|
அன்று அண்ணா எடுத்த சரியான முடிவு!
-உ.ரா.வரதராசன்
அறிஞர் அண்ணா என்று தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட அண்ணாவின் நூற்றாண்டு விழா நிறைவடையும் நாள் செப்டம்பர் 15, 2009. அவர் மறைந்து நாற்பதாண்டுகள் ஆன பின்னரும், அண்ணா எனும் அவரது பெயர், தமிழக அரசியலில் ஒரு மந்திரச் சொல்லாக நிலைபெற்று நீடிக்கிறது. தமிழ்நாட்டின் அரசியலில் ஓர் அதிரடியான மாற்றத்தை நிகழ்த்தி, காங்கிரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றி, 1967ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சாதனையாளரான அண்ணா, மிகக் குறுகிய காலமே அப்பதவியில் நீடித்து 1969 பிப்ரவரி 3ம் நாள் இயற்கை எய்த நேரிட்டது. தன்னோடு இயக்கத்தில் தளபதியாக வலம் வந்த அண்ணாவின் மறைவு குறித்துத் தந்தை பெரியார் குறிப்பிட்டார்: “நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த பெரிய - பரிகாரம் செய்ய முடியாத துக்க சம்பவமாகும்” என்றார் அவர்.
அண்ணாவின் அரசியல் வாழ்க்கை சற்றொப்ப 35 ஆண்டு காலமே நீடித்தது. இதில் அவர் தந்தை பெரியாரின் தலைமை ஏற்று முதலில் சுயமரியாதை இயக்கத்திலும் அதைத் தொடர்ந்து நீதிக்கட்சியிலும், பின்னர் திராவிடர் கழகத்திலும் செயலாற்றியது 1934 முதல் 1949 வரை; 1949ல் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கி அதன் வெற்றிப் பயணத்திற்கு அளப்பரிய பங்காற்றி, 1969ல் மறைந்தார். இந்த இரண்டு கட்டங்களிலும் தமிழகத்தின், இந்தியத் துணைக்கண்டத்தின் - அரசியல் நிகழ்வுகளில் தனது தனி முத்திரையைப் பதித்த வரலாற்றுச் சாதனையாளர் அவர்!
இன்று திராவிட இயக்கக் கட்சிகள், நீதிக்கட்சியின் பாரம்பரியத்தை விதந்து போற்றி அதற்கு வாரிசுரிமை கொண்டாடுகின்ற வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் பெரியாரும், அண்ணாவும் நீதிக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டது ஒரு வரலாற்று நிகழ்வே யென்றாலும், அந்த நீதிக்கட்சியின் தலைமையைப் பற்றிய அவர்கள் கருத்தோட்டம் வேறாகவே இருந்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளையோ, இயக்கத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. பார்ப்பனரல்லாதோர் நலன்களைப் பாதுகாப்பது என்பது மட்டுமே நீதிக்கட்சிக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் இடையில் நிலவிய ஓரம்சக் கருத்தொற்றுமை. அந்த ஒரே காரணத்துக்காகத்தான் சோர்ந்து - தளர்ந்து போயிருந்த நிலையில் நீதிக் கட்சித் தலைவர்கள், வேறு வழியில் லாமல் பெரியாரிடம் நீதிக்கட்சியின் தலைமையை 1938ம் ஆண்டு ஒப் படைத்தனர்.
அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களை அறப்போர் ஏட்டில், அண்ணா கிண்டலாக “அரண்மனைக்காரர்கள், சீமான்கள், துரைமார்களின் செல்லப் பிள்ளைகள், சரிகைக்குல்லாக்காரர்கள்” என்று வர்ணனை செய்ததை தோழர் பி.ராமமூர்த்தி, திராவிட இயக்கம் பற்றிய தனது நூலில் சுட்டிக் காட்டியிருந்தார். “சுயலாபம் தேடிக்கொள்வது ஒன்றே அரண்மனையில் அரசியல் நடத்திய அந்த அபூர்வ மனிதர்களின் நோக்கம்” என்று 1948ல் அண்ணா எழுதியதையும் பி.ஆர்.பதிவு செய்திருந்தார்.
1944ம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றம் செய்யப்பட்டது. நீதிக்கட்சியின் தலைமையில் இருந்தவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அளித்து ‘கவுரவப்படுத்திய’ ராவ்-பகதூர், திவான் பகதூர், சர் போன்ற பட்டங்களைத் துறக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர் அண்ணா. இந்தத் தீர்மானத்தை ஏற்க மறுத்து நீதிக்கட்சிப் பிரமுகர்கள் பலர் கட்சிக்கே முழுக்குப் போட்டுவிட்டுப் போனார்கள். “இந்த சேலம் மாநாட்டோடு நீதிக்கட்சியின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது, அதன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடிக்க முன்நின்றவர் அண்ணாதுரை” என்று பி.ஆர். மிகச்சரியாக அண்ணாவின் பங்களிப்பை நினைவு கூர்ந்து எழுதியது குறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகத்தில் தந்தை பெரியாருடன் இணைந்து செயலாற்றிய ஆண்டுகளில் அண்ணா, திராவிடநாடு கோரிக்கையை வலியுறுத்தி அதன் தத்துவவாதியாகத் தன் எழுத்தையும், பேச்சையும் பயன்படுத்தித் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். 1944 முதல் 1949 வரையிலான காலத்தில் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகச் செயலாற்றியவர் அண்ணா. ஆனால், 1947 இந்திய விடுதலையின் போது, ஆகஸ்ட் 15ஐ துக்கநாளாகக் கொண்டாட தந்தை பெரியார் முற்பட்டபோது, அண்ணா அதை ஏற்கவில்லை. “ஆகஸ்ட் பதினைந்து” என்ற தலைப்பிட்டு திராவிட நாடு 10.8.1947 தேதிய இதழில் அண்ணா எழுதிய வரிகள் இவை:
“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, இந்திய சுதந்திர தினம், புதிய இந்திய சர்க்காரின் அமைப்புநாள்.
“வரலாற்றிலே இந்நாள் இடம் பெறுகிறது. அந்நாளிலே, இந்தியத் துணைக்கண்டத்திலே 200 ஆண்டுகளுக்கு மேலாகப் பறந்து கொண் டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொடி, பாகிஸ்தான், இந்தியா இரு வட் டாரங்களிலிருந்தும் இறங்குவதுடன், இரு இடங்களிலும் சுதந்திரக் கொடிகள் பறக்க விடப்படுகின்றன.
“நம்முடைய வீர இளைஞர்கள் மீது, இதுநாள் வரையிலே சுமத்தப்பட்ட பழிச்சொல், நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் என்பது.
“அந்தப் பிரிட்டிஷாரின் ஆட்சி முடியும்போது, நாம் துக்கம் கொண் டாடுவது இந்தப் பழிச்சொல்லை, நாமாகவே நம்மீது சுமத்தும்படி அவர் களை வற்புறுத்தி அழைப்பதாகும்.
“நமது வாழ்நாளில் நாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்க விரும் பாதவர்கள் - அது ஒழிய வேண்டும் என்ற நோக்கமுடையவர்கள் - காங் கிரசார் பழி சுமத்தியது போல நாம் பிரிட்டிஷாரின் அடிமைகளல்லர் என்பதை விளக்க நமக்கு இருக்கும் ஒருநாள், கடைசி நாள் ஆகஸ்ட் 15! நாம் ஏன் அச்சந்தர்ப்பத்தை இழந்து அழியாப் பழிச்சொல்லைத் தேடிக் கொள்ளவேண்டும்?”
தந்தை பெரியாரின் முடிவை மீறி இவ்வாறு நிலைபாடு எடுப்பதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தே அண்ணா இவ்வாறு முடிவுக்கு வந்தார். “இது கட்சிக் கட்டுப்பாட்டையும் தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்று கருதப்பட்டு, என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வருவதானாலும், ... என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான் சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனி அரசு என்னும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன்” என்று தன் நிலையை உறுதிபடத் தெரிவித்தார் அண்ணா. அவர் எதிர்பார்த்ததுபோலவே பெரியார் ‘இயக்கத்திலிருந்த அடங்காப்பிடாரிகளும் சுதந்திர நாள் என்று கும்மாளம் போட்டதாகவே வருணித்தார்.
இந்தக் கட்டத்தில் பெரியாருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட முரண்பாடு தான் முற்றி வளர்ந்து 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறப்புக்கு இட்டுச் சென்றது. பெரியார் தனது 70வது வயதில் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதற்கு அண்ணா உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்ததும், அவர்களை “துரோகிப்பட்டாளம்” என்று சொல்லி, அவர்கள் வெளியேறியதால் திராவிடர் கழகம் தூய்மைப்பட்டதாகப் பெரியார் கருத்துத் தெரிவித்தார்.
1949ல் திமுகவைத் தோற்றுவித்த பின்னர், அண்ணா தனக்கென்று ஒரு தனி அரசியல் பாதையை வகுத்துச் செயல்பட்டார். திராவிடர் கழகம் சமூக சீர்திருத்தத்துக்கான இயக்கம் மட்டுமே என்றும் தேர்தல்களத்தில் ஈடுபடுவதில்லை என்றும் நிலையெடுத்து இன்றளவும் அதைக் காத்து வருகிறது. ஆனால், 1952 தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், திமுக ஓர் அரசியல் கட்சியாக, சட்டமன்ற-நாடாளுமன்றத் தேர்தல் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்று அண்ணா முடிவெடுத்தார். அதற்கிணங்க 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத் திலும், மத்திய நாடாளுமன்றத்திலும் நுழைந்தது.
திமுக தனி அரசியல் கட்சியாக இயங்கத் தொடங்கிய பின்னரும் கூட “திராவிடத் தனி அரசு” என்கிற திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தே செயல்பட்டது. 1962 இந்திய - சீன எல்லைப் போர்க்காலத்தில், இந்தப் பிரிவினைக் கோரிக்கையைத் தொடர்ந்தால், இந்திய அரசியல் சட்டத்துக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான அரசியல் கட்சியாக நீடிக்க முடியாது என்ற நிலை எழுந்தது. அந்தத் தருணத்தில், நாட்டு ஒற்றுமையை முன்னிறுத்தி திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டவர் அண்ணா. இது திராவிட இயக்கம் எடுத்துத் தீரவேண்டிய அரசியல் முடிவாக ஆனது வரலாற்றுக் கட்டாயம். தாய்க்கழகமான திராவிடர் கழகமும், தனிநாடு கோரிக்கையைத் தொடரவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இன்றைக்கு திமுகவும் சரி, அதிலிருந்து பிரிந்து உருவான அதிமுகவும் சரி, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயலாற்றுகிற நிலை ஏற்பட்டுள்ளதற்கு, அன்று அண்ணா எடுத்த சரியான முடிவே அடித்தளம் இட்டது.
அண்ணா தலைமையிலான திமுக, மத்திய - மாநில ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்த அரசியல் போராட்டத்தை முனைப்பாக எடுத்துச் சென்றதன் பரிணாம வளர்ச்சியே 1967ல் தமிழ்நாட்டின் ஆட்சிப்பீடத்திலிருந்து அக்கட்சி தூக்கி எறியப்பட்டது. திமுக, அண்ணா தலைமையில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சிமாற்றத்தை நிகழ்த்துவதில் அண்ணாவுடன் இணைந்து செயல்பட்ட பெருமிதத்துக்குரிய பங்கை மார்க்சிஸ்ட் கட்சி தமிழகத்தில் ஆற்றியதும் நினைவில் நிறுத்தற்பாலது. அண்ணா வகுத்த காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் நிலைபாட்டை, அவரது மறைவுக்குப்பின்னர் இரண்டாண்டு களிலேயே திமுக கைவிட்டது என்பது தமிழக அரசியலில் எழுந்த வித்தியாசமான சூழல், அதுபற்றிய விவாதத்துக்கு இது தருணமாகாது.
அண்ணா, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராக, திமுகவின் பொதுச் செயலாளராகச் செயல்பட்ட காலம் முழுவதிலும், மத்திய அரசின் அதிகாரக் குவியலை எதிர்த்தும், மாநில சுயாட்சி உரிமை கோரியும், உறுதியாகக் குரல் கொடுத்தார். போராட்டக் களம் கண்டார்; கண் மூடுவதற்கு முன்பாகத் தனது கடைசி மூச்சாக - உயிலாக - மாநில சுயாட்சியை முன்னிறுத்தினார் என்பது அண்ணாவின் ஆயுட் காலப் பணிக்கு ஒரு முத்தாய்ப்பான பெருமையை ஈட்டித்தந்த ஒன்று.
தமிழகம் தந்த வரலாற்று மனிதரான அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா நேரத்தில், அவரின் நினைவுக்குப் புகழஞ்சலியை உரித்தாக்குவோம். அவரின் வாழ்விலும் பணியிலும் வெளிப்பட்ட ஜனநாயக உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லத் தமிழ்ச் சமுதாயத்திற்கு உணர்வு ஊட்டுவோம்!
நன்றி: தீக்கதிர்
|
|