|
இரண்டு கனவுகளின் போர் முடிந்தபின் இலங்கைத் தீவின் தலைவிதி எப்படி அமையப் போகிறது? ;
-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
நம்முடைய நினைவுகள் முக்கியமானவையா? அல்லது எங்களுடைய கனவுகள் முக்கியமானவையா? என்று ஒரு நண்பர் கேட்டார். இந்தக் கேள்விக்கு உடனடியாக என்ன பதிலைச் சொல்லலாம்? இலங்கைத் தீவின் இனப்பிரச்சினை, அதற்கான தீர்வு, அதற்குரிய வழிமுறைகள், இலங்கையின் எதிர்காலம், தமிழ் பேசும் மக்களின் நிகழ்கால - எதிர்கால வாழ்க்கை போன்ற முக்கியமான பல விசயங்கள் இந்த நினைவுக்கும் கனவுக்குமிடையில் தங்கியிருக்கின்றன. அதேவேளை இந்த நினைவுகளாலும் கனவுகளாலும்தான் இலங்கையே இரத்தக்களரியாகியது. இன்னும் இருதுருவ நிலைப்பட்டு தமிழ் - சிங்கள இனங்கள் இருப்பதற்கும் இந்த நினைவுகளும் கனவுகளும்தான் காரணம். இப்போது நடந்து முடிந்துள்ள (26.01.2010) ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளும் துருவ நிலைப்பட்டே இரண்டு இனங்களும் இருக்கின்றன என்பதையும் காட்டுகின்றன. இது அமைதிக்கான புள்ளி இன்னும் மிகத் தொலைவிலேயே இருக்கிறது என்பதையே உணர்;த்துகின்றது.
அதற்காக உலகில் அமைதியாகவும் சமாதானமாகவும் உடன்பாடுகளோடும் வாழ்கின்ற ஏனைய மக்களுக்கு இந்தமாதிரி நினைவுகளும் கனவுகளும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கும் இதெல்லாம் இருக்கின்றனதான். ஆனால், அதை அவர்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள், அதையெல்லாம் அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகவே இருக்கிறது, அவர்களுடைய மகிழ்ச்சியும் அடையாளங்களும் சிறப்பும் நிகழ்காலமும் எதிர்காலமும்.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் இருக்கின்ற வேற்றுமைகளை விடவும் ஒற்றுமைகள் அதிகம். குறிப்பாக இரண்டு இனத்தவர்களும் தங்களைப் பற்றிய அதீதமான வரலாற்றுக் கற்பனைகளையுடையவர்கள். அந்த வரலாற்றுக் கற்பிதங்கள்தான் அவர்களுக்கிடையே இருக்கின்ற இன முரண்பாடுகளுக்கும் காரணம். இந்தக் கற்பிதங்களே இரண்டு இனங்களின் அழிவுகளையும் தொடரும் பிரச்சினைகளையும் உற்பத்தி செய்கின்றன. இந்தக் கற்பிதங்களை இந்த இரண்டு இனத்தவர்களும் கடக்க விரும்புவதுமில்லை. இவர்கள் இந்தக் கற்பிதங்களுக்குள் கிடந்து சுழல்வதையே விரும்புகின்றனர். இந்தக் கற்பிதங்களின் அடிப்படையானது மேலே சொல்லப்பட்ட நினைவுளதும் கனவுகளதும் கலவையே. மிகச் சிறப்புடைய வரலாற்றையுடையவர்கள் தாங்கள் எனச் சிங்களவர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்கள் மகாவம்சத்தை ஆதரமாகக் கொள்கின்றனர். தங்களின் இனத்தனித்துவம் மிகத் தொன்மையானது எனவும் அது தனிச்சிறப்புடையது எனவும் தமிழர்கள் கருதுகிறார்கள். எனவே இந்த நிலையில் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இது நினைவுகளின் பாரமாகும். இலங்கையைப் பொறுத்து இது ஒரு சிலுவைதான்.
இதைப்போலவே இந்த இரண்டு தரப்பினதும் கனவுகளும் இருக்கின்றன. தமிழர்களுக்கு தனிநாடு கனவு. சிங்களவர்களுக்கு சிங்களமயமாகிய இலங்கை கனவு. இந்த இரண்டு கனவுகளின் போர்தான் இதுவரை நடந்து கொண்டிருப்பதும் இப்போது நடந்து கொண்டிருப்பதுமாகும். தேர்தல்களில், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் இந்தக் கனவு கூரொளிரும் வாள்களாக அரங்கில் சுழன்று கொள்ளும். இந்த நினைவையும் கனவையும் அவற்றின் ஒளிமங்கா நிலையில், இரண்டு தரப்பிலும் இந்த இரண்டு தரப்பின் ஆளும் சக்திகள் - அதிகாரத் தரப்புகள் - பராமரித்து வருகின்றன. உண்மையில் இந்தக் கனவுகளால் அழிந்து கொண்டிருப்பது இலங்கைத் தீவிலிருக்கும் சாதாரண மக்கள்தான். இந்த ஆளும் வர்க்கங்கள் தனியே அரசியல்வாதிகள் மட்டும்தான் என்று யாரும் குறுகலாக எண்ணிவிட வேண்டாம். இதில் ஊடகங்களுக்கும் பெரும் பங்குண்டு. இந்த ஊடகங்களை நடத்தி வருகின்றவை பெரும்பாலும் பெரிய நிறுவனங்களே. மக்கள் தரப்பினால் நடத்தப்படும் ஊடகங்கள் எப்போதும் இரண்டு இனங்களுக்கும் இடையிலான ஐக்கியத்தைப் பற்றி, நிலையான சமாதானத்தைப் பற்றி எழுதியும் விவாதித்தும் வருகின்றன. தமிழில் திசை, சரிநிகர், ஆதவன் போன்ற பத்திரிகைகள் இதற்கு உதாரணம். சிங்களத்தில் ராவய, ஹிரு போன்றவை உண்டு. ஆங்கிலத்தில் சற்றடே றிவியூ போன்ற ஒரு சில.
இந்த நினைவுகளையும் கனவுகளையும் அடிப்படையாக வைத்து மிகப் பலமாக ஒரு பகைமை உளவியல் இலங்கையில் உருவாக்கி வளர்க்கப்பட்டுள்ளது. இந்த உளவியலைப் பராமரிக்கும் பெரும் பணிதான் இலங்கையின் ஊடகத்துறையும் மைய அரசியலுமாகும். எனவேதான் இந்தக் கனவும் நினைவும் பராமரிக்கப்படுகிறது. இதை தனியே உள்நாட்டுச் சக்திகள் மட்டும் செய்யவில்லை. சர்வதேச, பிராந்திய சக்திகளும் இந்த அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகையதொரு பின்னணியில் இருக்கும் இலங்கைத் தீவில், நீண்ட பெரும் இனப் போருக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தல் நடந்திருக்கிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்திருக்கின்றன. அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் சிறுபான்மை மக்களின் அரசியற் பலத்தை பலவீனப்படுத்தியுள்ளது. பெரும்பான்மை மக்களின் ஆதரவை மட்டும் பெற்றுக் கொண்டால் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற ஒரு மோசமான முன்னுதாரணத்தை இந்தத் தேர்தல் உருவாக்கியுள்ளது. இதனால், இனிவரும் தேர்தல்களில் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் முயற்சிகளே அதிகரிக்கப் போகின்றன. இது சிங்கள மக்களின் கனவையும் அவர்களுடைய நினைவையும் கூர் தீட்டுகிற முயற்சியாகவே இருக்கப் போகிறது. பச்சை இனவாதம் தலை தூக்கக் கூடிய சந்தர்ப்பமே அதிகமாகத் தென்படுகிறது. இதற்குப் போட்டியாக தமிழரசுக் கட்சி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் அமைகின்றன. தமிழரசுக் கட்சின் இந்த முயற்சிக்கு வரவேற்பளிப்பதைப் போல யாழ்ப்பாணத்தின் பத்திரிகைளும் பல புலம் பெயர்ந்தோரின் இணையத்தளங்களும் புளகாங்கிதத்துடன் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஆக, ஏட்டிக்குப் போட்டியான நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இந்தப் போட்டியில் எப்போதும் அதிக பலத்தோடும் விவேகத்துடனும் இருப்பது சிங்களத்தரப்பு. எனவே அதற்கு இந்தப் போட்டியில் வெற்றியே கிடைக்கும். சேதங்கள், சிதைவுகள் அதற்குக் குறைவாகும். ஆனால்;, தமிழ்த்தரப்போ எத்தகைய விவேகமும் வேகமும் அற்ற, வெறும் வாய்ப் பேச்சையே மட்டும் கொண்டது. அதனால், அதற்கே அழிவுகள், பாதிப்புகள் அதிகமாகும்.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உருவாகிய நிலைமையை தமிழ்பேசும் தரப்பு கையாளும் விதத்துக்கும் சிங்களத் தரப்புக் கையாளும் விதத்துக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை அவதானிப்போருக்கு இந்த உண்மைகள் புரியும். தமிழ்த்தரப்பு எந்தப் புதிய அரசியல் உபாயங்களுமில்லாமல் அதே பழைய பாணியிலான பிரகடனங்களுடன் தன்னுடைய அரசியலை முன்னெடுக்கிறது. இனவாதமேஅதற்கு முதலீடு என்பதால் இதைச் செய்வதைத் தவிர அதற்கு வேறு மார்க்கமில்லை. சற்று மாறுதலாக திரு. டக்ளஸ் தேவானந்தா ஒரு மெல்லிய பாதையை உருவாக்க முனைகிறார் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் அதிலும் போதாக்குறைகள் இருக்கின்றன. கூட்டமைப்பிலிருந்தும் அதற்கு வெளியிலிருந்தும் ஏனைய அரசியற் கட்சிகளிலிருந்தும் ஒரு புதிய அணி மூன்றாம் அணியாக உருவாகுவதை பலரும் விரும்பும் போக்கும் உண்டு. ஆனால் அதற்கான காலம் கனிந்துள்ளதா என்று கேட்போரும் உளர். எப்படியோ துலக்கமான சமிக்ஞைகளைக் காணக்கூடிய பேருபாயங்கள் இப்போதைக்கு எவரிடமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய உண்மை.
இதேவேளை இத்தகைய இனமுரண் அரசியற் பிரச்சினையில் அரசியல் தீர்வு என்ற முக்கியமான விசயம் எப்படி அமையப் போகிறது? நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு, புனர்வாழ்வு, மீள்கட்டுமானம், அகதிகள் பிரச்சினை எல்லாம் எப்படி அமையப் போகின்றன என்ற கேள்வி பலருக்கும் எழும். எல்லாமே நெருக்கடிக்குள்தான் சிக்கப் போகின்றன.
இப்போது அதிகாரத்துக்கு மீண்டும் வந்திருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஒரு தீர்மானகரமான சக்தி. எதையும் செய்து முடிக்கக்கூடிய ஆளுமையுடையவர். ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் உடைத்து நொறுக்கப்பட்டிருந்த சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பி, பின்னர் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை தானே எடுத்திருப்பவர். இதற்காக அவர் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. யாராலும் கற்பனையே செய்து பார்த்திராத வகையில் புலிகளுடனான போரை முடிவுக்குக் nhகண்டு வந்தவர். அதாவது இலங்கைத் தீவில் இனி அரசியல் படுகொலைகள் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் திரு. ராஜபக்ச என்று சிலர் சொல்லுமளவுக்கு நடவடிக்கையை மேற்கொண்டவர். இவையெல்லாம் திரு. மகிந்த ராஜபக்ஜவைப் பற்றிச் சொல்லப்படுகின்ற விசயங்களின் ஒரு பகுதி. மறுபகுதி அவர மீதான ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். குடும்ப ஆதிக்கம், ஊழல் நிரம்பிய நிர்வாகம், ஜனநாயக விரோதப் போக்கு, சிறுபான்மை மக்களின் அரசியல் தீர்வு பற்றிய சிந்தனை அற்றிருக்கின்றமை என்று அவரின் மைனஸான பகுதியைச் சிலர் சுட்டுகின்றனர.
எனினும் இவையெல்லாவற்றையும் கடந்து திரு. மகிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளார். ஒரு இன மக்களின் பேராதரவுடன் அவர் பெற்ற வெற்றி அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கவனத்தை சிங்கள மக்களின் பக்கமே திருப்பப் போகிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தலும் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு பெரும் சவால்தான். இதேவேளை சர்வ தேச அரசியலில் இலங்கையின் முக்கியத்துவம் எப்போதையும்போல செழிப்பாகவே இருக்கப்போகிறது. போரின்போது இலங்கைக்கு ஏற்பட்ட தேவைகளுக்காக அது சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிடம் சென்றபோது அதைத் தடுப்பதற்காக இந்தியா, யப்பான் மற்றும் மேற்குலகம் ஆதரவளித்ததைப் போல இனிவரும் நாட்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவும் புனர்வாழ்வுக்காகவும் இது இன்னொரு தந்திரோபாயத்தைக் கையாளப் போகிறது. சிங்கள ராஜதந்திரத்தை மிக லாவகமாகக் கையாள்வதில், அல்லது அதனுடைய நிகழ்ச்சி நிரலின்படி கெட்டித்தனமாக காரியமாற்றுவதில் மகிந்த ராஜபக்ஸ வெற்றிபற்றவர்.
ஆனால், அவரைச் சுற்றியுள்ள பல பிரச்சினைகள், குற்றச்சாட்டுகளை எல்லாம் கவனத்திற் கொள்ளாமல், அவற்றுக்கு தீர்வுகளைக் காணாமல் அவவரால் நிம்மதியாக இருக்க முடியாது. அவர் நிம்மதியாக இருக்க முடியாது என்றால் நாடும் நிம்மதியாக இருக்கமுடியாது. காரணம் அவர் ஜனாதிபதி. அவருடைய ஆட்சிக்கு நெருக்கடி என்பது நாட்டில் குழப்ப நிலை முற்றியதாகவே இருக்கும். இதற்கு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் ஒரு முக்கிய பங்காயிருந்தால்தான் அதிக சாத்தியமுண்டு. ஆனால், ஜே.வி.பி இன்றிருக்கின்ற நிலைமையில் அதனால் மக்களை தெருவிலிறக்கிப் போராடவோ அணி திரளவோ முடியாது என்கின்றனர் சிலர். இதேநிலைமைதான் ஐ.தே.கவுக்கும். ஆனால் இவற்றால் தெருவில் இறங்கிப் போராடாமல் இருக்க முடியாது.
|