|
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் மோதல்! மேலும் சிலர் வெளியேறலாம்.?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம், ஈழமக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணித் தலைவர் பத்மநாபா, தமிழீழ விடுதலைக் கழகத் தலைவர் சிறீ சபாரத்தினம் ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டு மேற்கூறிய அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளால் தடைசெய்யப்பட்ட பின்னர், மேற்கூறிய அமைப்புக்களின் தலைவர்கள் தமது உயிருக்குப் பயந்து எவ்வித செயற்பாடுகளுமின்றி இருந்தனர்.
பாராளுமன்றம் செல்ல வேண்டுமானால் புலிகளின் அனுமதியின்றி தேர்தலில் நிற்க முடியாது. எனவே தமது தலைவர்களை புலிகள் அநியாயமாக கொன்றிருந்தாலும், புலிகளின் காலில் விழுவதன் மூலம் மட்டும்தான் பாராளுமன்றம் செல்ல முடியுமென்பதால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட தமது தலைவர்களின் பிணத்தைக் கடந்து சென்று புலிகளின் காலில் விழுந்தார்கள்; சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர்கள். புலிகளும் அவர்களை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஐரோப்பிய யூனியன் உட்பட உலக நாடுகளுமே கண்டித்து எள்ளி நகையாடுமளவிற்கு கள்ளவோட்டுப் போட்டு தேர்தலில் மோசடி செய்தார்கள் புலிகள். சம்பந்தன், சுரேஷ், அடைக்கலநாதன் போன்றோர் பாராளுமன்றம் சென்றார்கள்.
புலிகளால் பலவந்தமாக சேர்க்கப்பட்ட மேற்கூறிய தலைவர்கள் புலிகள் என்றும் பலத்துடன் இருக்கப் போகின்றார்கள் அதுவரை தங்கள் காட்டிலே மழைதான என தப்புக் கணக்குப் போட்டார்கள்.
சர்வதேசம் இவர்களை எள்ளி நகையாடியது. சர்வதேச, உள்ளுர் பத்திரிகைகள் இவர்களை புலிப் பினாமிகள் என்ற வர்ணித்தன. இந்த தலைவர்கள் இதை பொருட்படுத்தவில்லை. நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?
18-5-2009 அன்று இவர்கள் மட்டுமல்ல எவருமே எதிர்பாராத வகையில் புலிகளின் கதை முடிந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அடிபடத் தொடங்கியுள்ளனர். ஏன், சில புலிகளின் ஆதரவாளர்கள,; உறுப்பினர்களை காட்டிக் கொடுக்குமளவுக்கு சென்றுள்ளனர். சிவாஜிலிங்கம், சிறிகாந்;தா ஆகியோர் ஒரு குழுவாக செயற்படுகின்றனர். கிஷோர் தலைமையில் சிலர் இன்னொரு குழுவாகவும் செயற்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் மேலும் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. புலிகளினால் பாராளுமன்றம் சென்று தமது குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பலவிதமான சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள், எதிர்வரும் தேர்தலில் கஜேந்திரன், பத்மினி போன்ற பலிகளால் முன் நியமிக்கப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இம்முறை தேர்தலில் நிறுத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இது தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் சுரேஷிற்குமிடையே அடிபடுமளவிற்கு வாக்குவாதம் சென்றுள்ளது. எதற்காக பத்மினி, கஜேந்திரன் ஆகியோருக்கு பட்டியலில் இடம்கொடுக்கவில்லையென்று கஜேந்திரகுமார் கேட்டதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் “அவையள் புலிகளால் நியமிக்கப்பட்டவை. அவையள போட்டால் எங்கட பெயர் கெட்டுப் போய்விடும்” என்றதும் கஜேந்திரகுமார் “புலிகள் போட்ட பிச்சையால்தான் ஆP ஆக வந்ததை மறக்காதையும.; மாகாணசபைக் காலத்தில் மண்டயன் குழு என்ற பேரிலே உருத்திரகுமாரின் மச்சான் கோபி உட்பட எத்தனை பேரை கொண்டு குவிச்சனீர் எண்டது எங்களுக்குத் தெரியும். கஜேந்திரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொடியல்களைக் கொண்டு போட்ட கள்ள வாக்கு இல்லையெண்டால் பாராளுமன்றத்தை நீர் நினைச்சே பார்க்க முடியாது.
எங்கட பிள்ளையளை பலவந்தமாக பிடிச்சுக் கொண்டு போய் அசோகா கொட்டலிலே வைச்சு சித்திரவதை செய்தது எல்லாம் சனத்துக்குத் தெரியும்” என்று ஆவேசமாகக் கூறியதும் சுரேஷ் பதிலுக்கு “உமக்கு ஒழுங்காக தமிழே கதைக்கத் தெரியாது. உம்முடைய அப்பாவை புலிகள் துரோகியெண்டுதானே கொண்டவை. புலிகள் இல்லையெண்டால் நீரும் ஆP ஆக வர ஏலாது” என்று கூறியிருக்கிறார். இது எழுதப்படுகின்ற வரை இந்தளவில் நிலைமை இருக்கிறது. நாளை எப்படியோ தெரியாது.
அதற்கிடையில் வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல் கடும் ஆத்திரத்தில் இருப்பதாகவும் இம்முறை தேர்தலுக்கு முன்னர் போல பண உதவி கிடைக்காதென்றும் அறியப்படுகிறது.
நாவையூர் நகுலன்
|