|
இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் தடுமாற்றத்தை டி. ராஜாவின் பேச்சு பிரதிபலிக்கின்றது.
- சாரு மகிந்தா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 20வது தேசிய மாநாடு ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இம்மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து ஜே.வி.பியும் அழைக்கப்பட்டு, அதன் பிரதிநிதிகளும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். அதேவேளையில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ள இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) 19 வது தேசிய மாநாட்டுக்கு இம்முறை ஜே.வி.பி அழைக்கப்படவில்லை. அதற்கு காரணம் தன்னை ஒரு மார்க்சிச கட்சியாக சொல்லிக்கொள்ளும் ஜே.வி.பி அந்த கோட்பாடுகளுக்கு மாறான வகையில் இலங்கையில் தமிழ்மக்களின் நியாயமான தேசிய இனக் கோரிக்கைகளை சிங்கள குறுந்தேசியவாத அடிப்படையில் எதிர்த்து வருவதே என அக்கட்சியின் தலைவர் ஒருவர் விளக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியும் (CPI) , மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI-M) இருவேறு கட்சிகளாக செயற்பட்டு வருவதற்கு இப்படியான முரண்பாட்டு நிலைப்பட்ட நூற்றுக்கணக்கான காரணங்கள் உண்டு. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இம்முரண்பாட்டு நிலை மேலும் பல உதாரணங்களால் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது. ஒரு பக்கத்தில் சிங்கள தேசியவாதத்தை தூக்கிப் பிடிக்கும் ஜே.வி.பியை தனது மாநாட்டுக்கு அழைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுபக்கத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உணர்ச்சிகரமான நிலைப்பாட்டையும் எடுத்து வருகின்றது.
அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட வெளியுறவுக் கொள்கை சம்பந்தமான அறிக்கை மீது மாநிலங்கள் அவையில் (ராஜ்ய சபா) உரை நிகழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் . கட்சி தேசியச் செயலர் டி. ராஜாவின் கூற்றுகள் இதற்குச் சான்றாகும்.. அங்கு பேசிய ராஜா இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவிப்பது போலவும் அதற்கு இந்திய அரசு ஆயுதங்கள், பயிற்சிகள் வழங்கி உதவி அளிப்பது போலவும் குற்றம் சாட்டினார். அத்துடன் இலங்கை கடற்படை வேண்டுமென்றே தமிழக மீனவர்களை சுட்டுக் கொலை செய்கின்றது எனவும் கச்சதீவை இந்தியா மீளப் பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றது எனவும் எனவே இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்பட வேண்டும் என்ற தோரணையிலும் உரையாற்றினார். அத்துடன் ஹைதராபாத்தில்நடந்த அவர்களது 20 வது தேசிய மாநாட்டிலும் இதே அடிப்படையில் சில தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. புலிகளின் தமிழக பினாமிகளான வை.கோபாலசாமி, எஸ்.இராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன், வீரமணி போன்றவர்களே வழமையாக இவ்வாறான உரைகளை நிகழ்த்துவது வழக்கம். இம்முறை அந்த வரிசையில் கம்யூனிஸ்ட் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் டி. ராஜாவும் இடம் பெற்றிருப்பது தான் சற்றுக் கவலையானதும் ஆச்சரியமானதுமான விடயம். ஏனெனில் மிக அருகிலுள்ள ஒரு நாட்டில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற விபரத்தை ஓரளவு மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து வைத்திருக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அது ஏன் இயலாமல் போனது என்பது ஆச்சரியமானதே. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியினர்க்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ‘இந்து’ பத்திரிகை ஆசிரியர் என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ போன்றவர்களுக்கும் புரிந்த விடயம் டி.ராஜாவுக்கு ஏன் புரியவில்லை? இலங்கையில், உலகிலேயே மிகமோசமான பாசிச புலிகள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது என்பதும் அதற்கு எதிராக அந்நாட்டு மக்களும் அரசும் 25 வருடங்களாகப் போராடி வருகின்றனர் என்பதும் இந்தியக் கம்யூனிஸ்ட் டுகளுக்குப் புரியவில்லையா? பாசிச பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள இந்த புலிகள் இயக்கத்தை உருவாக்கி விட்டவர்கள் இந்திரகாந்தி மற்றும் ராஜிவ்காந்தி தலைமை தாங்கிய இந்திய அரசும் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகவிருந்த தமிழ்நாட்டு அரசும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்களா? கடைசியில் ‘வளர்த்தகடா மார்பில் பாய்ந்த’ கதையாக புலிகள் மாறிய பின், மத்தியஸ்தம் செய்யவந்த இந்திய அமைதிகாக்கும் படையுடன் புலிகள் போரிட்டதுமல்லாமல், அந்நாட்டின் பிரதமராகவிருந்த ராஜீவ் காந்தியையும் கொலை செய்தது அதற்குள் நினைவிலிருந்து அகன்றுவிட்டதா? எல்லாவிதமான சமாதான பேச்சுவார்த்தைகளையும் குழப்பி யுத்தத்தையே தொடர்ந்து முன்னெடுத்துவரும் பலிகளை ஆயுத பலம்கொண்டு அடக்காமல் இலங்கை அரசு கையைக் கட்டிக் கொண்டு சும்மா பார்த்திருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்டுகள் எதிர்பார்க்கின்றனரா?
யுத்தம் ஒன்று நடைபெறுகையில், அதுவும் புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகக் கொண்டு செயற்படுகையில் சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களும் பாதிப்படைவது உண்மைதான். யுத்தத்தின் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி வேண்டுவது நியாயமானதே. ஆனால் அதைவிடுத்து இலங்கையில் அரசாங்கம் போரிடுவது அப்பாவித் தமிழ் பொதுமக்களுடன் என்பதாக டி. ராஜா பேசுவது சுத்த பித்தலாட்டமேயன்றி வேறல்ல. உண்மை என்னவென்றால் புலிகள் தான் அப்பாவி பொதுமக்களை பள்ளிவாசல்களிலும் விகாரைகளிலும் பஸ்களிலும், பஸ் நிலையங்களிலும், பொது இடங்களிலும் கொன்று வருகின்றனர் என்பதே. ஒரு பக்கத்தில் அமெரிக்காவிடமும் இஸ்ரேலிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்கக்கூடாது எனக் கூச்சலிடும் ராஜா போன்றவர்கள், மறுபக்கத்தில் இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாது என்கின்றனர். இலங்கையில் மக்களால் ஜனநாயக வழிமுறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசுக்கெதிராக, பிரிவினைக்காதரவாக மிலேச்சத்தனமாக செயற்படும் ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஒடுக்குவதற்கு ஜனநாயகம் பேசும் அண்டை நாடான இந்தியா உதவவில்லையென்றால் வேறு யார் உதவுவது? அதுவும் இந்தியாவால் தவறான நெறிமுறையில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை ஒடுக்குவதற்கு உதவுவது இந்தியாவின் தார்மீகக் கடமையல்லவா? இலங்கை அரசு அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதாக ராஜா குற்றம் சாட்டுகின்றார். இலங்கை ஒரு சுதந்திரமும் சுயாதிபத்தியமும் உள்ள நாடு என்ற வகையில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவு பூண உரிமை உண்டு. எனினும் இன்றைய இந்திய அரசோ அல்லது இதற்கு முன்னைய வாஜ்பாயின் இந்திய அரசோ அமெரிக்காவுடன் கூடிக் குலாவிய அளவுக்கு, இலங்கை அரசு அமெரிக்காவுடன் உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும். சமீபத்தில் கூட அமெரிக்காவின் பிரபல நாளேடான ‘நியூயோர்க் ரைம்ஸ்’ எழுதிய ஒரு கட்டுரையில் அமெரிக்காவுக்குப் பிடிக்காத சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் இலங்கை அரசு நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதையிட்டு விசனம் தெரிவித்துள்ளதை ராஜா படிக்கவில்லையா? ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியமுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கி, இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற இலங்கை அரசு உண்மையில் ஏகாதிபத்திய சார்பானதல்ல. மாறாக புலிகள் இயக்கமே இலங்கையில் ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமான இயக்கம் என்பதை ராஜா அறிய வேண்டும்.
அடுத்து இலங்கைக் கடற்படையால் சுடப்படுகின்ற தமிழக மீனவர் பிச்சினையை எடுத்துப் பார்ப்போம். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் அப்பாவி ஏழை மீனவர்கள் சுடப்பட்டு இறப்பது கவலைக்குரிய விடயம்தான். ஆனால் இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்வது அவசியம். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெறுகின்றது. இந்த யுத்தத்தின் ஒரு தரப்பினரான புலிகள் இந்தியக் கரைக்கு மிகச் சமீபமாக இலங்கையின் வடபகுதியில் செயற்படுகின்றனர். இந்த இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் வடகரையோரக் கிராமமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவ சமூகத்தவராக இருப்பதுடன் இந்த ஊரின் நீண்டகால கள்ளக் கடத்தல் பாரம்பரியத்தையும் கொண்டவர். ஒரு வகையில் புலிகளின் அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டமென்பது இலங்கை அரசின் வல்வெட்டித்துறையினரின் கள்ளக் கடத்தல் நடவடிக்கைகளுக்கெதிரான நடவடிக்கை காரணமாகவும் ஆரம்பமானது எனலாம். அன்று அபினையும் புடவைகளையும் கடத்தியவர்கள் இன்று இந்தியாவிலிருந்து ஆயுதங்கள், எரிபொருள், மருந்து வகைகள், சீருடைத் துணிகள் போன்ற யுத்தத்துக்கு தேவையான பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இந்தக் கடத்தலுக்கு பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து தமிழக மீனவர்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறானவர்களே சில சமயங்களில் இலங்கைக் கடல் எல்லைக்குள் வைத்து இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டு இறக்க நேரிடுகின்றது. இது தவிர தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க வருவதும் சர்வசாதாரணம். அவர்களது நடவடிக்கைகயை இலங்கைக் கடற்படை மட்டும் தடுக்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மீனவர்களே பல தடவைகள் தடுத்துள்ளனர். சில சமயங்களில் தமிழக மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இது சம்பந்தமாக கைகலப்புகளே நிகழ்ந்துள்ளன. இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை பிடித்து பொலிசில் ஒப்படைத்தும் உள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் தாம் சென்று மீன் பிடிப்பதை தமிழக மீனவர் சங்க தலைவரே வெளிப்படையாக ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டதுடன், இலங்கைக் கடலில் சென்று மீன்பிடிப்பதற்கு இந்திய அரசு இலங்கை அரசடன் பேசி ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததை இலங்கையர்களான நாம் அறிந்த அளவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் அறியாதது விந்தையே. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை குறித்து அண்மையில் கருத்துரைத்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் எனக் குறிப்பிட்டதை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.
நிலைமை இவ்வாறிருக்க ‘தொடையில் நெறி கட்டிவனுக்கு தொண்டையில் வைத்தியம் செய்வது போல’ தமிழக மீனவர் சுடப்படும் பிரச்சினைக்கு தீர்வுகாண கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்ற ஒப்பாரியை சில தமிழக கட்சிகள் திரும்பத் திரும்ப பாடுவது போல கம்யூனிஸ்ட்டுகளும் பாட ஆரம்பித்துள்ளனர். கச்சதீவை இந்தியா பெறுவதின் மூலம் தமிழக மீனவர் அத்துமீறும் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடுமா என்பது ஒருபுறமிருக்க, கச்சதீவு என்ன இந்தியாவின் சொத்தா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது. வரலாற்று ரீதியாக கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் என்பதை விளக்கும் விக்ரோறியா மகாராணி காலத்து வரைபடம் ஒன்று இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் உண்டு. அது மாத்திரமின்றி கச்சதீவு நீண்டகாலமாகவே இலங்கையின் வடக்கு கடல் தீவான நெடுந்தீவு கிராமசபையின் ஒரு வட்டாரமாக இருப்பதுடன், நெடுந்தீவு பங்குத் தந்தையே கச்சதீவு அந்தோனியார் கோவிலின் பங்குத் தந்தையாகவும் வரலாற்றுக் காலம் முதல் இருந்து வருகின்றார். இந்திராகாந்தி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் கச்சதீவை பெரிய மனதுடன் இலவசமாக இலங்கைக்குக் கொடுப்பதற்காகவல்ல. மாறாக, அது கச்சதீவு மீதான இலங்கையின் இறைமையை மீட்ட ஒப்பந்தம். அங்கு இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை நல்லெண்ண அடி;பபடையில் இந்திய மீனவர்கள் தற்காலிகமாகத் தங்கி வலைகாயப்போடும் சலுகையை வழங்கியது என்பதே உண்மை. நிலைமை இவ்வாறிருக்க, கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்ற இந்திய அரசியல்வாதிகளின் கோஷம் பிராந்திய விஸ்தரிப்புவாதமேயொழிய வேறொன்றுமல்ல. இவ்வாறு கூறுபவர்கள் நாளை இந்தியா சிக்கிமை வல்லிணைப்புச் செய்தது போல, இலங்கை என்ற நாட்டையும் வல்லிணைப்புச் செய்து இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும என்று சொல்லக்கூடும்! எனவே இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் திராவிட இயக்கக்காரர்கள் போன்று பேசுவதை விடுத்து இலங்கை இனப்பிரச்சினையின் உண்மையான சாராம்சம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு மார்க்சும் ஏங்கல்;சும் போதித்த பாட்டாளிவர்க்க சர்வதேசியத்துவத்தின் அடிப்படையில் பேசவேண்டும். தமிழக மக்களின் வாக்குகளை குறுக்கு வழியில் பெறுவதற்காக மலினமான இனவாத அரசியல் பேசக்கூடாது. தா. பாண்டியன் சு.ப. தமிழ்செல்வனின் மரணத்தக்கு அஞ்சலி அறிக்கைவிடுவதாலோ, டி. ராஜா (இருவரும் தமிழர்கள்) இலங்கை அரசின் ‘இனப்படுகொலைகள்’ பற்றி கதை அளப்பதாலோ தமிழக மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியாது. தமிழக மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கு, தமிழக மக்கள் எதிர்நோக்கும் உண்மையான சமூக, பொருளாதார, அரசியல் இன, கலாசார பிரச்சினைகளை இனங்கண்டு வேலை செய்ய வேண்டும். இந்த விடயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறைந்த பட்சம் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையிலிருந்தாவது பாடம் படிக்கலாம். அதாவது இலங்கை இனப்பிரச்சினையை ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் ஏற்கும் வகையில் நியாயமான முறையில் தீர்க்க வேண்டும் என மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திவருகின்றது. அதே வேளையில் புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம் என்பதையும் அக்கட்சி ஏற்றுக் கொள்கின்றது. ஏறக்குறைய இதே நிலைப்பாடு தான் இலங்கைக் கம்ய+னிஸ்ட் கட்சியினது நிலைப்பாடும் ஆகும். அதைவிடுத்து ஒருபக்கத்தில் கோட்பாட்டைக் கைவிட்டு வெறும் தமிழ் இன உணர்ச்சி ரீதியாக இலங்கை இனப்பிரச்சினையில் நிலைப்பாடு எடுப்பதும், மறுபக்கத்தில் சிங்கள தேசியவாத நிலைப்பாடுள்ள ஜே.வி.பியுடன் தோழமை உறவு பூணுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்மை பயக்காது. இது அவர்களுக்கு மேலும் மேலும் கொள்கைக் குழப்ப நிலையையே உண்டாக்கும். உண்மையை மெய்யான நிலவரங்களிலிருந்து வந்தடைவதே மார்க்சிச அணுகுமுறை என்பதை நாம் சொல்லி அவர்கள் அறிய வேண்டியதில்லை.
|