|
Interview With Lakbima Comrd. Tilvin Silva On 04th May 2008
ம.வி.மு. அமைக்கவிருக்கும் தேசிய முன்னணிக்கு எந்த அரசியல் கட்சிகளும் சவாலாக இருக்கப்போவதில்லை.
லக்பிம|| பத்திரிகையுடனான நேர்காணல் -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா.
இம்முறை மே தினம் ம.வி.மு. வுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்குமல்லவா?
இம்முறை மாத்திரமல்ல எப்போதுமே மே மாதம் எமக்கு முக்கியமானதாகத்தான் இருக்கும். எமது கட்சியின் பலத்தையும், உழைக்கும் மக்களின் பலத்தையும் ஒருங்கிணைப்பதற்காக நாங்கள் மே தினத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றோம். அதேபோன்று, புதிய பயணமொன்றை மேற்கொள்ளவும், பாரிய வேலைத்திட்டமொன்றினை கட்டி யெழுப்புவதற்கான துணிவைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இந்த மேதினத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.இன்று உலக ஏகாதிபத்தியம் உடைந்து வீழ்ந்துக் கொண்டிருக்கிறது. இதனால் எமது நாடும் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். எமது நாடு இதற்காகத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. எனவே நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய பாரிய சக்தியொன்றைக் கட்டியெழுப்ப நாம் தயாராகி வருகிறோம்.
மக்கள் விடுதலை முன்னணி எப்போதுமே கவர்ச்சிகரமான ஊர்வலங்களையும் கூட்டங்களையுமே எப்போதும் நடத்தும். ஆனால், இம்முறை அவ்வாறான ஒன்று நடைபெறாதற்கான காரணம் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியா?
இல்லை, கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் கூட அவ்வாறு கூறமுடியும். ஊர்வலத்தை நடத்தாமல் கட்சியின் மே தினக்கூட்டத்தை மாத்திரம் நடத்துவதாக, கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் இருக்கும் போதே தீர்மானிக்கப்பட்டது.சில காரணங்களை முன்வைத்தே நாம் மே தின ஊர்வலத்தை நடத்தவில்லை. முதலாவதாக கிழக்கு மாகாணத் தேர்தல் பெரும்பாலான எமது செயல் உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத் தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்றது தற்போதைய பாதுகாப்பு நிலைமை.
நாளுக்கு நாள் மக்கள் பல பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பது தெரிகிறது. அதிகரித்துவரும் விலைவாசியின் முன்னிலையில் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் வேலைத் திட்டமென்ன?
ஏகாதிபத்தியத்துக்கு, பிரிவினைவாதத்துக்கு, கொள்ளைக்கார பொருளாதாரத்துக்கு எதிரான மே தினம்|| என்பதே எமது தொனிப்பொருளாக இருந்தது. எமது நாட்டின் பிரதான உணவு சோறு. ஆகவே, அதற்காகக் குறைந்தவில்லையில் முறையாக அரிசியை வழங்க முடியாத அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது. தேசிய பொருளாதாரத்துக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அரசாங்கமொன்றை அமைப்பதே எமது நோக்கம். நாம் அதற்காகவே செயல்பட்டுவருகிறோம்.
இந்தச் சக்தி எப்போது மேடையேறப்போகிறது?
இவை அவசரமாகக் கட்டியெழுப்பக்கூடிய சக்திகள் அல்ல. சில சந்தர்ப்பவாதிகளைச் சேர்த்துக் கொண்டு முன்னணியை அமைக்க எங்களாலும் முடியும்.இந்த முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான கருத்தாடல்களில் நாம் ஈடுபட்டு வருகிறோம். முதன் முதலாக நாம் மக்களை அறிவுறுத்தினோம். விசேட பிரமுகர்களை அறிவுறுத்தினோம். கொள்கை வகுக்கும் குழுவொன்றை ஏற்படுத்தினோம். பத்திரிகை அறிவித்தல்கள் ஊடாக மக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டிருந்தோம். எனவே வந்து சேரும் ஆலோசனைகளுக்கு ஏற்ப, அவற்றைக் கவனத்திலெடுத்து பலமான வேலைத்திட்டமொன்றை அமைப்போம்.பாரிய வேலைத்திட்டமொன்றுக்கு மக்கள் விடுதலை முன்னணி சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமக்குப் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
ம.வி.மு அமைக்கப் போகும் முன்னணியில் இந்நாட்டில் ஏனைய கட்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாதா?
இது பல அரசியல் கட்சிகளைக் கொண்டு அமைக்கப்படும் கட்சியல்லவென நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதற்கு முன்னர் தேர்தல் நெருங்கும்போது கட்சிகள் சேர்த்து முன்னணிகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் கொள்கை வேறுபாடுகள் காரணமாக அவைகள் பிரிந்து சென்றன.நாம் அவ்வாறான முன்னணியை அமைக்கப்போவதில்லை. இந்நாட்டு உழைக்கும் மக்கள், விவசாயிகள், நிபுணர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரைக் கொண்ட உண்மையான முன்னணியையே அமைப்போம். அரசியல் கட்சிகளில் செயல்பட்டு, அதனால் விரக்தியுற்றிருக்கும் நபர்களும் இந்த முன்னணியில் இணைந்துக் கொள்ளலாம். கட்சித்தலைவர்களைக் கொண்ட முன்னணியொன்றை நாம் அமைக்கப்போவதில்லை.
தேசாபிமானிகளின் ஒன்று சேர்தலின் பின்னர், முன்னணியொன்றை அமைக்கத் தயாராகும் போது உமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சிக்குச் சவாலாக இருக்கின்றனர். இது உங்களுக்குத் தடையாக இருக்காதா?
இல்லை ஒருபோதும் இல்லை. ஒரே பார்வையில் பா.உ. 10 பேராகத் தெரிந்த போதிலும் அது எமக்குத்தாக்கத்தை ஏற்படுத்துவதாக நாம் கருதவில்லை. எமக்கிருக்கும் மக்கள் ஒத்துழைப்பைப் பார்க்கும்போது அது அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை.கட்சியென்ற வகையில் நாம் எடுக்கும் அனைத்து அரசியல் உபாய மார்க்கங்களின் போதும், அனைவரும் ஒரே சக்தியாகச் செயல்பட வேண்டும். அப்போது தான் அவற்றைச் செயற்படுத்த முடியும். அதற்குப் பதிலாக தடை ஏற்படுத்துவதாயிருந்தால், ஒவ்வொருபக்கத்துக்கு இழுப்பதாயிருந்தால், அவர்களால் எமக்குப் பிரயோஜனமில்லை. இப்போது இந்தத் தடைகள் நீக்கப்பட்டு பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம்.பல்வேறு ஒப்பந்தங்களைப் பொறுப்பேற்றவர்கள் இருந்தவரை, பல்வேறு துஷ்டச்சக்திகளோடு சேர்த்து எமது பயணத்துக்கு தடைபோடுபவர்கள் இருந்தவரை ஓரளவு தடைகள் ஏற்பட்டன. இப்போது அந்தத் தடைகள் நீங்கி விட்டன.
விமல் குழுவினரும், நந்தன குணதிலக மற்றும் கமல் தேசப்பிரிய போன்ற முன்னால் ம.வி.மு. லிருந்து பிரிந்து சென்றவர்களையும் சேர்த்துக் கொண்டு புதிய முன்னணியொன்றை அமைக்கப்போகிறார்கள்...? இந்த புதிய முன்னணி ம.வி.மு க்கு தடையாக இருக்காதா?
அவர்களுடைய நிலைமைகளைத் தெரிந்தவர்கள் எங்களை விட யாருமில்லை. கமல் தேசப்பிரிய கட்சியிலிருந்து வெளியேறி 13 வருடங்களாகின்றன. இவர்களெல்லோரும் சேர்ந்து முன்னணி அமைத்துக் கொள்வதனால் நாம் பயப்படப் போவதில்லை. சிலபேரால் அவ்வாறு அமைத்துக் கொள்ளப்படும் கட்சிகள் நிலைப்பதில்லை. தாம் எதிர்ப்பார்ப்பவற்றைப் பெற்றுக் கொண்டவுடனேயே அவைகள் காலாவதியாகிவிடும். இதற்கு முன்னரும் கூட மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறிய சிலர் ~~ஜன விமுக்தி சகயோகிதா பெரமுன என்ற ஒன்றை அமைத்தார்கள். அதற்கு என்ன நடந்தது. அடுத்ததாக மேலும் சிலர் 1983ல் மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தோற்றம|| என்ற பெயரில் ஒன்றை அமைத்தனர். இவைகளுக்கு என்ன நடந்தன. ஆகையால் முன்னரைப் போன்றே நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. வருங்காலத்திலும் எமக்கெதிராக சூழ்ச்சிகள், காட்டிக் கொடுப்புக்கள் போன்றவை நடக்கும். அதனால் கிடைக்கும் லாபங்களைப் பெற்றுக் கொண்டு ஒதுங்கி விடுவார்கள். முன்னணியின் பயணத்தைத் தடுத்துவிட முடியாது.
நந்தன குணதிலக மற்றும் விமல் வீரவன்ஸ போன்ற பிரபல தலைவர்களை உங்கள் கட்சியே உருவாக்கியது. கட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அவர்களை இலகுவாகக் கருதக்கூடாதல்லவா?
இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டது நல்லது தான். அவ்வாறன பிரபல தலைவர்களை நாங்கள் உருவாக்கினோம். மேலும் பல பிரபல தலைவர்களை எம்மால் உருவாக்க முடியும். அவ்வாறான ஆற்றலைக் கொண்டது தான் எமது கட்சி. உலகில் ஒன்று இல்லாமல் எதுவுமே நடக்காது என்று கூறப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். கட்டாயமாக இருக்க வேண்டிய மனிதர்கள் இருக்கவேண்டுமென்றால் அவர்கள் மறைந்த பிறகு அரசியல் இயக்கங்களும் அழிந்திருக்க வேண்டும்.எமது கட்சியின் ஸ்தாபகர் தோழர் ரோஹண விஜேவீர உள்ளிட்ட அனைவருமே கொலை செய்யப்பட்டு ஒருவர் மாத்திரம் தப்பித்துக் கொண்டார். அப்படியிருந்தும் இந்தக் கட்சி முன்னேற்றமடைந்தது. புதிய தலைவர்கள் உருவாக்கப்பட்டனர். அப்படியிருக்கும்போது, விமலினதும், நந்தனவினதும் வெளியேற்றமோ, புதிய முன்னணியின் தோற்றமோ எங்களுக்குப் பிரச்சினையாக இருக்காது. அவர்களது இருப்புக்காக அவர்கள் ஏதாவது செய்தாக வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினரின் விமல் வீரவன்ச பின்னால் பாரிய சக்தியொன்று இல்லை யென்று கூறுகிறீர்களா?
பாரிய சக்தியொன்று இருந்திருக்குமேயானால், 8ம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கையை வெளியிட்டு, வெளியேறிய பின்னர் எவ்வளவு பெரிய சக்தியொன்று அவர் பின்னால் சென்றிருக்க வேண்டும்? அவருடைய அறிக்கையின் பின்னர், நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பெருமளவான மக்கள் பஸ்களில் ஏறி வந்து அவரோடு உரையாடுவார்கள் என அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்றுமே நடக்கவில்லையே.அதனால் தான் ஊடகச் சந்திப்பை நடாத்திக் கொண்டு நடமாடித் திரிகிறார், அறிக்கைகளை வெளியிடுகிறார். அவர்கள் இல்லாத ம.வி.மு. எவ்வளவு பலம் வாய்ந்ததென்பதை கட்சி மாநாட்டின் போது நாம் நிரூபித்துக் காட்டுவோம்.
பேச்சு வார்த்தைக்காக விமல் பிரிவினர் வழங்கிய கடைசித் திகதி மே 1ம் திகதி. ஆனால், பேச்சு வார்த்தைக்காக விமலுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை.?
எமக்கு இறுதி நாளென்று ஒன்று இல்லை. தோழர் விமலுக்கு எதிராக மத்தியக்குழு முன்னிலையில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. அது விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதுதான். அவற்றுக்குப் பதிலளிக்காமல் விலகிச் சென்றார்.தற்போது விமல் செய்ய வேண்டியது என்னவென்றால், விலகி விலகிச் செல்லாமல் எங்களைச் சந்தித்து, குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து விட்டு, அவருக்குத் தெரிந்த செய்திகளையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும்.ஆனால் அவர் அவ்வாறு செய்ய மாட்டார். எமக்கு நாள் குறிப்பிட்டு விட்டு, அவருக்கெதிரான குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பிக்க அவர் முயற்சி செய்கிறார் அவரது வெளியேற்றம் நியாயமானது என காட்ட முயற்சி செய்கிறார்.|| நான் திகதியொன்றைக் கேட்டேன் தரவில்லை, எனவே நான் கட்சியொன்றை ஆரம்பித்துவிட்டேன் என அடுத்ததாக அவர் நாட்டுக்குக் கூறக்கூடும்.நாம் கூறுவது என்னவென்றால், புதிய கட்சியொன்றை அமைத்துக் கொள்வதாயிருந்தால் அமைத்துக் கொள்ளுங்கள். அவற்றில் எம்மை சிக்கவைக்காதீர்கள். நல்ல நோக்கத்தோடு, நேர்மையாக இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டுமாயிருந்தால் பெலவத்தை எமது அலுவலகத்துக்கு வாருங்கள். கதவுகள் திறந்தே இருக்கின்றன.
ம.வி.மு. மற்றும் விமல் குழுவினர் ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தைக்காக அழைப்பு விடுப்பது நல்லெண்ணத்துடன் அல்லவென கூறப்படுகிறது. இரு சாராருக்குமிடையில் பசுமை யுத்தமொன்றை நடாத்திக் கொண்டு பேச்சு வார்த்தைக்காக அழைப்பு விடுக்கப்படுகிறது?
விமல் கூறுவதற்ககேற்ப, கட்சி நடவடிக்கைகளிலிருந்து அவர் விலகியிருந்தது மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து. என்றாலும் விமலைப் பற்றிய எதையுமே நாம் ஊடகங்களிடம் கூறவில்லை. ஆனால் இந்நாட்டு ஊடகங்களுக்கு அவர் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதன் விளைவாகத்தான் ~~தேசிய மட்டத்திலான அழைப்பொன்றின் தலைவரொருவருக்கெதிராக களங்கமேற்படுத்த சூழ்ச்சியொன்று இருப்பதாக|| வாராந்தரப் பத்திரிகையொன்றில் செய்தி வந்தது. மேலுமொரு பத்திரிகையில் ~~மகாராஜாவின் தேவைக்கேற்ப ம.வி.மு. தலைவரொருவரை விரட்ட சதி|| நடப்பதாகச் செய்தி வந்தது. ஊடகங்களுக்கு எதிரில் வந்து விமல் அறிக்கைகள் வெளியிடும் வரை நாம் மௌனமாகவே இருந்தோம். அதன் பின்னர் தான் கட்சியென்ற வகையில் சில செய்திகளை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது.விமலுக்கு எதிராக இருக்கும் குற்றச் சாட்டுக்களை நாம் இதுவரை மக்கள் முன்வைக்கவில்லை. இவற்றைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே நாம் தொடர்ந்தும் முயற்சி செய்கிறோம்.
அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால் இரவிரவாக ஐ.தே.க தலைவர்களைச் சந்திக்கும் சிலரைக் கட்சியிலிருந்து வெளியேற்றுமாறு அவர் கூறுகிறார்?.
ம.வி.மு. யின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் பொறுப்புடன் கூறுகிறேன். இரவில் மாத்திரமல்ல பகல் நேரங்களில் கூட ஐ.தே.க தலைவர்களைச் சந்திக்கும் நபர்கள் ம.வி.மு. வில் இல்லை.இது தொடர்பாக மத்தியக் குழுவில் கூறவேண்டிய சந்தர்ப்பங்கள் விமலுக்கு இருந்தன. என்றாலும் அவர் அவ்வாறு கூறவில்லை. குற்றஞ்சாட்டவில்லை. இன்று கூட கூறுவதில்லை.
ஆனால், அந்த நபர்கள் நடத்திய பேச்சுக்களை சாட்சியோடு நிரூபிக்க விமல் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். புகைப்படங்கள் கூட அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார்.
சமர்ப்பிக்கச் சொல்லுங்கள். அதைப் பற்றிய விசாரணைகளை நடத்த அப்போது எம்மால் முடியும். இதன் மூலம், அவருக்கெதிரான குற்றச் சாட்டுக்களைத் திசை திருப்ப முயற்சி செய்கிறார். அது சிறு பிள்ளைத் தனமான முயற்சி. தனக்கெதிராக இருக்கும் பாரதூரமான குற்றச் சாட்டுக்களுக்கு பதிலளிப்பதை விட்டு விட்டு மற்றவர்களுக்கெதிராக பலவீனமானதும், சிறு பிள்ளைத்தனமானதுமான குற்றச்சாட்டுக்களைத் தொடுக்க முயற்சி செய்கிறார். இறுதியாகச் சொல்ல வேண்டிய தென்னவென்றால், மற்றவர்களுக்காக வேலை செய்யக்கூடியவர்கள் இப்போது எமது கட்சியில் இல்லை என்பதே.
|