|
சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு: வடகிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு குறித்து கருத்துக்கள் இல்லை
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா வியாழனன்று பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.
முதலாவது நடவடிக்கையாக நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவேன் என்றும், இரண்டாவதாக ஊழலையும், மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் சரத் ஃபொன்சேகா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவை தவிர ஒவ்வொரு குடும்பத்தினதும் நிதிநிலைமையை உறுதிப்படுத்துவேன் என்றும், வாழ்க்கைச் செலவினங்களை குறைப்பேன் என்றும் கூறியுள்ள அவர் பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் உறுதி மொழிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை ஆரம்பித்து, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
வடகிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு குறித்து கருத்துக்கள் இல்லை
பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும் அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக கருதப்படும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் இணைப்பு குறித்தோ அல்லது சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ எந்த விதமான கருத்துக்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10 பிரதான அம்சங்களுடன் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம், 'நம்பிக்கைமிக்க மாற்றம்' என்ற தொனிப் பொருளில் 10 பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இன்று முற்பகல் கொழும்பு இன்டர் கொன்டினெண்டல் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
01. ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பி சமாதானத்தை முறையாகப் பேணல் 02. ஊழல்,விரயங்களை முற்றாக இல்லாதொழித்தல் 03. நெருக்கமான உறவுகளைப் பேணி அனைத்து குடும்பங்களுக்கும் தேவையானவற்றை செய்தல் 04. வாழ்க்கைச் செலவை குறைத்தல் 05. நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் 06. சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தல் 07. பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் கௌரவமான நிலைமையைத் தோற்றுவித்தல் 08. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் 09. காத்திரமானதும் வினைத்திறன் மிக்கதுமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அடித்தளம் அமைத்தல் 10. நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தல்
மேற்கண்ட 10 அம்சங்களையும் அவற்றுக்கான விளங்கங்களையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் துரித மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளவுள்ள 7 படிமுறைகள் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
|