|
பள்ளிபாளையத்தில் கந்துவட்டி கும்பல் வெறியாட்டம்: சிபிஎம் ஊழியர் வேலுச்சாமி படுகொலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கந்து வட்டி கும்பலின் அட்டூழி யத்தை அம்பலப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி.வேலுச்சாமி (வயது 38) புதன்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
விசைத்தறித் தொழில் நகரமான பள்ளிபாளையத்தில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தவர் சி.வேலுச்சாமி. விசைத்தறி தொழில் நகரமான பள்ளிபாளையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். இப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசைத்தறி தொழிலாளி குடும்பம் ஒன்று கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியுள்ளது. வாங்கிய கடனைச் செலுத்த முடியாத நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், கந்து வட்டி உரிமையாளர் வீட்டுக் குச் சென்று வட்டிப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.
பாலியல் வக்கிரம்
கடன் தர முடியாத நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்ணை கந்து வட்டி கும்பல் ஓர் அறையில் அடைத்து வைத்து அடியாள் ஒருவர் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு உட் படுத்தியுள்ளனர். மேலும் இந்த கொடுமையை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்திற்கு விற்றுள்ளனர். இணை யதளத்திலும், செல்போன் களிலும் இந்த காட்சி பரவி வருவதை அறிந்து அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கந்துவட்டி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்கு ஆளான குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை நாடி வந்தனர். இதையடுத்து அப்பகு தியின் சிபிஎம் கிளைச்செயலாளராக இருந்து வந்த வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றியக் குழு மூலம் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். பெண் தொழிலாளியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இணையதளத்தில் பரப்பிய அந்த கும்பலை கைது செய்து சட்டப்படி தண்டிக்க முயற்சி மேற்கொண்டார். இது குறித்து தீக்கதிர் நாளிதழிலும் கடந்த பிப்ரவரி 20ம் தேதி செய்தி கட்டுரை வெளியானது. இதன் தொடர்ச்சியாக அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து வேலுச்சாமிக்கு கந்து வட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. இது குறித்தும் காவல் துறையிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்திருக் கிறார்.
கொலை மிரட்டல்
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிவக்குமாரின் கூட்டாளிகளான ராஜ்கமல், அருண் ஆகிய இருவரும் அக்ரஹாரத்தில் உள்ள வேலுச்சாமியின் வீட்டுக்கு வந்து அவரது தம்பி ஜம்புவிடம், வேலுச்சாமி எங்கே என்று கேட்டு மிரட்டிச் சென்றனர். வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த வேலுச்சாமி இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது மேற்படி சம்பவத்தை குடும்பத்தார் தெரிவித்தனர்.
உடனடியாக வேலுச்சாமி, அவரது தம்பி ஜம்புவுடன் புறப்பட்டு பள்ளிபாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று சிவக்குமார் கும்பல் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதால், பாதுகாப்பு வழங்கும்படி மனுக் கொடுத்தார். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து வேலுச்சாமி, ஜம்பு மற்றும் சதீஷ் ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் அக்ரஹாரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வெட்டிக்கொலை
அப்போது இரவு சுமார் பத்தரை மணியளவில் ராஜவீதி சந்திப்பில் ஜம்புவும், சதீஷூம் முன்னால் போய்க் கொண்டிருந்தபோது, சற்று தள்ளி பின்னால் வந்து கொண்டிருந்த வேலுச்சாமியை எட்டு பேர் கொண்ட கும்பல் திடீரென வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. உடனே அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கொலை செய்யப்பட்ட வேலுச்சாமிக்கு சித்ரா என்ற மனைவியும், தாரணி(11), ரேணுகா(8) என இரு மகள்களும், வினோத் (7) என்ற மகனும் உள்ளனர்.
|