|
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ் முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
- ரவூப் ஹிக்கீம்
தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற மாபெரும் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடவும் அரசாங்கத்தின் காடைத்தனங்களிலிருந்து இவ்விரு சமூகங்களை பாதுகாத்துக் கொண்டும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியையும் முதலமைச்சர் ஆசனத்தையும் நாம் இந்த அரசாங்கத்திடம் இருந்து கைப்பற்றுவோம். இவ்வாறு ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட ஐ.தே.க. முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹிக்கீம் கிண்ணியாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
தொடர்ந்து பேசிய ரவூப் ஹக்கீம்; " முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்து சதிகளைச் செய்த ஹிஸ்புல்லா இறுதியாக எப்படி நயவஞ்சகத்தனமாக குத்துக் கரணமடித்தார் என்பதை நாம் இன்று இறுவட்டுகளாக (சீ.டி) வெளியிட்டுள்ளோம்.
தேர்தல் மேடைகளில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்களுக்கு படுமோசமான அநியாயங்களைச் செய்து விட்டது என்றும் இந்த அரசாங்கத்தோடு கூட்டுச் சேரவே முடியாது என்றும் பேசியவர்கள்தான் இன்று மகிந்த ராஜபக்ஷ முதலமைச்சர் பதவியை தரப்போகின்றார் என்று அபத்தமாக பேசி வருகின்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்தது சரியானதே என்றும் தலைவரின் பாதுகாப்புப் பறிக்கப்பட்டது என்றும் முதலைக் கண்ணீர் வடித்த ஹிஸ்புல்லா மரச்சின்னத்தைப் பறிகொடுத்து விட்டோம் என்றும் புலம்புகிறார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால்த் தான் வெல்லலாம் என்றும் மரச் சின்னத்தில் போட்டியிடுவது மடத்தனமானது என்றும் கூறிய ஹிஸ்புல்லா தான் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்குக் காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தை கைவிட்டமையே என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.
இத்தேர்தல் முடிந்த பிறகு ஹிஸ்புல்லாவை ஒரு வெளிநாட்டுத் தூதுவராகவாவது அனுப்புவது என்றும் அவருக்கான நெருக்கடிகளில் இருந்து அவுரை விடுவிப்பது என்றும் அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் அதற்காகத்தான் ஹிஸ்புல்லா எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றார் என்றும் வீரமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிள்ளையான் பேசியுள்ளார் என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி நிச்சயமாகி விட்டது என்பதால் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை இன்னும் இன்னும் தூண்டி விடுகின்ற முயற்சியையும் இன்று ஹெல உறுமய செய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது சின்னத்தை முஸ்லிம் காங்கிரஸுக்காக விட்டுத் தந்ததை நாம் மறந்து விடக் கூடாது. கடந்த தேர்தலில் கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் யானைச் சின்னம் போட்டியிடவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியினர் மரச்சின்னத்தில் போட்டியிடும் அங்கிகாரத்தை ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையில் வழங்கியிருந்தார்.
இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. நாம் மரச்சின்னத்தில் போட்டியிட முடியாது, யானைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று ஹிஸ்புல்லா சொல்லத்தக்கதாக நாம் இன்று எடுத்திருக்கின்ற முடிவை அவர் எப்படி விமர்சிக்க முடியும்.
நாம் எடுத்த இந்த முடிவு கட்சியின் சின்னத்தைப் பறி கொடுக்க எடுத்த முடிவு அல்ல இந்த இயக்கத்தைக் கட்டிக் கொடுத்த அத்தனை துரோகிகளுக்கும் பாடம் புகட்டுவதற்கு நாம் எடுத்த முடிவு என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.
தார்மீக அடிப்படையிலும் பத்திரிகை ஊடக அடிப்படையிலும் அரச ஊடகங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை சொல்வதற்கு வழியேற்படுத்தித் தரவில்லை எமக்கு நேரம் ஒதுக்காமலும் அழைப்பு விடுக்காமலும் தங்கள் தரப்பு அரசியல் வாதிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆடுகின்ற அரசியல் நாடகங்களை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர்" என்றார்.
|