|
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தப்பிப் பிழைப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்கள்!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த பொதுத்தேர்தலில் புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கள்ள வாக்குகளினால் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது மாத்திரமின்றி, முழுக்க முழுக்க புலிகளின் பினாமி அமைப்பாகச் செயற்பட்டு, தமிழ் மக்களுக்கு புலிகள் சொல்லொணாத் துயரங்களை விளைவிப்பதற்கு உறுதுணையாக இருந்து வந்ததை, எத்தனை தலைமுறை வந்து போனாலும் மறைத்து விடவோ, மறந்துவிடவோ, மன்னித்துவிடவோ முடியாது. பாராளுமன்றத்தில் தமிழ்மக்கள் சார்பாக அதிக பிரதிநிதிகளைக் கொண்டிருந்தவர்கள் என்ற முறையில், ஜனாதிபதி அவர்களை தமிழ்மக்கள் பிரச்சினை பற்றிப் பேசுவதற்குப் பலமுறை அழைத்தபோதெல்லாம், ஜனாதிபதியின் அழைப்பை திமிர்த்தனத்துடன் தமிழ் கூட்டமைப்பினர் நிராகரித்து வந்துள்ளதுடன், அரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவில்லையென வேறு குற்றம்சாட்டியும் வந்துள்ளனர். அவர்களது இந்தப் போக்கால் தமிழ் பொதுமக்கள் மட்டுமின்றி, மக்களுக்கு ஏதாவது சிறு நன்மையைத் தன்னும் செய்துவிட வேண்டும் என எண்ணியிருந்த சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாகினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தப்போக்கு இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமல்ல. இவர்களது முன்னோடிகளாக இருந்த தமிழ்க்காங்கிரஸ், தமிழரசு, தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமைகளும் இவ்வாறுதான் முன்னைய காலங்களில் நடந்துகொண்டன. தமிழ்த்தலைமைகள் எப்போதுமே வாக்குச் சீட்டுக்களுக்காக தமிழ்மக்கள் மத்தியில் வந்து, தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் தமிழ் இனவாதம் பேசுவதும், அதன்மூலம் தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றதும் தமது வர்க்க சகாக்களான ஐக்கிய தேசியக்கட்சி தலைவர்களுடன் அரசியல் கூட்டு வைத்துக்கொள்வதும் தொன்றுதொட்டு இருந்துவரும் ஒரு நடைமுறையாகும். ‘இனிமேல் எந்தவொரு சிங்களத் தலைமைகளையும் நம்ப முடியாது எனவும், தமிழ்மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் தான்’ எனக் கூறி ஆயுதம் தாங்கிப் போராடப் புறப்பட்ட பின்னரும், (தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மட்டுமின்றி) புலிகளும் கூட ஐ.தே.கவுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து செயல்பட்டு வந்ததை பல சம்பவங்கள் நிரூபித்து வந்துள்ளன. இதற்குக் காரணம் வர்க்க அடிப்படையில் ஐ.தே.கவும் தமிழ்த் தலைமைகளும் ஒரே அணியில் இருப்பது மட்டுமின்றி, இவர்கள் இரு பகுதியினருக்கும் ஏகாதிபத்தியமே எஜமானாக இருப்பதும் தான். ஆனால் அண்மையில் இலங்கை அரசால் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது உத்திகளில் சில மாற்றங்களை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணம,; ஒருபக்கத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பால் தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என வர்ணிக்கப்பட்டுவந்த புலிகள் இனிமேல் தலைதூக்காதவாறு அரசாங்கத்தால் அழிக்கப்பட்டுள்ளனர். மறுபக்கத்தில் வன்னியில் கடைசிக்கட்டப் போரின்போது புலிகளுடன் கைகோர்த்து நின்று, வெளி உலகிற்கு பொய் அறிக்கைகளை வெளியிட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். இன்னொருபுறம் புலிகளுடன் வெளிப்படையாக கைகோர்த்து செயல்பட்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான வல்வெட்டித்துறை சிவாஜிலிங்கம், ‘நாற்பதினாயிரம் சவப்பெட்டி’ புகழ் (குதிரை) கஜேந்திரன், மற்றும் மட்டக்களப்பு ஜெயானந்தமூர்த்தி போன்றோர் நாடு திரும்பப் பயந்து, இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பதுங்கி நிற்கின்றனர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரைகாலமும் தமிழ்மக்களுக்காக என்னத்தை ‘வெட்டிக் கிழித்தனர்’ என்ற கோபம் தமிழ்மக்கள் மத்தியில் கிளர்ந்து நிற்கிறது. (சாதாரணமாக கொழும்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களைக் கூட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பொலிசுக்கு சென்று விடுவித்தது கிடையாது. கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தன்னும் மனோ கணேசனோ அல்லது ராதாகிருஸ்ணனோ தான் அவர்களைக் காப்பாற்றி வந்துள்ளனர்.) இந்த நிலைமையில் தம்மை தற்காத்துக் கொள்ளவும், தமிழ்மக்களை மீண்டும் ஏமாற்றி பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது உத்திகளில் சில மாற்றங்கள் செய்யவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று அண்மையில் இரா.சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளது. அவர்கள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசியபோதிலும், அவருடன் என்ன பேசினார்கள் என இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமான அறிக்கை எதனையும் விடுத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை. இடம்பெயர்;ந்த மக்களை மீளக்குடியேற்றுவது சம்பந்தமாக தாம் திட்டமொன்று தயாரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிறீகாந்தா மட்டும் தனிப்பட்ட முறையில் அறிக்கையொன்றை விடுத்துளள்தோடு சரி. இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதியுடன் என்ன பேசினார்கள் என்பது பற்றியும் எதுவித தகவலும் இல்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி அமைக்கப்பட்டு, 1976ல் வட்டுக்கோட்டையில் மாநாடு நடாத்தி, தமிழீழத் தீர்மானம் எடுக்கப்பட்டு, புலிகள் அதற்காக ஆயுதப்போராட்டம் நடாத்தி வந்து, இன்றைய அரசாங்கத்தால் புலிகள் அழிக்கப்படும் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் அதுவாகத்தான் இருந்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்திய 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபைத் தீர்வை, கூட்டமைப்பு ‘குப்பைக் கூடைக்குள் வீசவேண்டிய திட்டம்’ என முற்றுமுழுதாக நிராகரித்தே வந்துள்ளது. அதேநேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமிழ்மக்களின் பிரச்சினைக்கு என்ன அடிப்படையிலான தீர்வு காணப்பட வேண்டும் என வெளிப்படுத்தியதும் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் கடந்த காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது, சமஸ்டி, தமிழீழம் என பலதரப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றி வந்துள்ளன. அந்த அடிப்படையில் பார்க்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கொள்கை என்னவென்பதை இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியம். புலிகளும் தோற்கடிக்கப்பட்டு, தமிழீழக் கொள்கையும் சாத்தியமற்றது என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், இனிமேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கு தமது தீர்வு என்னவென்பதை வெளிப்படுத்தாது, ‘அதுவா இதுவா’ என மக்கள் குழம்பும் வகையில் இனியும் அரசியல் செய்ய இயலாது. சம்பந்தன் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்ததின் மூலம், ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைக்காண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது போன்ற மாயையை தமிழ்மக்களுக்கு ஏற்படுத்துவதற்கே முயல்கின்றனர். எனினும், அது இனிமேலும் சாத்தியப்படுமா என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது. ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர், சம்பந்தன் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை இந்த ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கிறது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், வடக்கு கிழக்கிலிருந்து அரசாங்கம் ஆயுதப்படைகளுக்கும், பொலிசுக்கும் ஆள் திரட்டக்கூடாது எனவும், அதேநேரத்தில் தமது கட்சி வடக்கு கிழக்கில் சுதந்திரமாக இயங்க அரசாங்கம் பாதுகாப்புத் தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கூற்றைப் பார்க்கும் போது வாய்விட்டுச் சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஏனெனில் முன்பெல்லாம் தமிழ் தலைவர்கள் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டும்போது, இலங்கை அரச படைகளிலும் பொலிசிலும் தமிழர்கள் சேர்க்கப்படாமல், திட்டமிட்டுப் புறக்கணிக்கட்டு வருவதாகக் குறைகூறி வந்தனர். இப்பொழுது அரசாங்கம் அந்தக் குறைபாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு தமிழர்கள் மத்தியிலிருந்து பொலிசுக்கு ஆள்திரட்டும் போது அதை எதிர்க்கின்றனர். அப்படியானால் முற்றுமுழுதாக சிங்களவர்களைக் கொண்ட படைகளினால் தமிழர்களைப் பாதுகாக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருதுகிறார்களா? மற்றது புலிகளின் அதிகாரம் வடக்கு கிழக்கில் நிலவிய காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கூட அங்கு சென்று அரசியல் வேலை எதுவும் செய்யமுடியாத ஒரு சூழ்நிலை நிலவியதை அனைவரும் அறிவர். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே மற்றைய கட்சிகள் மட்டுமின்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்களில் அச்சமின்றி சென்று போட்டியிடவும் வெற்றி பெறவும் முடிந்தது. அப்படியான சுதந்திரம் கூட்டமைப்பினருக்கு இருக்கையில், தமக்கு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு இல்லையென்பது போல, யாரை ஏமாற்ற கூட்டமைப்பினர் இந்தப் போலி நாடகத்தை ஆடுகின்றனரோ தெரியவில்லை. உண்மையில் கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்தித்தது, சில சுயலாப நோக்கங்கள் கருதித்தான். தாம் ஐக்கிய இலங்கைக்குள் தமது அரசியல் வேலைகளை முன்னெடுக்க விரும்புபவர்கள் எனும் ஒரு தோற்றப்பாட்டை அரசாங்கத்தின் மத்தியிலும், நாட்டுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, தொடர்ந்தும் தமது நாசகார அரசியலை கொண்டு நடாத்துவதே அவர்களது அந்தரங்க நிகழ்ச்சி நிரலாகும். சிலர் ‘பாவம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்வார்கள்? புலிகளின் ஆயுத மிரட்டலுக்கு முன்னால் அவர்கள் பணிந்துதானே செயல்பட்டிருக்க முடியும்?’ என்ற தோரணையில் பேசி வருகின்றனர். புலிகள் என்ற கொலைகார ஆயுதக்கும்பல் உருவான பின்னர் ‘புலியின் வாலைப்பிடித்த’ நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தள்ளப்பட்டிருந்தது ஓரளவு உண்மைதான். ஆனால் இந்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரின் முன்னோடி அப்பனான தமிழர் விடுதலைக்கூட்டணி தான், தமிழ்மக்கள் மத்தியில் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள், அதிலும் குறிப்பாக கேடுகெட்ட இந்த புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தற்போதுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது, ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக்கூட்டணியை கைப்பற்றி புலிகளுக்கு எதிராகக் கொண்டுபோன பின்னர், புலிகளால் நேரடியாக உருவாக்கப்பட்டது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. எனவே இன்று புலிகளை அரசாங்கம் அழித்துவிட்டாலும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது பழைய கொள்கைகளைக் கைவிடாதவரை, இனிமேலும் கூட புலிகளை ஒத்த நாசகார இயக்கங்களை அவர்களால் மீண்டும் மீண்டும் உருவாக்க முடியும் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசியதை, அவர்களது நல்ல மாற்றத்தின் ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்வதானால், அவர்களது சந்திப்பு மட்டும் வெறுமனே போதுமானதல்ல. அவர்கள் தம்மை முற்றுமுழுதாக ஒரு நல்ல ஜனநாயக அரசியல் கட்சியாக நிரூபிப்பதற்கு, முக்கியமான சில விடயங்களை அவசியம் செய்தாக வேண்டும். அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1. 1976ல் வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுத்த, ‘தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு’ என்ற மிகவும் தவறான, தமிழ்மக்களுக்கு பெரும் அழிவுகளைக் கொன்டுவந்த, தீர்மானத்தை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
2. புலிகளினால் உருவாக்கப்பட்ட, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற பினாமி அமைப்பை உடனடியாகக் கலைத்துவிட்டு, அனைத்து தமிழ் ஜனநாயக அரசியல் கட்சிகளுடனும் சேர்ந்து, தமிழ் மக்களின் மிகவும் விரிவான, பரந்துபட்ட, உண்மையான ஐக்கிய முன்னணி ஒன்றை புதிதாக உருவாக்க வேண்டும்.
3. கடந்த பொதுத்தேர்தலில் புலிகளினால் தமிழ்மக்களிடம் மிரட்டிப் பெறப்பட்ட கள்ள வாக்குகளினால் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்துவிட்டு, நேர்மையான வழியில் தேர்தலில் நின்று தமக்கான தமிழ்மக்களின் ஆதரவை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
4. தமிழ்த் தலைமைகள் கடந்த 60 ஆண்டுகளாக, பாரம்பரியமாக வர்க்க அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் ஐக்கிய தேசியக்கட்சியுடனும், ஏகாதிபத்திய சக்திகளுடனும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுவந்த பாரம்பரிய நடைமுறையை கைவிட வேண்டும்.
5. தமிழ்த் தேசியவாதம் என்ற போர்வையில், அற்ப பாராளுமன்ற ஆசைகளுக்காக, தமிழ் இனவாதம் பேசி மக்களைக் கூறுபோட்டு, அவர்களுக்கு மீண்டும் அழிவுகளைக் கொண்டுவருவதை நிறுத்திவிட்டு, ஜனநாயக ரீதியாகவும், ஆக்கபூர்வமாகவும் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, சிங்கள - தமிழ் – முஸ்லீம் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயல்பட முன்வரவேண்டும். குறைந்தபட்சம் இந்த 5 விடயங்களையாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செய்தால் மட்டுமே, அவர்கள் தமது கடந்தகாலத் தவறான பாதையிலிருந்து மீண்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். அதைவிடுத்து தமது முன்னைய வழமைப்பிரகாரம் தமிழ்த் தேசியவெறியை ஊட்டி, தமிழ் இனவாதத்தைக் கிளறிவிட்டு அதில் குளிர்காயலாம் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நினைக்குமாக இருந்தால், அவர்கள் எதிர்காலத்தில் தமிழ்மக்களால் நிச்சயமாக நிராகரிக்கப்படுவர். ஏனெனில் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்மக்களுக்கு எதிராக புலிகள் நடாத்திய மிலேச்சத்தனமான அதிகார தர்ப்பாரின் போது, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புலிகளின் பக்கம் நின்று, தமிழ்மக்களுக்கு எதிராக துரோகமிழைத்து வந்துள்ளது. அந்த துரோகத்தின் விளைவாகவே அந்த மக்கள் இன்று, உற்றார் உறவினர்களை இழந்து, வீடு வாசல்களை இழந்து, சொந்த மண்ணை இழந்து, அகதி முகாம்களில் ஒட்டாண்டிகளாக வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர். அந்த மக்களிடம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாவமன்னிப்புப் பெறுவதானால், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாம் சுட்டிக்காட்டியவாறு முற்று முழுதாக தம்மை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. அவர்கள் அவ்வாறு செய்வார்களா? புதிய பாதையில் அடி எடுத்து வைப்பார்களா? என்பதிலேயே அவர்களின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. அதற்குப் பதிலாக வேறு குறுக்கு வழிகள் எதுவும் இப்பொழுது அவர்களுக்கு முன்னால் இல்லை என்பதே தற்போதைய எதார்த்த நிலவரமாகும்.
|
|