|
பொதுத்தேர்தல் முடிவிலிருந்து கற்றுக் கொண்டு, தமிழ் ஜனநாயகக் கட்சிகள், வட மாகாணசபையைக் கைப்பற்ற ஒன்றுபட வேண்டும்!
வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
ஏப்ரல் 08ம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் (திரிகோணமலை தொகுதி முடிவு அறிவிக்கப்படாத சூழ்நிலையில் அது 12 தொகுதிகளைப்) பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் இதன் அர்த்தம், தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களில் ஏகப்பெரும்பான்மையோரின் அங்கீகாரம் பெற்ற கட்சி என்பதாகிவிடாது. தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் பெறப்பட்ட வெற்றியே இதுவாகும். இந்த உண்மையை கீழ்கண்ட புள்ளிவிபரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
யாழ்.மாவட்டம் - பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரம் வருமாறு:
|
தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)
|
65,119
|
|
பொதுசன ஐக்கிய முன்னணி
|
47,622
|
|
ஐக்கிய தேசியக்கட்சி
|
12,624
|
|
தமிழ் காங்கிரஸ்
|
6362
|
|
தமிழர் விடுதலைக் கூட்டணி
|
2892
|
|
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி)
|
1821
|
|
சிறுபான்மை தமிழர் மகாசபை (சுயேட்சைக்குழு – 3)
|
1161
|
|
இந்த அடிப்படையில் பார்க்கும் போது, பெரும்பாலும் 100 சதவிகிதம் தமிழ் பேசும் வாக்காளர்களையே கொண்ட யாழ்.மாவட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளைவிட, ஏனைய பிரதான கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள், 7363 அதிகமானவையாகும். அதேவேளையில் யாழ்.மாவட்டத்தில் ஏனைய பல்வேறு கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பெற்ற மொத்த வாக்குகளை கணக்கில் எடுத்தால், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது 50 வீதத்துக்கும் குறைவானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
யாழ்.மாவட்டத்தில் பிரதான போட்டியாளர்களாகத் திகழ்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை உள்ளடக்கிப் போட்டியிட்ட பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் கூட, ஆக 17497 மட்டுமே! கடந்த காலத்தில் புலிகளுக்கும் அவர்களது பினாமி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராகச் செயல்பட்ட த.வி.கூ, ஈ.பி.ஆர்.எல்.எப். – புளொட் கூட்டு மற்றும் சிறுபான்மை தமிழர் மகாசபை என்பன பெற்ற மொத்த வாக்குகளை, பொதுசன ஐக்கிய முன்னணி பெற்ற வாக்குகளுடன் சேர்த்துப் பார்த்தால், இந்த வாக்கு வித்தியாசம் இன்னும் குறைந்து விடும். மேற்குறிப்பிட்ட இந்தக் கட்சிகள் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டிருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற ஆசனங்களில் ஒன்றைக் கைப்பற்றி 4 – 4 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றிருக்க முடியும்.
அதேவேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று, புலிகளின் மிச்ச சொச்சங்களாக தீவிர தமிழ் தேசியம் பேசிய தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி (தமிழ் காங்கிரஸ்) இந்தத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியுள்ளது. அவர்களை விட இரண்டு மடங்கு வாக்குகளை ஐ.தே.க பெற்றதுடன், ஒர் ஆசனத்தையும் வென்றுள்ளது. அதேபோல, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.சிறீகாந்தா தலைமையிலான சுயேட்சைக் குழுவினரும் படுதோல்வியைத் தழுவியுள்ளனர்.
தமிழ் தேசியத்துக்கு ஆதரவாகவும், புலிகளுக்கு ஆதரவாகவும் கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த புதிய ஜனநாயகக் கட்சியின் சுயேட்சைக் குழுவும் படுதோல்வியையே தழுவியுள்ளது.
தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் செறிந்து வாழ்கின்றதும், புலிகளுடன் இறுதிப்போர் நடைபெற்றதுமான வன்னி தேர்தல் மாவட்டத்திலும் ஏறத்தாள இவ்வாறான ஒரு முடிவே தேர்தலில் வெளியாகியுள்ளது. அதையும் பார்ப்போம்.
வன்னி மாவட்டம் - பிரதான கட்சிகள் செற்ற வாக்கு விபரம்:
|
தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)
|
41,673
|
|
பொதுசன ஐக்கிய முன்னணி
|
37,522
|
|
ஐக்கிய தேசியக்கட்சி
|
12,783
|
|
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
|
5900
|
|
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
|
2867
|
|
தமிழர் விடுதலைக் கூட்டணி
|
1073
|
|
|
|
|
இங்கும் கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விட, மற்றைய பிரதான கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள், 13,162 அதிகமானவையாகும். வன்னி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளோடு ஒப்பிடுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்ககளின் விகிதாசாரம் இன்னும் குறைவடையும். குறிப்பாக பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறுமனே 4151 மட்டுமே! இங்கு தனித்தனியே போட்டியிட்ட புளொட் - ஈ.பி.ஆர்.எல்.எப். கூட்டு, ஈ.பி.டி.பி, த.வி.கூ என்பன பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட அவை 5689 வாக்குகளை மேலதிகமாகப் பெற முடிந்திருப்பதுடன், தமிழரசுக் கட்சி – தமிழ தேசியக்; கூட்டமைப்புக்குப் போன 3 ஆசனங்களில் ஒன்றினை புளொட் அணி கைப்பற்றியிருக்கவும் முடியும்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலும் கூட இதே நிலைமைதான் காணக் கிடக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் - பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரம்:
|
தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)
|
66,235
|
|
பொதுசன ஐக்கிய முன்னணி
|
62,009
|
|
ஐக்கிய தேசியக்கட்சி
|
22,935
|
|
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
|
16,886
|
|
தமிழர் விடுதலைக் கூட்டணி
|
4424
|
|
|
|
|
தமிழ் - முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விட, ஏனைய பிரதான கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 40,019 மேலதிகமாக இருப்பதுடன், இங்கு 3 ஆசனங்களை வென்ற தமிழரசுக் கட்சிக்கும், 1 ஆசனத்தை வென்ற பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான வாக்க வித்தியாசம் ஆக வெறுமனே 4226 மட்டுமேயாகும். இங்கு தனியாகப் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியும,; பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால், தமிழரசுக் கட்சியை விட 17,084 வாக்குகள் மேலதிகமாகப் பெற முடிந்திருப்பதுடன், தமிழரசுக் கட்சி – தமிழ தேசியக்; கூட்டமைப்புக்குப் போன 3 ஆசனங்களில், ஒர் ஆசனத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் நிச்சயமாக கைப்பற்றியிருக்கவும் முடியும்.
இதேவேளை திகாமடுல்ல தேர்தல் மாவட்டததை எடுத்துக் கொண்டாலும், இதே நிலைமையைத்தான் காண முடியும்.
இங்கு நாம் சிங்கள வாக்காளர்கள் நிறைந்து வாழும் அம்பாறை மாவட்டத்தை விடுத்து, தமிழ் - முஸ்லீம் வாக்காளர்கள் செறிந்து வாழும் கல்முனை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளை மட்டும் எடுத்துப் பார்ப்போம்.
கல்முனை தொகுதி
|
ஐக்கிய தேசியக்கட்சி
|
20,457
|
|
பொதுசன ஐக்கிய முன்னணி
|
8332
|
|
தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)
|
7947
|
|
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
|
184
|
|
|
|
|
இங்கு தமிழரசுக் கட்சியை விட ஐ.தே.கவும், பொ.ஐ.முவும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடியும்.
பொத்துவில் தொகுதி
|
பொதுசன ஐக்கிய முன்னணி
|
32,603
|
|
ஐக்கிய தேசியக் கட்சி
|
27,183
|
|
தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)
|
14,248
|
|
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
|
934
|
|
|
|
|
இங்கும் தமிழரசுக் கட்சி மூன்றாவது ஸ்தானத்தில், அதுவும் மிகக் குறைந்த நிலைiயிலேயே வாக்குகளைப் பெற்றுள்ளது.
திரிகோணமலை தேர்தல் தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடப்பதால், அங்கு தேர்தல் முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாத போதிலும், அந்த மாவட்டத்திலுள்ள முடிவுகள் வெளிவந்த மூதூர், சேருவில தொகுதிகளின் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, அங்கும் தமிழரசுக் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளுப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
வடக்கு கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களின் மொத்த தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, பின்வரும் உண்மைகள் மிகவும் தெளிவாகத் தெரிய வருகின்றன.
- தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற போர்வையில், கடந்த 30 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் நடாத்திய எதேச்சாதிகார வெறியாட்டத்தை, தமிழ் பேசும் மக்கள் ஆதரிக்கவில்லை.
- கடந்த பொதுத்தேர்தலின் பின்னர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பேர் பாராளுமன்றம் சென்ற போதிலும், அம்மக்களின் எந்தவொரு பிரச்சினை பற்றியும் வாய்திறக்காது, புலிகளின் பினாமியாகச் செயல்பட்டு, புலிகள் செய்த அட்டூழியங்களுக்கெல்லாம் உடந்தையாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானோர் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற உண்மை தெளிவாகின்றது. இருப்பினும் அவர்கள் அதிக ஆசனங்களைப் பெற்றதற்குக் காரணம் விகிதாரத் தேர்தல் முறைமையும், தமிழ் ஜனநாயகக் கட்சிகளின் ஐக்கியமின்மையும் ஆகும்.
- தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு, புலிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, தீவிர தமிழ் தேசியவாதம் பேசிய அனைவரும் படுதோல்வியைத் தழுவியதின் மூலம், கடந்த 30 வருடங்களாக புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்த அமோக ஆதரவு எனக் காட்டப்பட்ட பிம்பம் வெறும் போலியானது என்பதும், அத்தோற்றம் வெறுமனே ஆயுத முனையில் உருவாக்கப்பட்டது என்பதும் நிரூபணமாகியுள்ளது.
- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மட்டுமின்றி, பாராளுமன்ற ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய, ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மீதும், தமிழ் பேசும் மக்கள் இன்னமும் பூரண நம்பிக்கை வைக்கும் நிலையை, அக்கட்சிகள் இன்னமும் உருவாக்கவில்லை என்பதும், இத்தேர்தல் மூலம் புலனாகின்றது. அத்துடன் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய சிறிதளவு ஆதரவைக் கூட, தமது அற்ப சுயநலப் போட்டிகளால் சிதைத்து, தாம் பெற்றிருக்க் கூடிய ஒரு சில தொகுதிகளைக் கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தாரை வார்த்துள்ளார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில், தென்னிலங்கையைப் பொறுத்தவரை அரசியல் போராட்டம் என்பது வழமைபோல வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு – முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் கூட்டான பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் இடையிலானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள அதேவேளையில், வடக்கு கிழக்கிலும் அதையொட்டியே பிற்போக்கு தமிழ் தேசியவாத அணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க கூட்டுச் சக்திகளுக்கும், பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் அதனுடன் இணைந்துள்ள, இணையப்போகும் தமிழ் ஜனநாயகக் கட்சிகளுக்கும் இடையிலானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உருவாகியுள்ள இந்த புதிய நிலைமை, நாட்டில் பிற்போக்கு இனவாத சக்திகளால் திட்டமிட்டு, தற்காலிகமாக உருவாக்கி, முன்தள்ளப்பட்டிருந்த, தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை பின்தள்ளி, மீண்டும் ஏகாதிபத்தியத்துக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதானமானது என்பதை உறுதிப்படுத்தி நிரூபித்துள்ளது.
இத்தகைய ஒரு பகைப்புலத்தில் தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய அரசியல் பாதை எது என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பானது. நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமது அரசியல் வீழ்ச்சியை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், புத்தி சாதுரியமாக விடயத்தில் முந்திக் கொண்டு, ஏனைய தமிழ் கட்சிகளை தம்முடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அவரது அழைப்பு இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.
ஓன்று, சரிந்த போன தமது ஆதரவுத் தளத்தை, இந்தத் தமிழ் கட்சிகளின் ஆதரவைப் பயன்படுத்தி மீளவும் நிலைநாட்டிக் கொள்வது.
இரண்டாவது, அந்த ஆதரவின் மூலம், தமது பிரதான போட்டியாளரான பொதுசன ஐக்கிய முன்னணி ஆதரவு பெற்ற ஈ.பி.டி.பி கட்சியை தனிமைப்படுத்தி, வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டுவது
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திட்டத்திற்கு ஏனைய தமிழ் ஜனநாயகக் கட்சிகள் பலியாகுமா என்பதைப் பொறுத்தே தமிழ் பேசும் மககளின் எதிர்கால வாழ்வு தங்கியுள்ளது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது, ஏனைய தமிழ் கட்சிகளைப் போல சாதாரண ஒரு தமிழ் ஜனநாயகக் கட்சியாக இருப்பின், அவர்களது அழைப்பை பாரதூரமாக எடுத்து பரிசீலிக்கத் தேவையில்லை. ஆனால் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு என்பது, முன்னைய தமிழ் பிற்போக்கு கட்சிகளான தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற்றின் தொடர்ச்சியாக இருப்பதுடன், அது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு பாசிச அமைப்பாக உருவெடுத்து செயல்பட்ட விடுதலைப் புலிகளின் ஒரு பினாமி அமைப்பாகவும் செயல்பட்டுள்ளது. அது அந்த நிலைப்பாட்டிலிருந்து இன்னமும் விடுபட்டதாகவும் இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, அவர்கள் வட மாகாணசபை நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கு ஏனைய தமிழ் ஜனநாயகக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால், அச்செய்கையானது தமிழ் ஜனநாயகக் கட்சிகள் தமது தலையிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் மண் அள்ளிப் போட்ட கதையாகவே முடியும். ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாணபசையைக் கைப்பற்ற முனைவது, அச்சபையின் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து விடுவதற்காக அல்ல.
இப்பொழுது உள்ள சூழ்நிலையில், தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது, 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த மாகாண சபைகளுக்கூடாகவே நடைமுறைப்படுத்தப்படக் கூடிய சூழலே நிலவுகின்றது. அரசாங்கம் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றிருந்தாலும் கூட, சிங்கள மக்களின் மனநிலையைப் பொறுத்த வரையிலும், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்த வரையிலும், மாகாணசபைத் திட்டத்துக்கு அப்பால் செயல்படக் கூடிய சூழல் தற்பொழுது இல்லை. எனவே முதலில் மாகாணசபை மூலமான அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு, அது பிரச்சினையில்லாமல் செயற்படுகின்ற ஒரு சூழ்நிலையிலேயே அடுத்த கட்ட நகர்வை அரசாங்கமும் தமிழ் மக்களும் சேர்ந்து மேற்கொள்ள முடியும். இந்த நிலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிர்ப்பந்தம் காரணமாக, தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாகச் சொன்னாலும், ஏற்கெனவே தமிழரசுக் கட்சியால் பிரிவினைவாதம் என்ற கருத்துப்பாட்டுடன் முன்வைக்கப்பட்ட சமஸ்டிக் கொள்கையை இன்னமும் கைவிட்டு விடவில்லை. கடந்த தேர்தலிலும் அதையே வலியுறுத்தினார்கள்.
எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபையைக் கைப்பற்றுமாக இருந்தால், அது அரசாங்கம் மாகாணசபை ஊடாக மேற்கொள்ளும் அதிகாரப் பகிர்வு முயற்சிகளை திட்டமிட்டு சீர்குலைப்பதற்காக, உடனடியாக அடைய முடியாத சமஸ்டிக் கோரிக்கையை வலியுறுத்துவதுடன், வடபகுதி மக்களுக்கு இன்று அவசியமாகத் தேவைப்படுகின்ற மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றையும் சீர்குலைக்க முற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் சதிகாரத்தனமான அழைப்பையிட்டு, ஏனைய தமிழ் ஜனநாயகக் கட்சிகள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், த.வி.கூ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., த.ம.வி.புலிகள் மற்றும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்பவை ஒர் ஆசனத்தைத் தன்னும் பெறாதபடியால், வட மாகாணசபைத் தேர்தலிலாவது சில ஆசனங்களைப் பெறும் நோக்குடன், தமது அழைப்பை ஏற்று அவை தம்முடன் கூட்டுச்சேர வரக்கூடும் என்ற ஒரு நப்பாசையிலேயே, ஆர்.சம்பந்தன், அவற்றை தம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார். உண்மையில் அக்கட்சிகளும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விரக்தியில் இருப்பதால், அதிலிருந்து விடுபட்டு, வட மாகாணசபையிலாவது சில ஆசனங்களைக் கைப்பற்ற வழிவகை தேடும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.
ஆனால், இந்த தமிழ் கட்சிகள் முதலில் செய்ய வேண்டியது, கடந்த பொதுததேர்தலில் தமக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராய்வதாகும். அப்படிப் பார்க்கையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரதான அணியாகத் திகழ்ந்த பொதுசன ஐக்கிய முன்னணியில் அவர்கள் இணைந்து போட்டியிடாமையே, அவர்கள் பெற்றிருக்கக்கூடிய ஒரு சில ஆசனங்களையும் இழந்;ததிற்குக் காரணம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவர்கள் அவ்வாறு இணைந்து கொள்ளவிடாமல் தடுத்த காரணி, அவர்கள் நாட்டின் உண்மையான பிரச்சினைகளை விட்டு விட்டு, தமிழ் தேசியம் என்ற மாயமான் மீது கொண்டிருந்த பிரமையாகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவ்விடயத்தில் ஈ.பி.டி.பி கட்சி நிலைமையை உணர்ந்து புத்திசாதுரியமாக நடந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதேவேளையில் ஈ.பி.டி.பி கூட முன்முயற்சி எடுத்து ஏனைய தமிழ் கட்சிகளை தனது அணியில் திரட்டத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எது எப்படியாகிலும், நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளையும், அதைத் தொடர்ந்து, மக்கள் செல்வாக்கு இழந்துவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளையும் அவதானிக்கும் போது, கூட்டமைப்புக்கு எதிரான அனைத்து தமிழ் ஜனநாயகக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதின் அவசியமும், அவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய பொதுசன ஐக்கிய முன்னணி அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியமும் புலனாகும்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, தமிழ் ஜனநாயகக் கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்படுமாக இருந்தால், வட மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற எடுக்கும் முயற்சியை முறியடித்து, அதனை உண்மையான தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் தலைமையின் கீழ கொண்டு வர முடியும் என்பதை இக்கட்சிகள் உணர வேண்டும்.
அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் பிற்போக்கு சக்திகளின் அரசியல் பிரதிநிதி, பிற்போக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாளி, ஏகாதிபத்திய சக்திகளின் விசுவாசி என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இலங்கை மக்களின் பிரதான விரோதிகள் ஏகாதிபத்தியமும், அதனுடன் கூட்டுச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவும் தான் என்பது மாறாத உண்மைகளாகும். இதை தமிழ் மக்கள் மட்டுமல்ல, தமிழ் அரசியல் சக்திகளும் புரிந்து கொள்வது அவசியமாகும்.
|