|
கடன் சுமையில் ரஷ்யா மூழ்கும்: கோர்பசேவ் எச்சரிக்கை
மாஸ்கோ:
ர ஷ்யாவில் ஜனநாயக நடைமுறை முடக்கப்பட்டு விட்டது என, முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிகைல் கோர்பசேவ் தெரிவித்துள்ளார்.சோவியத் யூனியன் அதிபராக இருந்த கோர்பசேவ், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொண்டதன் விளைவாக கடந்த 91ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தது. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:ஜனநாயகத்தின் மூலம் தான் நாடு வளர்ச்சியடையும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. சோவியத் யூனியன் உடைந்த உடன், ரஷ்யாவில் ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால், சமீப காலமாக அந்த நடைமுறை இல்லை. ரஷ்ய அதிபர் புடின் முதல் முறையாக அதிபரான போது, ஜனநாயக நடைமுறை இருந்தது. இரண்டாவது முறை அவர் அதிபரான போது, ஜனநாயக நடைமுறைகளை காணவில்லை.
ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது பற்றி கவலை கொள்ள தேவையில்லை. நவீன மயமான, வளர்ச்சியடையும் ரஷ்யாவை உருவாக்க வேண்டும்.ரஷ்யாவின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது. அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்படவில்லை. ஓரிடத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுக்கு, பார்லிமென்ட் உடனடியாக ஒப்புதல் வழங்கி விடுகிறது.மக்களிடம் அதிகாரம் சென்றால், இன்னும் குழப்பம் மேலோங்கி விடுமோ என அதிகாரிகளும், ஆட்சியில் உள்ளவர்களும் பயப்படுகின்றனர்.
இந்த பயத்தை உடைத்தெறிய வேண்டும்.அதிபர் மெட்வதேவோ, பிரதமர் புடினோ சமீப காலமாக வளர்ச்சிப் பாதைக்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொதுமக்களை அணுகாதவரை வளர்ச்சி என்பது தோல்வியில் தான் முடியும். வளர்ச்சி இல்லாவிட்டால், வழக்கம் போல் மக்கள் கடன் சுமையில் தான் மூழ்க வேண்டியிருக்கும்.இவ்வாறு கோர்பசேவ், கட்டுரையில் கூறியுள்ளார்.
|