|
போலந்து அதிபர் மனைவியை அடையாளம் காட்டிய மோதிரம்
மாஸ்கோ, ஏப்.13: ரஷியாவில் விமான விபத்தில் இறந்த போலந்து அதிபர் லெ கஸன்ஸ்கியின் மனைவி மரியாவின் உடல் திங்கள்கிழமை அடையாளம் காணப்பட்டது.
திருமணத்தின் போது மரியாவுக்கு கஸன்ஸ்கி அணிவித்த மோதிரம் விரலில் இருந்தது. அந்த மோதிரத்தில் கஸன்ஸ்கியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்தே மரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கஸன்ஸ்கியின் உடலைப்போலவே மரியாவின் உடலும் தனி விமானத்தில் போலந்து தலைநகர் வார்ஷாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
போலந்து அதிபர் லெ கஸன்ஸ்கி, அவரது மனைவி மரியா உள்பட 97 பேருடன் விமானம் வெடித்துச் சிதறிய இடத்தில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 7 பேரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை போலந்து அதிபர் லெ கஸன்ஸ்கி, அவரது மனைவி உள்பட 45 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. துண்டு துண்டாக சிதைந்தவர்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
விமான பைலட்டுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது-புலனாய்வு அதிகாரிகள்: பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் ஸ்மோலென்ஸ் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்றும், மாஸ்கோ விமான நிலையத்தில் அல்லது பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்கலாம் என்றும் பைலட்டுகளுக்கு ரஷிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த அறிவுறுத்தலை விமானிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் விமானம் விபத்துக்குள்ளாக நேர்ந்தது என்று இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் ரஷிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மோலென்ஸ் விமான நிலையத்தில் இறங்குவதற்கு பைலட்டுகளை அதிபர்தான் பணித்ததாக தகவல் வெளியானது.
இந்த தகவலுக்கு தற்போது போலந்து அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்மோலென்ஸ்க்கில் விமானத்தை இறக்க விமானிகளை யாரும் நிர்பந்திக்கவில்லை என்று கூறியுள்ளது.
|