|
ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கம் வெளியேறியது.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி உரிய அழுத்தத்தினை வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா எதிர்பார்க்கப்பட்ட போதும் 405 ரூபா சம்பளத்தினை வழங்கக்கூடிய கூட்டொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபாவுக்குக்குறைந்த கூட்டொப்பந்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் உடன்படுமானால் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி தனித்துவமாக செயற்பட போவதாக சவால் விட்டிருந்தேன்.
இந்தச்சவாலை நிறைவேற்றும் வகையில் அரசியலில் தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளேன். எனவே தோட்டத்தொழிலாளர் சமூகத்திற்கு துரோகமிழைக்கின்றவர்களை மலையகத்தமிழ் மக்களின் ஆதரவுடன் வலுவிழக்கச்செய்வதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ந்து செயற்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.
இவ்வருடம் இடம் பெற்ற மத்திய மாகாணசபைத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் 45 ஆயிரம் வாக்குகளையும் இந்தச்சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளர் உதயகுமார் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றிப்பெற்றமைக்குறிப்பிடத்தக்கது.
|