|
புலிகளின் வழியில் தமக்கு இறுதி அத்தியாயம் எழுதும் தமிழ்க்கூட்டமமைப்பு
-ஈழப்பிரியன்
விடுதலைப் புலிகள் இப்போது இல்லை என்றாலும் தமிழ்க் கூட்டமைப்பினர் அவர்களின் வழியொற்றியே நடக்கின்றார்கள் என்பதை இன்று பலரும் உணரத் தொடங்கியிருக்கின்றனர். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் என்ன நடந்தது?
ரணில் விக்கிரமசிங்க, தான் வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் பிரச்னைக்கு நோர்வே உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காண்பேன் என்றார். மறுபுறுத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச, சிங்கள இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி., சிஹல உருமய போன்றவற்றின் துணையுடன் இனப்பிரச்னை பற்றிய எந்தவித அறிவிப்பும் இன்றி களத்தில் இறங்கியிருந்தார்.
இரு வேட்பளர்களும் சிங்களவர் மத்தியில் சரிக்கு சரியான போட்டியாளர்களாக களத்தில் இருந்தனர்.தமிழ் மக்களின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கப்போவதாக கருதப்பட்டது. தமிழ் மக்களின் வாக்கு நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தான் விழும் என்பது எந்தக் குழந்தைக்கும் தெரிந்திருந்தது.
தமிழ் மக்களின் வாக்குகளின் துணையுடன் ரணில் வெல்வது உறுதி என்றான நிலையில் புலிகள் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கானதல்ல, அதனை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும்!
இதுவே புலிகளின் அறிவிப்பு. இந்த அறிவிப்புக்காக புலிகள் மகிந்தவிடம் பெற்றது எத்தனை கோடி என்பதை பின்னர் அறியமுடிந்தது. அதாவது தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கு போகாததால் மகிந்த வெற்றியடையமுடிந்தது.
ஆக புலிகளுக்கு தேவை இனப்பிரச்னைக்கான தீர்வாக இருந்திருந்தால் அவர்கள் ரணிலை வெற்றியடையச் செய்திருப்பார்கள்.
அவர்களுக்கு அப்போதைய தேவை மீண்டும் ஒரு சண்டை.
சண்டையின்றி இருப்பதால் சோர்வடைந்திருந்த போராளிகளுக்கு உற்சாகம் கொடுக்கவேண்டும். அதற்காக ஒரு சண்டை வேண்டும். அவர்களின் இந்த முடிவு இப்போது எதில் முடிந்திருக்கின்றது என்பது தெரிந்ததே. நிச்சயம் தான் எடுத்த தவறான இந்த முடிவுக்காக பிரபாகரன் தனது கடைசிக் காலத்திலாவது வருந்தியிருப்பார்.
இப்போது தமிழ்க் கூட்டமைப்பினரும் புலிகளின் வழியையே பின்பற்றியிருப்பதாகத் தெரிகின்றது.இன்றைய தேர்தல் களத்தில் ஒரு புறம் மகிந்த இனப்பிரச்னைக்கான தீர்வு விடயத்தில் மிகத் தெளிவான அறிவிப்போடு களத்தில் இருக்கிறார்.
தன்னுடன் கடந்த காலத்தில் இருந்த இனவாதக் கட்சியான ஜே;.வி.பி.யை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மற்றைய இனவாதக் கட்சியான சிஹல உருமயவை, இனப்பிரச்னை தீர்வு விடயத்தில் தனது கருத்தை ஏற்கச் செய்துவிட்டு, 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என்பதோடு மாத்திரமன்றி, மாகாண சபை இணைந்து மேல்சபை (செனட் சபை) என்ற அறிவிப்பைக்கூட வெளியிட்டுவிட்டு களத்தில் இருக்கிறார்.
இவரை எதிர்த்து நிற்கும் சரத் பொன்சேகா, இலங்கை ஒரு சிங்களவர் நாடு என்கின்ற தெளிவான கொள்கையோடு நிற்கிறார். அவருடன் ஜே.வி.பி. சகலதிலும் கைகோர்த்து நிற்கின்றது. அவரை ஆதரிக்கும் மனோ கணேசன்; போன்றவர்கள் கூட இனப்பிரச்னைக்கு அவர் தீர்வு காணமாட்டார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
ஆனாலும் அவரைத்தான் ஆதரிப்போம் என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.தமிழ்க் கூட்டமைப்பின் இந்த முடிவே அவர்களுக்கு இறுதி அத்தியாயத்தை எழுதப்போகின்றது. பிரபாகரன் செய்தது தவறு என்று கடைசிக்காலத்தில் பிரபாகரன் உணர்ந்திருப்பர் என்று மேலே குறிப்பிட்டேன். ஆனால் அவர் செய்தது தவறு என்பதை சம்பந்தன் இப்போது உணர்ந்து கொண்டதுபோல தமிழ் மக்களும் இப்போது காலம்தாழ்த்தி உணர்ந்திருப்பார்கள்.
தமிழ்க் கூட்டமைப்பின் தற்போதய முடிவு தவறானது என்பதை தமிழ் மக்கள் நிச்சயம் இப்போதே உணர்ந்துகொள்வார்கள். அவர்கள் இதனை உணர்ந்துகொள்வதன் மூலம் மகிந்தவுக்கு வாக்களிப்பார்கள். அதன்மூலம் தமிழ்க் கூட்டமைப்பு காணாமல் போய்விடும்.
புலிகளின் வழியில் தமிழ்க் கூட்;டமைப்பு!
|