீ கேகி யாங், ஜோஹூ யாங்காங் உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும், நாடு முழுவதும் இருந்து மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் சிபிபிசிசி தேசிய கவுன்சிலின் தலைவர் ஜியா கிங்லின் விரிவான அறிக்கையினை முன்வைத்தார். அந்த அறிக்கையில், உலகப்பொருளாதார நெருக்கடியின் கடுமையாக தாக்கத்தை எதிர்கொண்டு சீனா அனைத்து துறைகளிலும் பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். ஒற்றுமை, நல்லிணக்கம் உள்ளிட்ட அம்சங்களோடு தீவிரமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி சீனா பயணப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிட்ட ஜியா, அரசின் நிறுவனங்கள், அரசு செயல்படும் முறைகள், பொருளாதார வளர்ச்சியின் தன்மை, சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தின் தீவிரம் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் இந்த மன்றம் தீவிரமான ஆய்வு நடத்த வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.
மேலும், தேசிய வருமானம் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், அதை சீரிய முறையில் கொண்டு செல்வதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்படவேண்டும் எனக்குறிப்பிட்ட அவர், குறிப்பாக இன சிறுபான்மையினருக்கும், சிறுபான்மை மக்கள் மிகுந்துள்ள பகுதிகளுக்கும் சமமான பொருளாதார வளர்ச்சியை கொண்டு செல்ல மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இம்மன்றம் ஆலோசனை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.
திபெத், சிச்சுவான், யுன்னான், கன்சூ, கிங்காய் போன்ற சுயாட்சி கவுன்சில்கள் கொண்ட பிரதேசங்களில் பொருளாதார வளர்ச்சி, அனைத்துத்தரப்பு மக்களின் சமூக மேம்பாடு போன்றவை குறித்தும் ஆய்வு செய்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|