|
எழுவைதீவுக்கு மருத்துவமனை
இலங்கையில் சப்ததீவுகள் என வர்ணிக்கப்படும் சில தீவுகளில் ஒன்றுதான் எழுவைதீவு. கடலையும் மண்ணையும் கடவுளையும் மாத்திரம் நம்பி வாழ்ந்த மக்கள் அச்சிறுதீவிலே பல்லாண்டுகள் வாழ்ந்துவந்தபோதிலும் அவர்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான மருத்துவமனை என்பது இற்றைவரையில் இல்லை.
சுமார் 250 தமிழ்க்குடும்பங்கள் வாழும் இத்தீவில் சைவாலயங்கள், ஆரம்பப்பாடசாலைகள், தேவாலயங்கள் ஒரேஒரு உபதபாற்கந்தோர் ஆகியன இருக்கின்றன. ஆனால் மருத்துவமனைதான் இல்லை. எத்தனையோ அரசுகள் பதவிக்கு வந்தன. அந்தத்தீவுப்பகுதியை உள்ளடக்கிய ஊர்காவற்துறையிலிருந்து பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் கடந்த காலங்களில் தெரிவாகியிருக்கின்றனர்.
மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படவில்;லை. எழுவைதீவு மக்கள் தமது மருத்துவதேவைகளுக்காக ஊர்காவற்றுறைக்கோ அல்லது யாழ்ப்பாணத்துக்கோதான் செல்லவேண்டியிருக்கிறது. இந்த சிறுதீவில் கடலையும் மண்ணையும் நம்பி வாழும் மக்களுக்கு காய்ச்சல், தடிமன், இருமல், வயிற்றுவலி, நெஞ்சுவலி வந்தாலும் படகில் ஏறி அக்கரை சென்றுதான் சிகிச்சை பெறவேண்டியிருக்கிறது.
அப்படியாயின் கர்ப்பிணித்தாய்மாரின் நிலைமை என்ன?
இன்று நாம் இன்ரநெட் யுகத்துக்கு வந்துவிட்டோம்., ஆனால் எங்கள் தாயகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் ஒரு அழகிய சின்னஞ்சீறு தீவில் ஒரு சிறு டிஸ்பென்ஸரி கூட இல்லை. இந்தத்தீவைச்சேர்ந்த பலர் இன்று வெளிநாடுகளில் புகலிடம் தேடியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தாம் பிறந்து வளர்ந்த எழுவைதீவைப்பற்றி சற்று சிந்திப்பார்களேயானால் விரைவில் அங்கு வாழும் மக்களின் மருத்துவமனைத்தேவையை பூர்த்தி செய்யமுடியும்.
அதற்கான ஆரம்ப வேலைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டிஸ்பென்சரி அமைப்பதற்கான காணி ஒன்றும் தெரிவாகியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தத் தீவு மக்களின் நீண்டகாலக்கனவு நனவாகவேண்டும்.
எனவே வெளிநாடுகளில் வசிக்கும் எழுவைதீவு வாசிகள் இதுகுறித்து அக்கறை காண்பித்து உதவினால் அவ்வூர் மக்களின் நீண்டகாலத்தேவையை பூர்த்தி செய்ய முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களை அறியவிரும்பும் அவ்வூர்மக்களும் நலன் விரும்பிகளும் தொடர்புகொள்ளவும்.
டொக்டர் நொயல்.நடேசன்: 61 3 9561 0541
|