|
விருப்பு வாக்கு உருவாக்கும் வெறுப்பு
பாராளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் அது தொடர்பிலான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. தேர்தல் காலங்களில் வன்முறைகள் இடம்பெறுவதென்பது இலங்கையைப் பொறுத்தவரையில் வழக்கமானதொரு நிகழ்வாகிவிட்ட போதிலும் இம்முறை தேர்தலில் இடம்பெற்று வரும் வன்முறைகள் வித்தியாசமானவையாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கின்றன. வெற்றி வாய்ப்புகளுக்காக அரசியல்வாதிகள் தம்மை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகள் மீதே இதுவரைகாலமும் நடத்தி வந்த வன்முறைகள் தற்போது தமது ஆதரவாளர்கள், சக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகள் மீது பிரயோகிக்குமளவுக்கு நிலைமை மாற்றம் பெற்றுள்ளது.
தேர்தல் வன்முறைகள் மிக மோசமாக அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஒரே கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், வேட்பாளர்களுக்கிடையிலான மோதல்களே வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு அதிகளவு பங்களிப்புச் செய்யும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன. தேர்தலுக்கு முன்னரான வன்முறைச் சம்பவங்களில் 50 சதவீதமானவை ஒரே கட்சி அல்லது ஒரே குழுவின் ஆதரவாளர்கள் மத்தியிலான மோதல் சம்பவங்கள் என்று குறிப்பிடும் கண்காணிப்பு அமைப்புகள் இதுவரை கிடைத்துள்ள 66 மோதல் சம்பவங்களில் 35 சதவீதமானவை ஒரே கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலானவை என்றும் தெரிவித்துள்ளன.
196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 7 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதும் அடிப்படை அரசியல் அறிவற்ற, நாகரிகமற்றவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதுமே வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதுடன், விருப்பு வாக்குகளைப் பெற வேண்டிய தேவையும் ஒரே கட்சி ஆதரவாளர்கள், வேட்பாளர்களிடையே மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. 6,7 ஆசனங்கள் உள்ள தேர்தல் மாவட்டங்களுக்கு 200,300 வேட்பாளர்கள் கள மிறக்கப்பட்டிருப்பதும் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியையும் மோதல்களையும் ஒரே கட்சியினருக்கிடையில் உருவாக்கியுள்ளது. இதனால் விருப்பு வாக்குகளுக்கான மோதல்கள் இனிவரும் நாட்களில் உச்சக்கட்டத்தையடையும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன.
அளவுக்கு மிஞ்சிய வேட்பாளர்களின் களமிறக்கம் கட்சிகளுக்குள் மோதல்களையும் போட்டிகளையும் ஏற்படுத்தியுள்ள அதேவேளை, மக்களிடையே குழப்ப நிலைமையையும் தோற்றுவித்துள்ளது. வேட்பாளர்களில் அதிகமானோர் தமக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்கள் அனைவரும் ஒரே மாவட்டத்தில் போட்டியிடுவதால் யாருக்கு வாக்களிப்பது, யாருக்கு விருப்பு வாக்களிப்பது, என்பது தொடர்பிலேயே மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தாங்கிய வாக்குச் சீட்டும் வழமையை விட இம்முறை மிக நீண்டதாக இருக்கப் போவதும் தமக்கு விருப்பமானவர்களைத் தேர்வு செய்வதில் வாக்காளர்களிடையே ஒரு தடுமாற்ற நிலை ஏற்படக் காரணமாகியுள்ளது.
விருப்பு வாக்குகளுக்காக தமக்கிடையே மோதல்களையும் போட்டிகளையும் உருவாக்கியுள்ள இந்த வேட்பாளர்கள் மக்கள் நலன் திட்டங்கள் தொடர்பிலோ அல்லது தாம் செய்யப்போகும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தோ இதுவரை பெரிதாக எதனையும் அறிவிக்கவில்லை. அத்துடன் அதிக வேட்பாளர்களின் பின்னணிகள் மக்களை அச்சம டைய வைப்பதாகவே உள்ளதும் கவனிக்கத்தக்கது. இவ்வாறான நிலையில் தமது வெற்றிக்காகவும் விருப்பு வாக்குகளுக்காகவும் தமக்குள் மோதிக் கொள்ளும் இவர்கள் மக்களை வாக்களிக்கும் இயந்திரங்களாகவே கருதுகின்றனர். எனவே இவ்வாறான வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருப்பதுடன், தமது ஆயுதமான வாக்கைச் சிறந்த மக்கள் சேவையாளர்களுக்கும் நாகரிக அரசியல்வாதிகளுக்கும் சாதகமாக பயன்படுத்தினால் மட்டுமே இனிவரும் பாராளுமன்றத்திலாவது ஒழுக்கமுள்ள உறுப்பினர்களை நாமும் நாடும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
-Thinakural -
|