|
வலி.வடக்கு மீள்குடியேற்றம் ஆரம்பம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்றையதினம் மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்குள் பிரவேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டனர்.
முன்னதாக இன்று காலை வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக வளாகத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் திரண்டிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெல்லிப்பளை பிரதேச செயலாளர் முரளிதரன் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர். இச்சந்திப்பின்போது ஏற்கனவே ஜனாதிபதியினாலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவினாலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை மீளக்குடியேற அனுமதிப்பது என முடிவுசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீங்கள் உங்கள் சொந்த வீடுகளுக்குச் செல்லலாம். அத்துடன் இம்முறை தைப்பொங்கலை உங்கள் வீடுகளிலேயே கொண்டாடலாம் என அறித்தபோது மக்கள் விண்ணதிர கரகோசம் செய்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்க. ஜனாதிபதி வாழ்க. ஆளுநர் வாழ்க என கோசமிட்டனர். இக்கூட்டத்தில் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உரையாற்றுகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முழுமுயற்சி காரணமாகவே உயர்பாதுகாப்பு வலய மீள்குடியேற்றம் நடைமுறைமுறைக்கு வந்ததாக தெரிவித்தார். தெல்லிப்பளை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தினைத்தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையேற்று காங்கேசன்துறை வீதிவழியாக முன்னால் செல்ல அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அவரைத்தொடர்ந்து பின்னால் சென்று அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர். இச்சமயம் வீதியின் அமைக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு பலத்த ஆரவாரத்தின் மத்தில் மக்கள் குதூகலத்துடன் நடந்து சென்றனர். மேலும் சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள்கள் வைத்திருந்தோர் அந்தந்த வண்டிகளிலேயே சாரிசாரியாக வரத்தொடங்கினார்கள். இச்சமயம் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கலாம் என்ற செய்தி வெகுவேகமாக பரவத்தொடங்கியதும் மேலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் வேகவேகமாக திரண்டுவரத்தொடங்கினார்கள். தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வரையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களோடு மக்களாக நடந்து வந்தமை விசேட அம்சமாகும். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை வந்தடைந்த மக்களுக்கு அங்கு வைத்து ஈபிடிபி உறுப்பினர்கள் குளிர்பானம் மற்றும் தண்ணீர் போத்தல்களை வழங்கி வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் திறக்கப்பட்டு தேவஸ்தான மணிகள் ஓங்கி ஒலிக்க விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இவ்வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெல்லிப்பளை பிரதேச செயலாளர் முரளிதரன் உட்பட ஆயிரக்கணக்கான மக்களும் பங்குகொண்டனர். இன்றையதினத்திலிருந்து மாவட்டபுரம் கந்தசுவாமி தேவஸ்தான பிரதம குரு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வாசஸ்தலத்திலேயே தங்கியிருக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குவைத்து மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ப+ஜை வழிபாடுகளைத் தொடர்ந்து தேவஸ்தான முன்றலில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் நான் சொன்னதைச் செய்வேன். செய்வதைச் சொல்லுவேன். இங்குள்ள வீடுகளில் அநேகமானவை சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்போடு முதற்கட்டமாக உங்கள் காணிகள் வளவுகளை சுத்தம் செய்யுங்கள். முக்கியமாக மிதிவெடி அபாயம் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். அத்துடன் கிணறுகளை இறைப்பதற்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை ஆளுநர் பெற்றுத்தரவுள்ளார். பின்னர் வீடுகளை திருத்தம் செய்து உடனடியாகவே குடியேறலாம் என அறிவித்தார்.
|