|
எம்ஜிஆரைப் பின்தொடர்தல்: நடிகர்களின் கவனத்திற்கு...
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
தமிழ்நாட்டில் வாழ்வதை விட மிகவும் சுவாரஸ்யமான விஷயம் உலகில் வேறெதுவும் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதுவும் தமிழ்நாட்டின் அரசியலை தொடர்ந்து கவனித்து வருவது, அனைத்து விஷயங்களும் சரிசமமாகக் கலந்த ஒரு மசாலாப் சினிமாவைப் பார்ப்பது போல் உள்ளது. திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைவது அதிகரிக்க, அதிகரிக்க... திரைப்படத்திற்குரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் திருப்பங்கள் தமிழக அரசியலிலும் நுழைந்துவிட்டது.
சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். நடிகர் விஜய்க்கு ஏறத்தாழ 3500 ரசிகர் மன்றங்களும், அவற்றில் 9.5 லட்சம் உறுப்பினர்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் விஜய் தனது ரசிகர்களுக்கிடையே தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படையாக அறிவித்தார். பிறகு விஜய் ராகுல்காந்தியை சந்தித்ததும் விஷயம் மேலும் சூடு பிடித்தது. விஜய் பல்சுவை வார இதழ்களின் அட்டைகளிலிருந்து, அரசியல் புலனாய்வு இதழ்களின் அட்டைகளுக்கு இடம் பெயர்ந்தார். ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வரும்போது காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தும் கூட இக்கட்டுரை எழுதப்படும் நேரம் வரையிலும் விஜய் இன்னும் காங்கிரசில் சேரவில்லை. இருப்பினும் விஜயகாந்த், சரத்குமார் ஆகிய நடிகர்களைத் தொடர்ந்து விஜயும் அரசியலில் நுழைவது உறுதி என்று கூறப்படுகிறது.
வட மாநிலங்களில் எல்லாம் நடிகர்கள் அரசியலில் சேர நினைத்தால், ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து எம்பி ஆகிறார்கள்(ஏன் யாரும் எம்எல்ஏ ஆவதில்லை?) வாய்ப்பு கிடைத்தால் மத்திய மந்திரி. இத்துடன் அவர்களுடைய அரசியல் ஆர்வங்கள் முடிந்துவிடுகிறது. தமிழ்நாட்டில்தான் நடிகர்கள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தால், உடனே புதுக்கட்சி ஆரம்பித்து விடுகின்றனர். 2011, 2016, 2021 வரைக்கும் போஸ்டர்களில் முதலமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சரானதால், தமிழ்நாட்டு நடிகர்களின் இலக்கு என்பது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தோடு நின்றுவிடாமல், அதையும் தாண்டி முதலமைச்சர் வரை நீள்கிறது.
இவ்வாறு நடிகர்கள் நினைப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. நாம் ஒவ்வொருவருமே, இப்படி ஆகவேண்டும், அப்படி ஆக வேண்டும் என்று ஏராளமான கனவுகளுடன், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள்தான். நடிகர்கள் அவர்களுடைய நிலையிலிருந்து, அவர்களுக்கான கனவுகளில் இருக்கிறார்கள். இந்தக் கனவுகளுக்கெல்லாம் அடிப்படை எம்ஜிஆர்தான். ஆனால் எம்ஜிஆர் வெற்றி பெற்ற சூழலுக்கும், இவர்களின் தற்போதைய அரசியல் பிரவேச சூழலுக்கும் அடிப்படையாக பல வேறுபாடுகள் உள்ளன. எனவே எம்ஜிஆர் எந்தச் சூழலில் வெற்றி பெற்றார் என்பதை நுணுக்கமாகப் பார்க்கவேண்டியுள்ளது. எம்ஜிஆர் வெற்றி பெற்றதற்கு, அவருக்கு சினிமா மூலமாகக் கிடைத்த பாப்புலாரிட்டி ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே அவருடைய வெற்றிக்கு காரணமல்ல. வேறு சில மிக முக்கியமான காரணங்களும் உள்ளன.
முதலாவதாக அவர் 1977 சட்டமன்றத் தேர்தலில் வென்ற சூழலைக் கவனிப்போம். 1972இல் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பிக்கிறார். அதிமுகவுக்கு முன்பு வரை காங்கிரசும், காங்கிரஸ் 1969இல் உடைந்த பிறகு காமராஜரின் நிறுவன காங்கிரசும் திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வந்தது. அதே சமயத்தில் எம்ஜிஆரின் அதிமுகவும் வளர்ந்துகொண்டே வந்தது. அப்போது நடைபெற்று வந்த திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு பரவலான அதிருப்தி இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில் காமராஜர் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்துவிடுகிறார். 1976 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது. காமராஜர் இறந்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்குப் பிறகுதான் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. காமராஜர் இல்லாத சூழ்நிலையில், அப்போது மக்களிடையே ஏற்கனவே மிகவும் புகழ் பெற்றிருந்த எம்ஜிஆர் மட்டும்தான் கலைஞருக்கு மாற்றாக மக்களால் காணப்பட்டார். இந்தச் சூழ்நிலையில்தான் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். இதே காமராஜர் உயிரோடு இருந்திருந்தால், இந்த வெற்றியை எம்ஜிஆர் பெற்றிருப்பாரா என்பது ஆய்வுக்குரிய விஷயமே.
இவ்வாறு கூறும்போது, காமராஜர் உயிரோடு இருக்கும்போது நடைபெற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் மாயத் தேவர் எப்படி வெற்றி பெற்றார் என்று கேள்வி எழலாம். திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி, கணிசமான அளவு தேவரின மக்களைக் கொண்ட தொகுதி ஆகும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும், காங்கிரசுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தேவரின மக்கள் பாரம்பரியமாக காங்கிரஸ்க்கு எதிராக வாக்களித்து வந்தார்கள். அதனால்தான் திமுகவின் மீது அதிருப்தி நிலவிய சூழலில், காமராஜரையும் தேவரின மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ள சூழ்நிலையில் எம்ஜிஆரால் வெற்றி பெற முடிந்தது. இருந்தபோதிலும் கூட அத்தேர்தலில் காமராஜரின் நிறுவன காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பெற்றதிலிருந்தே, காமராஜருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம்.
ஆக... காமராஜர் இறந்த பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் கலைஞருக்கு மாற்றாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக செல்வாக்குப் பெற்ற தலைவராக எம்ஜிஆர் மட்டுமே இருந்ததாலேயே அவரால் எளிதில் வெற்றி பெறமுடிந்தது. காமராஜர் உயிரோடு இருந்து, அவர் திமுக எதிர்ப்பு ஒட்டுகளைப் பிரித்திருந்தால் அத்தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாகக் கூட வந்திருக்கலாம். ஏனெனில் 1971இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காமராஜரின் நிறுவன காங்கிரஸ் தோற்றிருந்தாலும் கூட, திமுகவின் மீது பெரிய அதிருப்தியில்லாத அந்தச் சூழ்நிலையிலும் 35 சதவீத வாக்குகளை காமராஜர் பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது. எனவே காமராஜரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை ஏற்கனவே கட்சி ஆரம்பித்து நடத்தி வந்த எம்ஜிஆர் மிகச் சுலபமாக நிரப்பினார்.
ஆனால் இன்று நிலைமை எப்படி உள்ளது? விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து இத்தனை தேர்தல்களைச் சந்தித்து, குறிப்பிடத்தக்க அளவு ஓட்டுகளை வாங்கினாலும் கூட ஏன் அவரால் எம்ஜிஆர் போல் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை? ஏனென்றால் இங்கு திமுகவுக்கு மாற்றாக, அதிமுக என்ற வலுவான கட்சி ஏற்கனவே இருந்து வருகிறது. வேறு மாற்று இல்லாத பட்சத்தில்தான் பெரும்பாலான மக்கள் புதிய தலைவர்களின் பின்னால் அணிவகுப்பார்கள்.
இதைப் பற்றி மேலும் தெளிவாக அறிந்துகொள்ள, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச அரசியலுடன் இந்நிலையை ஒப்பிட்டுப் பார்ப்போம். 1982இல் என்டிஆர் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தபோது, காங்கிரசுக்கு மாற்றாக, அங்கு அனைத்து மக்களுக்கும் தெரிந்த வேறு தலைவரே இல்லை. அதனால்தான் காங்கிரஸ் மீது அதிருப்தியுற்றிருந்த மக்கள் 1983இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்டிஆருக்கு வாக்களித்தனர். கடந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு என்டிஆருக்கு இணையாக கூட்டம் கூடியது. அடுத்து அவருடைய ஆட்சிதான் என்று பலரும் நினைத்தனர். சிரஞ்சீவியை மிகவும் குறைவாக மதிப்பிட்டவர்கள்கூட அவர் குறைந்த பட்சம் 50 தொகுதிகளில் ஜெயிப்பார் என்று கணித்தனர். ஆனால் அவர் 18 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தார். ஏனெனில் என்டிஆர் கட்சி ஆரம்பித்தபோது, அங்கு காங்கிரஸ்க்கு மாற்றாக வேறு தலைவர் இல்லை. ஆனால் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோது அங்கு காங்கிரஸ்க்கு மாற்றாக ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இருந்து வருகிறது. அதனால்தான் சிரஞ்சீவியால் பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.
ஆக... நடிகர்கள் உடனே நாடாள்வது என்பது, மக்கள் அதிருப்தியுற்றிருக்கும் ஆளும் கட்சிக்கு மாற்றாக, வேறு கட்சிகளோ, வேறு தலைவர்களோ இல்லாத சூழ்நிலையில் மட்டும்தான் சாத்தியமாகும். ஏனெனில் பாரம்பரியமாக மக்கள், இது இல்லையென்றால் அது என்று ஓட்டுப் போட்டுப் பழகியுள்ளனர். இது இல்லையென்றால் எது என்ற கேள்வி வரும்போதுதான் நடிகர்களின் கட்சியைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிப்பார்கள். இந்த சமயத்தில்தான் நடிகர்கள் சினிமா மூலமாகப் பெற்ற பாப்புலாரிட்டி அவர்களுக்கு உதவுமே தவிர, வேறு மாற்றுக் கட்சிகள் இருக்கும் சூழலில் நடிகர்களுக்கு உடனடியாக வாய்ப்பு இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம், தேர்தலுக்கு சற்று முன்பு நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ஜெயிப்பதெல்லாம் சுத்தமாக கதைக்காகாது. கட்சி ஆரம்பித்த உடனேயே மக்கள் அவர்களை அரசியல் தலைவர்களாகப் பார்த்து விடமாட்டார்கள். அவர் தொடர்ந்து அரசியலில் நீண்ட காலம் இருந்து வருபவராக இருக்கவேண்டும். இந்த நடிகர்கள் தங்கள் ஆதர்சமாகக் கருதும் எம்ஜிஆரையே இதற்கு மிகச்சரியான உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
எம்ஜிஆர் 1972இல் தனிக்கட்சி ஆரம்பிப்பதற்குப் பல ஆண்டுகள் முன்பே, 1953லேயே திமுகவில் சேர்ந்துவிட்டார். அப்போது நாம் பிற்காலத்தில் முதல்வராவோம் என்ற எண்ணத்தில் எல்லாம் அவர் திமுகவில் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்போது அவர் ஒரு புகழ் பெற்ற நடிகரும் அல்ல. 1954இல் மலைக்கள்ளன் திரைப்படம் வெளியாகி, அது பெரும் பெற்றி பெற்ற பின்னரே எம்ஜிஆர் ஒரு ஸ்டார் நடிகரானார். அப்போது திமுக இளைஞர்களிடையே செல்வாக்குப் பெற்ற கட்சியாக வளர்ந்து வந்த சூழலில், அக்கட்சியில் சேர்வது, தனது சினிமா வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்று நினைத்திருக்கலாம். அல்லது பொதுவாக சுதந்திரத்துக்குப் பிந்தைய இளைய தலைமுறையினர் மத்தியில் அக்காலத்தில் பரவலாக பெரும் அரசியல் ஆர்வம் இருந்து வந்தது. (அத்தலைமுறையினருக்கு இன்னும் அந்த ஆர்வம் இருக்கிறது. என் அப்பாவுக்கு 63 வயது ஆகிறது. இன்னும் திருச்சியில் தலைவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து அரசியல் கூட்டங்களுக்கும் கட்சி வித்தியாசம் பாராமல் ஆஜராகிவிடுவார்.) எனவே பொதுவாக அந்தத் தலைமுறையினருக்கு இருந்த இயல்பான அரசியல் ஆர்வத்தால்கூட அவர் திமுகவில் சேர்ந்திருக்கலாம்.
திமுகவும், எம்ஜிஆரும் சேர்ந்து ஒன்றாக வளர்ந்தார்கள். எம்ஜிஆரால் திமுகவிற்கு எம்ஜிஆர் ரசிகர்கள் கிடைத்தார்கள். திமுகவால் எம்ஜிஆருக்கு திமுக தொண்டர்கள் கிடைத்தார்கள். எம்ஜிஆர் கட்சியில் படிப்படியாக முன்னுக்கு வந்து, 1969இல் கலைஞர் முதலமைச்சரான பிறகுதான் திமுகவின் பொருளாளராகிறார். 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்வு பெற்றார். இவ்வாறு எம்ஜிஆர் ஒரே சமயத்தில் சினிமா, அரசியல் என்று இரட்டைக் குதிரைகளில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருந்தார். இன்று கட்சி ஆரம்பித்திருக்கும் பிற நடிகர்கள் போல திரையுலகில் உச்சத்தை எட்டிவிட்டு, அடுத்த கட்டமாக அரசியலுக்கு வரவில்லை. அவர் சினிமாவில் புகழ் பெறுவதற்கு முன்பே தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டார். அதனால் மக்கள் அவரை வெறும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு அரசியல் தலைவராகவும் பல ஆண்டுகளாகப் பார்த்து வந்தனர்.
ஆதலால் நண்பர்களே... பலரும் நினைப்பது போல் எம்ஜிஆர் ஒன்றும் பாமர மக்களின் சினிமா மோகத்தால் மட்டுமே வெற்றி பெற்றவரல்ல. எம்ஜிஆர் புத்திசாலித்தனமாக தனது முப்பத்தாறாவது வயதிலேயே, இளைஞர்களிடையே செல்வாக்குப் பெற ஆரம்பித்திருந்த ஒரு வளரும் அரசியல் கட்சியில் சேர்ந்து(அவர் காங்கிரசில் இருந்திருந்தால், அங்கு ஏற்கனவே இருந்த பெரிய தலைவர்களுக்கு மத்தியில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்காது), அக்கட்சியோடு சேர்ந்து வளர்ந்து, தன்னை ஒரு அரசியல்வாதியாகவும் முன்னிறுத்திக்கொண்டு, மிகச்சரியாக அக்கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைய ஆரம்பித்த சமயத்தில் தனியாகப் பிரிந்து, கலைஞருக்கு மாற்றாக தமிழகத்தில் வேறு தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் தனது அறுபதாவது வயதில் வெற்றி பெற்று முதலமைச்சரானவர்.
எனவே ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு கட்சியை ஆரம்பித்து, உடனடியாக முதலமைச்சராகும் ஜீபூம்பா வேலையெல்லாம் நடக்காது. நீண்ட காலம் மக்கள் மத்தியில் ஒரு அரசியல்வாதியாக முன்னிறுத்திக்கொண்டு, காலம் கனிந்து வரும் போது மட்டுமே வெற்றியை அடைய முடியும். சினிமா நடிகர் என்பது சட்டென்று மக்களுக்கு அடையாளம் தெரிவதற்கான ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே. ஆனால் விசிட்டிங் கார்டு மட்டுமே வெற்றியைத் தேடித் தராது. அதற்காக சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறவில்லை. வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள் போன்றோர் அரசியலுக்கு வருவது போல் நடிகர்களும் அரசியலுக்கு வருவதற்கான உரிமை உள்ளது. ஆனால் வெற்றிக்காக நெடுங்காலம் உழைப்பதற்கான மனோநிலையுடன் வரவேண்டும்.
நன்றி: உயிர்மை
|
|