|
இலங்கையில் மேற்கொண்டுவரும் நிவாரண மற்றும் போஷணை செயற்றிட்டங்களுக்கு ஜப்பான் உதவி
உலக உணவுத் திட்டம் இலங்கையில் மேற்கொண்டுவரும் நிவாரண மற்றும் போஷணை செயற்றிட்டங்களுக்கு உதவ ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக 4.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 5 ஆயிரத்து 500 தொன் அரிசியையும், 110 தொன் தகரத்தில் அடைக்கப்பட்ட மீனையும் உலக உணவுத் திட்டத்துக்கு விரைவில் ஜப்பான் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பினால் இலங்கையில் நிவாரண நடவடிக்கைகளுக்காக இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பற்றாக்குறை ஏற்படுமெனவும் எனவே நிவாரணத்தில் தங்கியுள்ள மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கொடையாளி நாடுகள் விரைந்து உதவ வேண்டுமென உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்தே இலங்கையில் உலக உணவுத் திட்டம் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளுக்கு உதவ உலக உணவுத் திட்டம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோஷி அராக்கி, அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பை நிவாரணப் பொருட்களில் தங்கியுள்ள மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக கவனம் செலுத்தியதையடுத்தே உலக உணவுத் திட்டம் இலங்கையில் மேற்கொள்ளும் செயற்றிட்டங்களுக்கு உதவ நாம் முடிவு செய்தோம். விரைவில் 5,500 தொன் அரிசி இலங்கையை வந்தடையும். உலக உணவுத் திட்டத்துக்கு உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம் என்றார்.
தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவித்த உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மொஹமட் சாலிஹீன் உலக உணவுத் திட்டம் 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ள நிவாரண செயற்றிட்டங்களுக்கு உத்தேசிக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக 36 மில்லியன் டொலர் தேவை ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினாலேயே இந்த நிலைமை தோன்றியுள்ளது.
பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், இடம்பெயர்ந்த மக்கள் உள்ளிட்ட 1 மில்லியன் மக்களுக்கு நாம் இங்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றோம். இந்த நிலையில் எமது கோரிக்கையை ஏற்று உதவ முன்வந்த ஜப்பான் அரசாங்கத்துக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உலக உணவுத் திட்டத்துக்கு மிக அதிகளவு நிதியுதவி வழங்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளமை குறிப்பிடத்தக்கது
|