|
மூன்றில் இரண்டு
ஏப்ரல் எட்டாந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பிரசாரம் முற்றிலும் வித்தியாசமாகத்தான் உள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை புதிய தேர்தல் விஞ்ஞாபனம் எதுவும் இல்லை. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை முழுவதுமாக நடை முறைப்படுத்துவதற்கு, மக்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கோருகிறது. பிரதான எதிர்க்கட்சியோ அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்துவிடக் கூடாது; அதற்கு இடமளித்துவிடாது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது.
ஏனைய கட்சிகள் எந்தச் சுலோகத்தை முன்வைத்தாலும் அவை ஆட்சிய மைக்கும் திறனைக் கொண்டிராததால், அவற்றின் விஞ்ஞாபனத்தைப் பற்றிப் பேசுவதை இங்கு தவிர்த்துக் கொள்வோம். அரசாங்கத்திற்கு மூன்றி லிரண்டு பெரும்பான்மை கிடைத்துவிடக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுவதென்பது அந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெறாது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டது என்பதே அர்த்தம். ஆனாலும், அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டமூலங்கள் நிறைவேற்றுவதற்குக் குறைந்த பெரும்பான்மை இருந்தால்தான் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது என்பதும் நினைவிருக்கும் என்று எண்ணுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி இப்போதும் நாட்டில் ஓர் எதிர்க்கட்சி இல்லாத நிலை காணப்படுவது ரணில் விக்கிரமசிங்காவிற்குத் தெரியாவிட்டாலும் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.
ஆட்சியமைக்கும் ஓர் அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத ஒரு நிலை ஏற்படுமானால், அந்த அரசாங்கம் எத்துணை சவால் களை எதிர்நோக்கும் என்பதற்கு கடந்த காலங்களில் ஜேவிபி எப்படி அரசாங்கத்தை ஆட்டுவித்தது என்பது நல்லதோர் உதாரணம். அரசாங்கத்தி ற்கு ஆதரவளிப்பதாகக் காண்பித்துப் பின்னங்காலை இழுத்துவிடும் தந்திரப் போக்குடன் ஜேவிபி செயற்பட்டதால் நாட்டு மக்கள்தான் துன்பத்தை அனுபவிக்க நேரிட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜேவிபியுடன் ஒரு விஷப்பரீட்சையில் இறங்கி சூடு கண்ட வடு மாறாத நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் பெரும்பான்மைக்காக ஜேவிபியை நம்பி அரவணைத்ததால் ஏற்பட்ட விளைவுதான் யுத்தமும் அதன் விபரீத விளைவுகளும். சிலவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையுடனாவது ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தை ஆதரித்திருக்குமாயின் சமாதானப் பாதையைத் தொடர்ந்திருக்க முடியும் என்பதை இன்றும் சில அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். எவ்வாறாயினும் எது நடக்க வேண்டுமோ அது நடந்து முடிந்தாகிவிட்டது.
இனி எதிர்காலத்திலாவது நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு சூழலைத் தோற்றுவிப்பதற்கு ஒரு பலமான பாராளுமன்றம் வேண்டும் என்பது ஆளுந்தரப்பின் எதிர்பார்ப்பு. சட்ட மூலங்களை நிறைவேற்றுவதற்காக மற்றவர் காலில் வீழ்ந்து பிச்சை கேட்கும் நிலையைத் தவிர்ப்பதற்கு மக்கள் உதவ வேண்டும் என்று கேட்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
உண்மையில், இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும் அதனை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு இன் னமும் திருமதி சந்திரிகா மீது ஒரு கறையாக இருக்கிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான ஒரு வரலாற்றுக் கறையை ஏற்படுத்துபவரல்ல என்பது அவரின் செயற்பாடுகள் மூலம் தெரியவருகிறது. ஆகவேதான், நாட்டின் சுபீட்சத்துக்கான நடவடிக்கையை மேற்கொள்ள பாராளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரி நிற்கிறார். இதேநேரம், அரசாங்கத்திற்குச் சர்வதேச ரீதியிலும் பெரும்பான்மை பலம் இருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பில் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையை அணிசேரா இயக்கத்தைச் சேர்ந்த நாடுகள் கண்டித்திருக்கின்றன. அந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் 124 நாடுகளின் சார்பில், இயக்கத்தின் தலைவரான எகிப் திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக், பான் கீ மூனுக்குக் கடிதம் அனுப்பி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது இலங்கையின் சர்வதேச உறவில் ஒரு முக்கிய திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்க மற்றும் பிரித்தானியா சார்பு நாடுகள் இலங்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத் திருப்பது இலங்கையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஓர் உந்துதலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், கண்கெட்ட பின் மேற்கொள்ளும் சூரிய நமஸ்காரமானது எந்த விதத்திலும் தமிழ் மக்களுக்கோ இலங்கை அரசுக்கோ பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அவர் மேற்குலகை மகிழ்விக்கும் சூட்சுமமான கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை இலங்கை மட்டுமன்றி சர்வதேசமும் புரிந்துகொண்டுள்ளன. எனவே, அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைக்கும் மூன்றிலிரண்டு பெரும்பா ன்மை, நாட்டின் அனைத்து இன மக்களினதும் சுபீட்சத்திற்கு வழிவகுக் கட்டும்.
- தினகரன் ஆசிரியர் தலையங்கம்
|