|
தமிழ்கைதிகள் விடுதலைக்கு நடவடிக்கை: புலம்பெயர் குழுவிற்கு ஜனாதிபதி உறுதி
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நெயல் நடேசன், சவுதி அரேபியாவிலிருந்து டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன், லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோhரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) மயில்வாகனம் சூரியசேகரம் (லண்டன்), சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்), இக்னேசியஸ் செல்லையா யோகநாதன் மனோரஞ்சன் (கனடா), முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த இந்த புத்திஜீவிகள் மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன், அதுதொடர்பாக நீண்டநேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.
இடம்பெயர்ந்த மகக்ளின் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்கு கிழக்கின் கல்வி, அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தாயகம் வந்துசெல்வதில் உள்ள சிக்கல்கள் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதிடன் கலந்துரையாடினர்.
தமிழர்களின் அதியுயர் பிரச்னையான இனப்பிரச்னைக்கு தீர்வுகாண்பது தொடர்பாகவும் கலந்துரையாடினர். சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
|