|
தமிழ் மக்களின் பொறுப்பும் - அரசின் கடமையும்
- தி. ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
இன்றுள்ள சமூக அரசியல் நிலைமைகள் தொடர்பாக தமிழ் மக்கள் பொறுப்புணர்ச்சியுடனும், நிதானமாகவும், தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட வேண்டும்.
குறுந்தேசியவாத கற்பனை போதையூட்டல்களுக்கு எடுபடாது, சுதந்திரமானதும் செழுமைமிக்கதுமான வாழ்வொன்றை தமது சொந்த பிரதேசங்களில்- யுத்தத்தினால் அழிவுண்ட பிரதேசங்களில் ஸ்தாபிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
சக சமூகங்களுடன் வௌ;வேறு பிரதேசங்களில் வாழும் மக்களுடன் எவ்வாறு உறவுகளை வளர்த்துக் கொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
புலம் பெயர் தமிழர்களில் உழைப்பும் அறிவும் எவ்வாறு ஆக்கபூர்வமான வழிகளில் பங்காற்ற முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
இதில் நிதானமும், தூரதிருஷ்டியும் அவசியப்படுகின்றன.
30 வருடங்களாக இழப்புக்களுடனும் துயரங்களுடனுமான வாழ்விலிருந்து விடுபட வேண்டும். எமதும், எமது சந்ததியினதும் வாழ்வு இந்த நாட்டில் சக சமூகங்களுடன் இணைந்ததாக சுதந்திரமானதாகவும், சமத்துவமானதாகவும் அமைய வேண்டும்.
எமது பிரதேசங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வேண்டும். எமது உள்ளுர் விவகாரங்களை நாமே பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இலங்கை ஆட்சி முறையில் ஒரு பகுதியாக அமைய வேண்டும் என்ற எமது கோரிக்கை வெல்லப்படுவதற்கு நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.
கற்பித தேசியவாத போதைகளுக்கு ஆட்படக் கூடாது. இவ்வாறு போதைகளினுள் மக்களை ஆழ்த்தி அரசியல் நடத்தும் போக்கு எமது சமூகத்தினுள் பல தசாப்தங்களாகவே நிகழ்வது. நாம் அந்த போதையிருந்து விடுபட வேண்டும். போதையூட்டும் அரசியல்வாதிகள் ஒன்றும் பிரக்ஞையற்றவர்கள் அல்ல. அவர்கள் மக்களை உசுப்பேற்றி தேர்தல் காலங்களில் வாக்குகளை கேட்பார்கள். பின்னர் மக்களின் நன்மை தீமைகளுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் சென்று விடுவார்கள்.
இத்தகையவொரு பொறுப்பற்ற விபரீத அரசியல் தமிழ் மக்களின் பாரிய அழிவுகளுக்கு வழி சமைத்தது என்றால் அது மிகையல்ல.
தமிழ் மக்கள் தமது பிரச்சினை என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தாலும் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தமது பிரச்சினைகளை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறப்பான வாழ்க்கையொன்று அமையும் விதமாக புத்திபூவமாக செயற்பட வேண்டும்.
ஆனால் நாட்டில் இடர்மிகுந்த பிரதேசங்களில் இடர்படும் மக்கள் தொடர்பாக புலம்பெயர் தளத்தில் மிகச் சிறுபான்மையினரான ஒரு பகுதியினர் மத்தியில் இந்த இடர்கள் தொடர வேண்டும், இன்னல்கள் தொடர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இது மிகவும் வேதனையான உண்மை.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காது இவர்கள் நிழல் அரசாங்கம் என்று கூறித்திரிகிறார்கள். உணர்ச்சிகளை கிளறி பணம் பண்ணும் மாயாஜாலத்தை இவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் செயலும் உள்ளுரில் வாழும் தமிழ் மக்களுக்கு விநாசத்தையே விளைவிக்கும்.
எனவே இவர்களின் உணர்ச்சியூட்டல் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மறுபுறம் அரசு அல்லது பேரினம் சார்ந்தோர் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய இனங்கள் தேசிய சமூகங்களுடன் சமத்துவமான வாழ்வொன்றை கட்டியெழுப்புவதற்கான மன மாற்றத்தை தம்மில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
யுத்த வெற்றிப் பெருமித உணர்வுகள் இனப்பிரச்சினைக்கு தீர்வை கொண்டு வராது. மாறாக இன உறவுகளை மேலும், மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்.
உலக அனுபவங்களை சிரத்தையுடன் அவதானிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு ஜனநாயகம் அனுமதிக்கப்படுகிறதோ, எவ்வளவுக்கு எவ்வளவு மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப் படுகிறதோ, மனித உரிமைகள் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றனவோ அந்த நாடுகள் வெற்றிகரமான நாடுகளாக சமூக பொருளாதார அபிவிருத்தியில் முன்னேறிய நாடுகளாக நாகரீகமான நாடுகளாக அமைவதை நாம் அவதானிக்க முடியும்.
நாம் இவ்வாறு சிந்தித்தால் இலங்கைக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் அமையும்.
ஜனநாயகம் என்பது வெறுமனே மக்கள் தேர்தலில் ஆட்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கும் இதர சபைகளுக்கும் அனுப்புவது மாத்திரமல்ல.
இலங்கையின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளம் பெறுவது என்பது அடிப்படையான மனித கண்ணித்துடன் வாழ்க்கையை விரும்பும் அனைத்து இலங்கையர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும்.
அதேபோல் இந்த நாட்டின் மூன்று லட்சம் பிரஜைகள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் தொடர்ந்து வாழ்வதென்பதும் சகிக்க முடியாததொன்றாகும்.
உலக வரலாற்றில் யுத்தம் நடந்த நாடுகளில் யுத்த முடிவடைந்த பின் சமாதானமானதும், ஜனநாயகபூர்வமானதும் மனித உரிமைகளை உறுதிப்படுத்தியதுமான வாழ்வு கட்டியமைக்கப்பட்டதை காணமுடியும். சுpல விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவான நிலைமை மக்களின் மனதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டதே.
அழுகுனித்தனமான வாழ்வொன்றை, அலங்கோலமான வாழ்வொன்றை, நேர்த்தியில்லாத வாழ்வொன்றை நீடித்திருக்க விழைபவர்கள் சமூக அயோக்கியர்களாகவும், சுயநலமிகளாகவும் தான் இருக்க முடியும்.
இவர்கள் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு தடை போடுபவர்களாகவும், பாதகம் ஏற்படுத்துபவர்களாகவும், சமூகத்தை எதிர்நிலைக்கு மேலும் மேலும் அழிவுகளுக்கு இட்டுச் செல்பவர்களாகவுமே அமைகிறார்கள்.
நாம் எமது எமது நாட்டுடனும் உலகத்துடனும் வாழ வேண்டும்.
உலகளாவியளவில் மானிட தர்மங்கள் அறம் தொடர்பான தாரதம்மியங்களுடன், இசைவிணக்கமாக எமது நாடு செயற்பட வேண்டும்.
உலகத்தில் இல்லாத எவையும் இங்குள்ள மக்கள் கோரிவிட வில்லை.
வாழு வாழவிடு என்றே கேட்கிறார்கள்.
இந்த அபிலாஷைகளை காலம் தாழ்த்தாது, இழுத்தடிக்காது நிறைவேற்றுவது பற்றி சிந்திக்க வேண்டும்.
இதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல பல்லின சமூகங்களின் அரசியல் சக்திகளும் ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் இணைந்து செயற்பட வேண்டும். மனம் திறந்து பேச வேண்டும். பேசுவதை செயற்படுத்த முனைய வேண்டும்.
நாம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக பேசுபவர்கள் செயலில் ஒன்றும் இருக்காது என்ற பரவலான அபிப்பிராயம் உண்டு.
பாரதியின் வார்த்தைகளில் கூறுவதானால் “கூட்டத்தில் கூடிநின்று கூடி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி” என்ற வகையில் செயற்படாமல் செயலூக்கமான வழியில் செயற்பட முனைவோம்.
இனியொரு விதி செய்வோம்.
தி. ஸ்ரீதரன் பத்மநாமபா ஈ.பி.ஆர்.எல்.எப்
|