|
மனத்தடைகள் நீங்க வேண்டும் -
- தி.ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை. இந்த நாட்டில் சமத்துவமான வாழ்வொன்றை ஏற்படுத்தினால் சரி என்று பிரச்சினைகளில் இருந்து நழுவிக்கொள்ளும் பொத்தம் பொதுவான போக்கொன்று காணப்படுகிறது. தனிநாடு, சமஷ்டி 13வது திருத்தச் சட்டம், பொலிஸ், நிலத்தின் மீதான அதிகாரம் தவிர்ந்த அதிகாரங்கள் வழங்கப்படுதல் பற்றி இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகள் நலிவடைந்து சென்றிருக்கின்றன.
நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று ஒன்றில்லை, பயங்கரவாதப் பிரச்சினைதான் காணப்பட்டது அதற்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்ற பாணியில் காரியங்கள் நடைபெறுகின்றன. பயங்கரவாதத்திற்கு வேராக இருந்தது எது என்பது பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் பேச முனைகிறார்கள்.
உண்மையில் தமிழ் பாசிசத்தின் மூல ஊற்றாக இருந்ததில் பௌத்த சிங்கள இனவாதத்தின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. இவை ஒன்றையொன்று போசித்து சகல இலங்கை மக்களினதும் வாழ்வை நாசமாக்கின.
இன்றும் இதே சிந்தனை போக்குகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஜனநாயக விரோத போக்கு பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது. அது தோற்கடிக்கப்பட்டு விட்டது. அது இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் தேவைப்பட்டது. ஆனால் அது சிங்களவர்கள் தமிழர்கள் மீது பெற்ற வெற்றியாக மடத்தனமான உணர்ச்சிகளுடன் சித்தரிக்கப்படுகிறது.
இந்த சிங்கள வெற்றி பற்றிய பெருமிதவாத உணர்வுகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதி;லேதான் உண்மையான இலங்கையர்கள் உருவாக முடியும். இல்லாவிடில் இந்த நாட்டில் இலங்கையர்களை விட தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லீம்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
மனதளவில் சமூகங்கள் ஒன்றிணைவதற்கு தடைகள் நீக்கப்பட வேண்டும். இந்த ஒன்றிணைவு சுயாதீனமான நிலையில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாக, திணிப்பாக இது நிகழ முடியாது. இன சமூகங்களின் சுயமரியாதை, கௌரவம், சமத்துவத்தின் அடிப்படையிலேயே இது நிகழ முடியும். ஆனால் அந்தப் பக்குவம் எமது நாட்டில் இன்னும் வரவில்லை. இழுபறி நிலையே காணப்படுகிறது.
எண்ணிக்கையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் வன்னி மக்களை முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் எவ்வளவு காலத்திற்கும் வைத்திருக்கலாம் என்பது இனவாத சாயலை கொண்டதாக அல்லாமல் வேறு எந்த வகையிலும் உலகம் அர்த்தம் கற்பிக்காது.
இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தவர்கள் ஒரு கிளர்ச்சியின் பேரில் இவ்வாறு முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பார்க்க முடியாது.
தமிழ் பாசிசம் சக தமிழர்கள் தொடர்பாகவும், சக சமூகங்கள் தொடர்பாகவும் எத்தகைய வழிமுறைகளை கைக்கொண்டதோ அதன் கூறுகளை கொண்டதாக ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள முடியாது.
அனைத்து சமூகத்தினருக்கும் நீதியானதும், பாரபட்சம் இல்லாததுமான வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஆட்சியாளர்களின் கடமை.
தமிழ்ச்சமூகம் பாரிய அழிவை சந்தித்திருக்கிறது என்பதையும் இளைய தலைமுறையினரில் கணிசமானவொரு பகுதி கல்வியை இழந்திருக்கிறது என்பதையும் உணர்வுபூர்வமாக அறிந்திருக்க வேண்டும். நலிவுற்ற தலைமுறையொன்று உருவாக்கப்படுவது இலங்கையின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லாமல் ஒரு இன சமூகத்தின் வெற்றி இன்னொரு இன சமூகத்தின் நலிவு என்பதில் தங்கியிருக்கிறது என்ற சிறுமைத்தனமான யோசனைகள் மீண்டும் மீண்டும் அவலங்களையும் துயரங்களையுமே ஏற்படுத்தும்.
இது தனியே குறிப்பிட்டவொரு சமூகத்திற்கு என்றில்லாமல் முழு நாட்டையுமே சீரழிவுக்குள் சிக்க வைத்துவிடும்.
ஒரு நாடு வெற்றிகரமாக இருப்பதற்கும் அந்த நாட்டில் நிலவும் ஜனநாயகத்துக்கும் தொடர்பு உண்டு.
ஒரு நாட்டில் சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் சமூகங்களிடையிலும் ஜனநாயகம் நிலவுகையில்த்தான் அந்த நாடு வெற்றியை நோக்கிய நாடாக அமைகிறது.
மனித மனம் அமைதியை இழந்து காணப்படும் போது விரக்திக்கும், கோபத்திற்கும் உள்ளாகியிருக்கும் போது அங்கு மனிதனின் படைப்பாற்றல் வலுவிழந்து போகிறது. ஏனோதானோ என்று காரியங்கள் ஆற்றப்படுகின்றன. வன்முறையும், ஊழலும் அதிகரிக்கின்றன.
எனவே ஜனநாயகம் என்பது சகல மனிதர்களும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முழுமையான பங்காளர்களாகும் நடைமுறையுமாகும்.
அவ்வாறு பங்களார்களாக ஆவதற்கு தனி மனிதனின் ஜனநாயக, மனித உரிமை அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வு, சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம் போன்ற கருத்துக்கள் மக்களின் சமூக பொருளதார வாழ்வை உயர்த்துவதற்காகவே மனிதகுல அனுபவங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை.
எனவே அதிகாரப் பகிர்ந்தளிப்பும் மக்களின் சுதந்திரமான வாழ்வும் என்பது இங்கு மையமான விடயங்களாக அமைகின்றன.
நாட்டின் பாதுகாப்பு, வெளிவிவகாரம், பிரஜாவுரிமை உள்ளிட்ட விடயங்கள் தவிர இதர விடயங்கள் நாட்டின் பிராந்திய மட்டத்திற்கும் இன, சமூகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அரச இயந்திரத்தின் பற்சக்கரங்கள் இலகுவாக இயங்குவதற்கு பிராந்திய மட்டத்திலும் அரச கட்டமைப்பின் பகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.
இதனை பிரிவினை, அதற்கான படி என்று கிலிகொள்ளத் தேவையில்லை. பீதி கொள்ளத் தேவையில்லை. மக்கள் சமூகங்கள் நெருக்கமாக வருவதற்கு அவற்றின் பண்பாட்டு, மொழி தனித்துவங்கள் கலாச்சார வாழ்வு என்பன பரஸ்பரம் மதித்துப் போற்றப்பட வேண்டும்.
இங்கு சமூக ரீதியான புண்படுத்தல்கள் நிகழக்கூடாது.
இதுவே நாட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அல்லாமல் முடைநாற்றம் வீசும் ஆக்கிரமிப்பு, மேலாதிக்கவாத, கசட்டுச் சிந்தனைகள் இந்த நாட்டில் தொடர்ந்து சமூக சிதைவு இயக்கமாகவே அமைந்து விடும்.
நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற வகையில் சமத்துவமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கும் இணைந்து பணியாற்றுவதற்கும் முயல்வோம்.
தி.ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
|