|
அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா? :''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்''
சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும்
- பி.பி.சி செய்தி
இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார்.
இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அவ்வகையான தீர்வை ஜனாதிபதி முன்னெடுத்தாலும் சரி, அல்லது வேறு வகையான தீர்வை முன்மொழிந்தாலும் சரி, அவ்விவகாரத்தை தமது கட்சி பரிசீலிக்கும் என்று கூறினார்.
அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் சாசன மாற்றங்கள் தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியதாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக இணக்கப்பாட்டுடன் ஆய்வுசெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தமிழ் மக்கள் தனிநாடு கோரிக்கைகளையெல்லாம் கைவிட்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்துள்ளனர். அதுபோல அரசாங்கமும் தமது தரப்பில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும்
இலங்கையில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்யக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஊக்குவிக்குமானால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் எதிர்காலம் பலவீனமான நிலைக்கே தள்ளப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியலறிவுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பீ.எம்.சைஃபுதீன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார். தமிழ்,முஸ்லிம் தலைவர்கள் சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக இணைந்து தேர்தலைகளை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே தமது விகிதாசாரங்களுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பல மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடந்த தடவைகளைவிட இம்முறை குறைந்துள்ளமைக்கு ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான போட்டியும் போட்டி கட்சிகளுக்கிடையில் வாக்குகள் சிதறிப்போனமையுமே காரணம் என சைஃபுதீன் கூறுகிறார்.
முஸ்லிம் மக்கள் வழமையாக பெற்றுவந்த பிரதிநிதித்துவங்கள் குறைந்துவருவதை முஸ்லிம் கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் அவரது கருத்தாக அமைந்துள்ளது.
|