|
தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றக்கூடாதென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றக்கூடாதென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்றி, தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றக் கூடாதென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் பாராட்டு தெரிவித்துள்ளது.கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அவர்களது சொந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரணவமுத்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த மனு மீதான தீர்ப்பு பாராட்டுக்குரியதொன்றென அந்த அமைப்பு ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி உயர் நீதிமன்ற நீதவான் நிமால் திஸாநாயக்க தலைமையிலான மூவர் அடங்கிய நீதவான் குழு கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பிரதேசங்களிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுதவற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவைவொன்றை பிறப்பித்திருந்தனர்.
இந்த மனுவையும் மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையமே ஏற்பாடு செய்திருந்தது. மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 11ம், 13(1) மற்றும் (2) ஆகிய சரத்துக்களின் அடிப்படையில் மனுவை தொடர்ந்தும் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் அரசியல்சாசன சட்டத்தின் 11, 12 மற்றும் (2), 13(1), (2), 13(1) எச் ஆகிய சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளிலிருந்து தமிழர்கள் பலவந்தமா வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும், எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமையவே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவை தவிர்ந்த வேறு எந்த சந்தர்ப்பத்திலும் தமிழர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் - சட்டமா அதிபர்
நீதிமன்ற உத்தரவைத் தவிர்ந்த வேறு எந்த சந்தர்ப்பத்திலும் கொழும்பிலுள்ள தமிழர்கள் எதிர்காலத்தில் பலவந்தமாக வெளியேற்றப்பட மாட்டார்கள் என சட்டமா அதிபர் இன்று (மே5) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்கத்தின் சார்பிலேயே சட்டமா அதிபர் இந்த உறுதிமொழியை இன்று உயர் நீதிமன்றத்தில் வழங்கினார். கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் ஆயுதப் படையினராலும், பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டு பலவந்தமாக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இந்த உத்தரவாதத்தை வழங்கினார். தமிழர்கள் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவது சட்டவிரோதமானது என்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால், பொலிஸாரின் அந்தச் செயற்பாட்டுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்று நீதிமன்றத்தால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று நடைபெற்றது. இதன்போது தமிழர்கள் எதிர்காலத்தில் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப் படமாட்டார்கள் எனவும், அவர் கொழும்புக்கு வருவதைத் தடுப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் சட்டமா அதிபர் இன்று உறுதியளித்தார்.இந்த உறுதிப்பாட்டை அடுத்து மனு மீதான வழக்கு விசாரணைகள் சமரசமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
|