|
அதிகரிக்கும் நிலநடுக்கங்களும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும்
பூகம்ப ஆபத்து வலயங்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களையும் தாண்டி உலகில் தற்போதெல்லாம் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதை நாம் அறிகிறோம். புவியின் கடந்த கால இயற்கை அனர்த்தப் பதிவுகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து நிலநடுக்கங்கள் உலகில் பரவலாக அதிகரித்து வருவது நன்கு தெரிகிறது.
அண்மைக்கால பூகம்பத் தரவுகள் அச்சம் தருவனவாக உள்ளன. ஹெய்ட்டியில் இடம்பெற்ற மோசமான பூகம்பம் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மனித உயிர்களைப் பலி கொண்டது. அங்கு மக்களின் அவலம் இன்னுமே தணியவில்லை.
ஹெய்ட்டி பூகம்ப அனர்த்தத்தின் துயரம் அடங்குவதற்கிடையில் சிலி, துருக்கி ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து பூகம்பங்கள் ஏற்பட்டன. சிலியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் இருநூறு ஆகும். துருக்கியில் அறுபதுக்கு மேற்பட்டோர் மரணமடைந்தனர். இந்நாடுகளில் காயமடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதம் கணக்கிட முடியாதது.
இவையெல்லாம் தவிர கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரனர்த்தம் ஏற்படக் காரணமாகவிருந்த பூகம்பத்தையடுத்து இந்து சமுத்திரப் பிரா ந்தியத்தில் அமைந்துள்ள இந்தோனேஷியாவில் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் இதுவரை உணரப்பட்டுள்ளன. சமீப காலமாக ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், அந்தமான் தீவுகள் போன்ற பல்வேறு பிராந்தியங்களில் தொடர்ச்சியாக புவிநடுக்கங்கள் பதியப்பட்டுள்ளன.
இத்தகைய நிலையில் நேற்று வெளியான தகவல் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இரு தினங்களில் உலகின் வெவ்வேறு பத்து பிராந்தியங்களில் நிலநடுக்கங்கள் பதியப்பட்டுள்ளன. மேற்படி பத்து பிராந்தியங்களையும் நோக்குமிடத்து கூடுதலான இடங்கள் ஆசியாக் கண்டத்தினுள்ளேயே அடங்குகின்றன.
கடந்த 14ம் திகதி ஜி. எம். ரி. நேரத்தின்படி 08.08 இல் இருந்து மறுநாள் 15ம் திகதி 02.57 வரையான காலப் பகுதியிலேயே மொத்தமாக பத்து நில அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரு தினங்களில் வெவ்வேறு பிராந்தியங்களில் பத்து இடங்களில் புவி நடுக்கம் ஏற்படுவதென்பது உண்மையிலேயே அசாதாரணமானது தான்... இதனையிட்டு அலட்டிக் கொள்ளாமலிருக்கவும் முடியாது. அதுவும் இப்புவி நடுக்கங்களிலொன்று இலங்கைக்கு சமீபமாகவுள்ள கடலுக்கடியில் நிகழ்ந்துள்ளதனால் நாமும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கைக்குத் தெற்காகவும் தென்கிழக்காகவும் உள்ள இரு திசைகளு க்கு இடையே கொழும்பில் இருந்து ஆயிரத்து நூற்றுப் பதினைந்து கிலோ மீற்றர் (730 மைல்) தொலைவில் நேற்றைய நில அதிர்வு பதியப்பட்டுள்ளது. கடலுக்கடியில் பத்து கிலோ மீற்றர் ஆழத்தில் மேற்படி நில அதிர்வு இடம்பெற்றுள்ளது. ஜி. எம். ரி நேரத்தின்படி 14ம் திகதி 20.33 மணியளவில் (இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி) மேற்படி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் பருமன் குறைவென்பதால் சுனாமி தொடர்பான எச்சரி க்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனாலும் புவியின் தற்போதைய அசாதாரண நிலைமை தொடர்பாக எதிர்காலத்தில் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
பூகம்பங்கள் அடிக்கடி இடம்பெறுவதற்கான காரணங்கள் குறித்து பூகற்ப வியலாளர்கள் அறிவியல் பூர்வமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். புவியின் ஆழத்திலுள்ள நிலத்தட்டுகளின் அசைவி னாலேயே பூகம்பம் ஏற்படுகிறதென்பது மேலோட்டமான விளக்கமாகும். நிலத்தட்டுகளின் அசைவுக்கான காரணம் குறித்து பூகற்ப வியலாளர்கள் விரிவான விளக்கங்களைக் கூறுகின்றனர்.
இவற்றையெல்லாம் தவிர பூகம்ப அபாய வலயங்களையும் தாண்டி த ற்போதெல்லாம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதுதான் எச்சரிக்கை கொள்ள வேண்டிய விடயமாகிறது. பூகம்ப மற்றும் சுனாமி அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டுமென்பதையே தற்போதைய நிலைமை உணர்த்துகிறது.
தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடைந்துள்ள ஜப்பான் போன்ற சில நாடுகளும் பூகம்ப அபாய வலயத்தினுள் உள்ளடங்குகின்றன. எனினும் அந்நாடுகளில் பூகம்ப அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதில்லை. அனர்த்தத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் அந்நாடுகள் இருப்பிடங்களை அமைத்து வருவதாலேயே உயிரிழப்புகள் பெருமளவில் குறைந்துள்ளன. அந்நாடுகளில் தற்போது நிர்மாணிக்கப்படுகின்ற நவீன கட்டடங்களும் பூகம்ப அதிர்வை உள்வாங்கக் கூடிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே நிர் மாணிக்கப்படுகின்றன.
சுனாமி அனர்த்தத்தினால் இலங்கை அடைந்துள்ள பாதிப்பு விபரிக்க முடியாதது. ஆனால் சுனாமியின் வாயிலாக எமது நாடு பெற்றுக் கொண்ட படிப்பினையும், அதனால் உண்டான அனர்த்த முன்னெச் சரிக்கை ஏற்பாடுகளும் உலகினால் பாராட்டப்படுகின்றன. அனர்த்த முன்னெச்சரிக்கையைப் பொறுத்த வரை இலங்கையின் முன்னேற்றம் அளப்பரியது.
சுனாமி அனர்த்தம் தொடர்பாக நாம் எத்தனை தூரம் முன்னேற்றகரமான விழிப்புணர்வைப் பெற்றுக் கொண்டோமோ அதே போன்ற விழிப்புணர்வை எதிர்காலத்தில் புவிநடுக்கம் தொடர்பாகவும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம். புவியின் இன்றைய சீரற்ற தன்மை இந்த எண்ணத்தையே தோற்றுவிக்கிறது.
|