|
பிரிட்டிஷ் கட்சித் தலைவர்களின் விவாதம்
- பி.பி.சி செய்தி
பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில் இங்குள்ள மூன்று முக்கிய கட்சிகளின் தலைமை வேட்பாளர்கள் பங்குபற்றிய முதலாவது தொலைக்காட்சி விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொருளாதாரம், மற்றும் உள்நாட்டு விவகாரங்களான குடிவரவு, சுகாதார பராமரிப்பு சேவை, கல்வி போன்ற பல விடயங்கள் குறித்து தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுண், கன்சர்வேட்டிவ் கட்சியின் டேவிட் கமரோன் மற்றும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவரான நிக் கிலக் ஆகியோர் இங்கு விவாதித்தனர்.
இந்த விவாதம் பிரிட்டிஷ் அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்தக் கட்சிகள் இடையில் முரண்பாடுகள் அதிகம் என்றாலும் இந்த விவாதத்தின் முடிவில் எவரும் எதிர்பாராத அளவுக்கு ஒரு சுமுகமான நிலைமையே காணப்பட்டது.
விவாதம் தொடங்கி சில நிமிடங்களிலேயே வரி மற்றும் செலவினம் குறித்து டேவிட் கமரோனுக்கும், கோர்டன் பிரவுனுக்கும் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடந்தன.
ஆனால், முக்கிய கட்சிகள் இரண்டையும் கேள்வி மேல் கேள்வி கேட்டதன் மூலம் லிபரல் டெமொகிரட்டிக் கட்சியின் நிக் கிலக்தான் வாதத்தில் வெற்றிபெற்றவராக கருதப்படுகிறார் என்று அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த விவாதங்களில் வெற்றி பெற்றவர்கள் தேர்தலிலும் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வியும் இங்கு எழுவதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தேர்தலுக்கு முன்னதாக பல பிரச்சாரங்களும் இன்னும் இரண்டு விவாதங்களும் நடக்கவிருக்கின்றன. ஆகவே யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இப்போது கூற முடியாது.
|