|
இலங்கை தமிழருக்கு வாழ்வாதார பணிகள் : பிரதமர் தகவல்
சென்னை : "இலங்கைத் தமிழருக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாயில், தமிழர்களுக்கான வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு பணிகள், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது' என, முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: இந்திய மீனவர்கள் மற்றும் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களின் நிலைமை குறித்து தாங்கள் எழுதிய கடிதங்கள் கிடைத்தன. மீனவர்களைப் பொறுத்தவரை, மூன்று இந்திய மீனவர்கள் வங்கதேச போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளனர். அவர்களை விரைவாக இந்தியா அனுப்ப கோரியுள்ளோம். மீதமுள்ள ஐந்து மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடருமாறு வங்கதேச அரசை வலியுறுத்தியுள்ளோம். இலங்கையைப் பொறுத்த வரை, அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களின் நலன் பற்றிய தங்களது கவலையை பகிர்ந்துகொள்கிறோம். இலங்கை அரசிடமும் நமது கவலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளோம்.
இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி, மீண்டும் குடியமர்த்தும் பணியை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தைத் தெரிவித்து உள்ளோம். மேலும், தமிழர்களின் உரிமைகளை, ஒருங்கிணைந்த இலங்கையின் சட்டத்துக்கு உட்பட்டு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளோம். நாம் அமைத்த கள மருத்துவமனையில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. மீண்டும் குடியமர்த்தும் பணியை விரைவுபடுத்த, கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் நமது குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், குடியமர்த்த வசதியாக பொருட்களை அனுப்பியுள்ளோம்.
தமிழக அரசின் நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் ஆறுதலாக அமைந்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாயில், இடம்பெயர்ந்த தமிழர்களுக்கான வாழ்வாதாரம், ரயில்வே, விவசாயம் போன்ற கட்டமைப்பு வசதிகளின் மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களை மேற்கொள் ளும் பணிகள் நடந்து வருகின்றன. இலங்கைக்கு கப்பலில் அனுப்பப்பட்ட பொருட்கள், இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை அரசு விரைவில் வினியோகிக்க துவக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
|