|
ஐ.நா.வுக்கு எதிரான சொற்போரில் இலங்கை பெற்ற இராஜதந்திர வெற்றி
யுத்தத்தைக் கடந்த வருட மே மாதம் வெற்றிகொண்ட இலங்கை தற்போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கெதிரான சொற்போரில் இராஜதந்திர வெற்றியை ஈட்டியுள்ளது.
இலங்கையின் இராணுவம் மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச் செயல்களையும் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் பொறுப்பு சொல்லும் தன்மை குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்த தீர்மானத்தை மிகப்பெரும் தனி அரசியல் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
தற்போது எகிப்து தலைமை வகிக்கும் 118 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அணிசேரா நாடுகள் இயக்கம் உத்தேச நிபுணர்கள் குழுவை நியமிக்க பான் கீ மூன் தன்னிச்சையாக எடுத்த தீர்மானம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதன் மூலம் செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறியுள்ளார் என்றும் அங்கத்துவ நாடொன்றின் உள்விவகாரத்தில் தலையீடு செய்துள்ளார் என்றும் அணிசேரா இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையின் வட பகுதியில் தனி நாடொன்றை அமைப்பதற்கு போராடி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளைத் தீர்க்கமாகத் தோற்கடித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பலத்த ஆட்சேபனைக்கு மத்தியில் நிபுணர்கள் குழுவை அமைப்பதென்று முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட சில நாடுகளைத் தெரிவு செய்து இவ்விதம் பாரபட்சமாக நடத்துவது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஸ்தாபக கோட்பாடுகளுக்கு மாறானது என்று அணிசேரா இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக இயக்கத்திற்குத் தற்போது தலைமை தாங்கிவரும் எகிப்தின் தூதுவர் மஜித் அப்துல் அஸீஸ் செயலாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். செயலாளர் நாயகத்தின் நடவடிக்கையைக் கண்டிப்பதென அணிசேரா இயக்கக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
பொறுப்புச் சொல்லும் தன்மை பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உள்ளூர் முறைமையொன்றைத் தாமாகவே ஏற்படுத்துவது என்ற தமது நோக்கத்தை இலங்கை ஜனாதிபதி ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருந்தது உங்களுக்குத் தெரிந்த விடயம் என்று எகிப்திய தூதுவர் செயலாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையோ,பொதுச் சபையோ அல்லது அதன் துணை நிறுவனமான மனித உரிமைகள் பேரவையோ மனித உரிமை மீறல்கள் குறித்து குற்றஞ்சாட்டவோ அல்லது எந்தவிதமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு அதிகாரமளிக்கவோ இல்லை என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல் இலங்கை நிலைவரம் பற்றி இடம்பெறவும் இல்லை. மேலும், எந்த நாட்டினதும் உள்ளக நீதிபரிபாலனத்தில் சம்பந்தப்பட்ட விடயங்களில் தலையிடுவதற்கு அதிகாரமளிக்கும் ஏற்பாடு எதுவும் சாசனத்தின் 7 ஆவது அத்தியாயத்தில் இடம்பெறவில்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தின்படி சமாதானத்திற்கு அச்சுறுத்தல்,சமாதான மீறல்கள் அல்லது ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஏதுமிருப்பின் முக்கியமாக சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணும் பொருட்டு பாதுகாப்புச் சபைக்கு மட்டுமே தலையிடும் உரிமை உண்டு.
நிபுணர்கள் குழுவை நியமிப்பதென்ற யோசனை இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் அயராத முயற்சிகளுக்கு நன்மைக்குப் பதிலாகத் தீங்கையே விளைவிக்குமென்ற முடிவுக்கு அணிசேரா நாடுகள் வந்துள்ளன என்றும் செயலாளர் நாயகம் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறார் என்றும் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேசிய உடைமை, தலைமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கை அதன் சொந்த உள்ளூர் நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய இடைவெளியையும் காலத்தையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புவதாக அணிசேரா நாடுகள் தெரிவித்துள்ளன. அதற்கு உத்தியோகபூர்வ பதில் என்ன என்று ஐக்கிய நாடுகள் பேச்சாளரிடம் ஐ.பி.எஸ்.கேட்டபோது, கடித மூலம் பதிலளிக்க தாங்கள் யோசிப்பதாகவும் தற்போதைக்குத் தம்மால் எதுவும் கூற முடியாதிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை ஆயுதப் படைகள், விடுதலைப்புலிகள் ஆகிய இருதரப்பினராலும் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையையடுத்தே செயலாளர் நாயகம் நிபுணர்கள் குழுவை நியமிக்கத் தீர்மானித்திருக்கலாம்.
யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் விரும்பியோ,விரும்பாமலோ சிவிலியன்களைக் கொன்றிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆயுதப் படைகளும் கிளர்ச்சிவாதிகள் சரணடையும்போது அவர்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமேயானால் அது யுத்தக் குற்றச் செயலாகக் கணிக்கப்படும். ஏனைய நாடுகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஆயுதப் போராட்டங்களில் பாரிய மனிதப் பேரழிவுகளும் இராணுவ நடவடிக்கை காரணமாகப் பெருமளவிலான சிவிலியன்கள் படுகொலைகளும் இடம்பெற்றும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதிருப்பதால் இலங்கை மீதான விசாரணை முன்னொரு போதும் இல்லாததும் தேவையற்றதுமாகும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த அறிக்கையொன்றில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாலும் இலங்கைக்கு எதிரான சில தன்னார்வ நிறுவனங்களாலும் தவறாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சுமத்தப்பட்டவையாகும் என்று தெரிவித்திருந்தார். கடந்த வியாழக்கிழமை செயலாளர் நாயகம் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உத்தேச நிபுணர்கள் குழு அமைக்கவிருப்பது பற்றித் தெரிவித்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தாம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தங்கள் இருவருக்கும் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து மேற்கொண்டு நடவடிக்கையெடுப்பது, இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையில் முன்னேற்றம் காண்பது,பொறுப்புச் சொல்லும் நடைமுறையை ஏற்படுத்திக்கொள்வது ஆகியன இந்தக் கலந்துரையாடலில் இடம்பெற்றன என்று அவர் கூறினார். கடந்த வருடம் தாம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் கைச்சாத்திட்ட கூட்டறிக்கையில் அவர் இணக்கம் தெரிவித்த விடயங்களில் முன்னேற்றம் காணப்படாதிருப்பது குறித்து தாம் கவலை கொண்டுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இது பற்றியும் தாம் ராஜபக்ஷவுடன் தொலைபேசி உரையாடலின்போது பேசியதாக அவர் மேலும் கூறினார். இலங்கையின் பொறுப்புச் சொல்லும் தன்மையை நிலைநாட்டுவது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றித் தமக்கு ஆலோசனை கூறுவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது பற்றிய தமது யோசனையை ராஜபக்ஷவுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தியதாகவும் செயலாளர் நாயகம் கூறினார்.
இதற்காக ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோவை விரைவில் இலங்கைக்கு அனுப்புவது குறித்து தாங்கள் இருவரும் இணங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.ஆனால், அந்த விஜயமும் தற்போது பின்போடப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நிபுணர்கள் குழு உறுப்பினர் எவரும் இலங்கைக்குவர அரசாங்கம் அனுமதிப்பதாக இல்லை.
-Thinakural -
|