|
உலக மக்கள் ஒன்றுகூடுவோம்!
- தே. லட்சுமணன்
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புவிசுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் துறையின் முனைவர் டாக்டர் கிரிக் ஆங்ஸ்மித் என்பவர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் 19.1.2010 அன்று உரையாற்றிய போது சில அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார். அந்த உரையில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பை மேற்கோள் காட்டியுள்ளார்.
வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் ஏற்படும் நுரையீரல் நோயினால் ஓர் ஆண்டுக்கு 9.50 லட்சம் குழந்தைகளும், 6.50 லட்சம் தாய்மார்களும் அகால மரணம் அடைகிறார்கள். இதற்குக் காரணம் “கார்பன்” புகையை அதிகமாக உட்கொள்ளுகிறார்கள். பருவநிலை நமக்கு எதிராக மாறி வரும் சூழலில், சமையல் செய்யப் பயன்படுத்தும் “ஸ்டவ்” உமிழும் கார்பனும் தாய்மார்களையும், குழந்தைகளையும் சுகாதார ரீதியாக பாழ்படுத்துகிறது. இதுவே அவர்களின் ஆயுளைக் குறைத்து, மரணப்படுக்கையில் கிடத்திவிடுகிறது என்கிறார்.
இந்தியாவில் கூட இலட்சோப லட்சம் கிராமங்களில் இன்னமும் உணவு சமைக்க மண்ணெண்ணெய், கரி, விறகுதான் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் கக்கும் கார்பன், காற்றுப்பையை வெகுவாகப் பாதித்து விடுகிறது. இப்படிப்பட்ட பாதிப்பைக் குறைப் பதற்கான ஏற்பாட்டை உரிய முறையில் செய்ய வேண்டும் என்கிறார் முனைவர். “கார் பன்”-ஐ மிகக்குறைவாக வெளியேற்றும் ஸ்டவ் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார். சுற்றுச்சூழல் கெடும் சூழ்நிலையில் ஏழை நாடுகளில் அடுப்புப் பிரச்சனையும் கூடுதலாகி விடுகிறது. ஏற்கெனவே அல்லலுறும் உணவுப் பிரச்சனையோடு அடுப்புப் பிரச்சனையும் சேருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக சூறாவளி அடிக்கடி உருவாவதும், அவற்றின் கோபமும், ஆவே சமும் அதிகரித்து வருவதையும் சந்தித்து வருகிறோம்.இப்போதெல்லாம் வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது. குளிரும் கூட கூடுதலாகிறது. மழை பெய்யும் பருவமும் மாறிப் போகிறது. மழையே இல்லாமலும் போகிறது. மழை அதிகமாகப் பெய்து வெள்ளத்தின் வேகமும் மிஞ்சிப்போகிறது. பாய்ந்து வரும் பேய்க்காற்றும், தொடர்ந்து பனி பெய்து வரும் நாடுகளும், நகரங்களும் நடுங்கிப் போகின்றன. எல்லாம் பசுமைக் குடில் கொடுக்கும் “பரிசுகள்”. இதனால் ஏற்படும் உயிர்ச்சேதமும், பொருட் சேதமும் பெருகிக்கொண்டே வருகிறது. மக்கள் இடம்விட்டு இடம்பெயர்வது, பிழைப்பு கெடுவது, பட்டினி, நோய் பரவுவது போன்ற வையால் ஏழைநாடுகள் அதிகமாக சித்ரவதைக்கு உள்ளாகின்றன. உலக அளவில் இத்தகைய பலிக்கு ஆளாகக்கூடிய மக்கள் 200 கோடி பேர்.
தீவுகளெல்லாம் முதல் பலியாகி, மூழ்கிப் போகும். இந்த உலகத்தையே நாசமாக்கி தூக்கிப் புரட்டிப்போடும் இத்தகைய பெரிய சவாலை, உலக நாடுகள் எல்லாம் கூடி ஒத்து ழைத்தால்தான் ஓரளவு தீர்வு காண இயலும். இதிலே பெரிய பங்கு ஏகாதிபத்திய நாடுக ளுக்கு உண்டு. குறிப்பாக அமெரிக்காவுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. ஆனால் ஏகாதி பத்திய நாடுகள் எள்ளளவும் கவலைப்படவில்லை. எண்ணிக்கையில் மொத்த அளவில் 30 சதவீத வாயுவை அமெரிக்க நாடுதான் வெளியேற்றுகிறது.
கியோட்டோ உடன்படிக்கை என்ற ஒன்று ஐக்கிய நாட்டு சபையின் கன்வென்ஷனால் உருவாக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா முதற்கொண்டு 37 நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்பட 1990ஆம் ஆண்டிலிருந்து தங்களால் வெளியிடப்பட்ட பசுமைக்குடில் வாயு அளவிலிருந்து 5.2 சதவீதம் குறைத்துக்கொள்வதாக ஏற்றுக்கொண்டன. இந்த ஏற்பாட்டை 2008 ஆம் ஆண்டில் துவங்கி 2012ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்துவதாக ஒப்புக்கொள்ளப் பட்டது. ஆனால் இதுவரை முடிவு ஈடேறவில்லை.
அடுத்து ஐக்கிய நாட்டு சபையின் உடன்படிக்கை நாடுகள் 15வது கோபன்ஹேகன் மாநாட்டை 7.12.2009 அன்று டென்மார்க்கில் கூட்டியது. வாயுவைக் குறைக்க கூடிய மாநா டுதான் ! உலகமே மிக எதிர்பார்த்த மாநாடு ! 45 நாடுகளிலிருந்து நடத்தப்படும் 56 செய்திப் பத்திரிகைகள் ஒன்றுபட்டு இந்த மாநாடு வெற்றிகரமான முடிவுகளை எடுக்க வேண்டும் என வேண்டி, ஒரே விதமான தலையங்கத்தைத் தங்களது பத்திரிகைகளில் எழுதின. வேறு எந்தப் பிரச்சனையிலாவது உலகப் பத்திரிகைகள் இப்படி கருத்தொற்றுமை காட்டி யிருக்குமா என்பது ஐயமே.பசுமைக்குடில் வெளியிடும் வாயுவைக் குறைப்பது என்பது அவ்வளவு முக்கியமான உலகப்பிரச்சனை. உலகம் முழுவதுமுள்ள மக்கள் உயிர் பிழைக் கும் பிரச்சனை.
ஆனால் கோபன்ஹேகன் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் கியோட்டோ உடன்பாடு பற்றி ஒரு வரியும் இல்லை. ஏகாதிபத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாடு காற்றோடு கலந்து விட்டது. கோபன்ஹேகன் மாநாட்டுப் பிரேரணை, குழப்பமும், குதர்க்கமும், முரண்பாடும் நிறைந்ததாக இருந்தது. ஐக்கிய நாட்டு சபைக்கும், பிரேரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, அதிகாலை மூன்று மணியாம். பல நாட்டு அமைச்சர்கள் அந்த நேரத்தில் சபையில் இல்லை. தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்களாம். பல நாட்டு அதிகாரிகள்தான் மூன்று நாட்களாக உறங்காமல் இருந்து, அந்தத் தீர்மானத்தை வாங்கிக் கொண்டார்களாம். ஒரு மணி நேரத்தில் அந்தக் குழப்பமான தீர்மான நகலை எப்படிப் படித்து புரிந்துகொள்வது, திருத்தம் கொடுப்பது என்று யோசிக்கக் கூட முடியவில்லை யாம். இந்தக் குழப்பங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் காரணம், ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் தலையீடுதான்; நிர்ப்பந்தங்கள்தான்.
அந்தத் தீர்மானத்தில் வாயு குறைப்பது பற்றி எந்த வாக்குறுதியும் குறிப்பிடப்படவில் லை. இப்போது விவாதத்திற்கு வைத்துள்ள நகல் தீர்மானத்திற்கு முன்பு ஒரு நகல்தீர்மா னம் தயாரிக்கப்பட்டதாம். அதில் 50 சதவீதம் வாயுவை வருகிற 2050ஆம் ஆண்டுக்குள் குறைப்பதாக எழுதப்பட்டிருந்ததாம். அந்த விபரம் விவாதத்திற்கு வைக்கப்பட்ட இரண் டாவது நகல் தீர்மானத்தில் இல்லை. 15 முதலாளித்துவ நாடுகள் தனியாக அறையில் ரகசியமாக முன்கூட்டி பேசிய போது அதை நீக்கி விட்டனவாம். எதிர்காலத்தில் வாயுவால் ஏற்பட இருக்கும் ஆபத்தைக் குறைக்க குறைந்தபட்ச உத்தரவாதம் ஏதும் குறிப்பிடப்படவில்லையாம். ஜனநாயகத்தின் அம்சங்கள் ஏதும் மாநாட்டில் பின்பற்றப்பட வில்லையாம். ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லையாம். ஏகமனதாக ஏற்றுக்கொள் ளப்பட்டதாக ஒப்புதலை உருவாக்க, மாநாட்டுக்குப் பிறகு ஐக்கிய நாட்டுசபை நிரந்தர உறுப்பினர்களுக்கு, ஒப்புதல் தரும் கடிதம் கேட்டு எழுதப்பட்டதாம். இந்தச்செயல் முறைகேடான, மோசடி செயலாகும்.
இன்னொரு தகவல், அந்தத் தீர்மானத்தில் ஏழைநாடுகள் தங்களின் வாயுபெருக்கத்தைக் குறைக்க (வெப்பத்தைக்குறைக்க) ஆகும் செலவிற்கு வளர்ந்த நாடுகள் 30 பில்லியன் டாலரை 2012 ஆம் ஆண்டு வரை கொடுக்குமாம். அடுத்து வருடத்திற்கு 100 பில்லியன் டாலர் வீதம் 2020ஆண்டு முதல் கொடுக்குமாம். இதுகுறித்து ஏதோ பணக்கார ஏகாதிபத்திய நாடுகள் பரிவுடன் இருப்பதாகக் கருத வேண்டாம். இன்றைய நிலவரப்படி ஒரு டாலர் மதிப்பு, தங்க மதிப்பில் 32 விழுக்காடுக்கும் குறைவு. அதன்படி 30 பில்லியன் டாலர் என்பது தங்க மதிப்பின்படி 1 மில்லியன் ஆகிறது. 100 பில்லியன் டாலர் என்பது இன்றைய தங்க மதிப்பின்படி 3.1 மில்லியன் டாலராகிறது.
தொழில்வளம் கொண்ட நாடுகள், தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதம் என்பது வருடத்திற்கு 250 பில்லியன் டாலர் ஏழைநாடுகளுக்கு கொடுத்தால், வளரும் நாடுகள் சமாளிக்கலாம். கொடுக்குமா என்பது கேள்வி. இது சில பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்டக் கணிப்பு.
அமெரிக்கா தன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையிலிருந்து வங்கிகளை மீட்க 800 பில்லியன் டாலர் கொடுத்தது. இந்தப் பூவுலகில் 90 மில்லியன் மக்களின் எதிர்காலம், உயிர்வாழ்தல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏகாதிபத்திய நாடுகள் 2050ஆம் ஆண்டு வரை உதவ முன்வருமா ?
2050 ஆண்டுகள் வரை கொடிய வறட்சி வராமலும், வெகுண்டெழும் கடலும், வெள்ளக் காடுகளும் பெருகாமலும், கிரீன்விச் பகுதியிலும், அண்டார்டிகாவிலும் பனிப்பாறைகள் உருகி கடல் மேலோங்கி மக்கள் மூழ்காமல் இருக்க வேண்டுமே. தீவுகள் மூழ்கிப்போகா மல் இருக்க வேண்டுமே.
கோபன்ஹேகன் மாநாட்டில் நடந்த இவ்வளவு மோசடிகளையும் கியூபா நாட்டின் தலைவர் காஸ்ட்ரோ அவரது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார். கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளைத் தெளிவாக குறிப்பிட்டே ஆக வேண்டும். அமெ ரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து இந்தியா இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கொடுத் தது பெரிய அவமானம்.
இந்த ஒப்பந்தப்படி, வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்கள் விருப்பப்படி வாயு வெளியிடும் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். அதற்கான எந்தக் காலக்கெடுவும் குறிப்பிடப் படவில்லை. வெப்பம் அதிகரிக்கும்படி வளர்ந்த நாடுகள் முறை தவறி நடந்தால், அவற்றை தடுக்க உடன்படிக்கையில் எந்த ஷரத்தும் இல்லை.
அமெரிக்கா 30 சதமும், ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்தால் இதுவரை 80 சதம் வாயு வால் உலகைக் கெடுத்த பணக்கார நாடுகளுக்கு வெப்பத்தைக் குறைப்பதில் எந்தப் பொறுப்பும் இல்லை.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆரம்பத்தில் தொழில்வளர்ச்சிக்கு முன்பாக நிலவிய புவி வெப்பத்தை விட 2 சென்டிகிரேடுக்கு மேல் உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உடன்படிக்கை சொல்லுகிறது. ஆனால் அதற்கான கால வரையறை இல்லை. இடதுசாரி ஆட்சி உள்ள சோசலிச நாடுகளின் கடுமையான போராட்டத்தால்தான் இந்த உடன்படிக்கை சேர்க்கப்பட்டது.
ஐக்கிய நாட்டு பருவநிலை உடன்படிக்கை அமைப்பு கூற்றுப்படி, உடன் படிக்கையில் உள்ளபடி வாயு குறைக்க நடவடிக்கை எடுத்தாலே கூட புவிவெப்பம் 3 சென் டிகிரேட் அதிகரிக்கும் என்பது அறிவியலார் கூற்று. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆலோசனையில் இருக்கும் சட்டம் அமலா னால் கூட 2005 ஆம் ஆண்டில் வாயு வெளி யிடப்படும் அளவை விட 2020ஆம் ஆண்டில் 17 சதம் குறைக்க வேண்டும் என உள்ளது. இந்த ஏற்பாடு 1990ஆம் ஆண்டில் இருந்ததை விட 3 சதம் அதிகமாக இருக்கும். இந்த ஏற்பாட்டின்படி அடுத்த 10 ஆண்டுகளில் அதிகமாக வாயுவை அமெரிக்கா வெளியிடும்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி 45 சத வீதம் வாயுக்களின் வெளியீட்டை குறைத்தால்தான் 2 சென்டிகிரேடுக்கு மேல் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். சீனா, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் கூடி ஐக்கிய நாட்டு சபையின் பருவநிலை மாற்ற உடன்பாடு அமைப்புக்கு ஒரு மகஜர் வழங்கியது. அதில் கியோட்டோ உடன்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதன்படி உலக நாடுகள் 2020ஆம் ஆண்டு 45 சதவீதம் வாயுக்களை குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு நிலையை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்டது. எவ்வளவு கேட்டு என்ன ? யார் கேட்டு என்ன ?
இந்தப் பூவுலகம் அழிந்தாலும் அதனால் இலாபம் வரும் என்றால் முதலாளித்துவம் அதையும் ஏற்கும். ஏகாதிபத்தியத்தின் இலாப வெறி, சுரண்டல் வேட்கை அப்படிப்பட்டது. உலகம் மீள, உலகமே எதிர்பார்த்த கோபன் ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது.
இனி இதை முடிக்க வேண்டிய ஒரே வழி உலக மக்கள் ஒன்று கூடி நிர்ப்பந்திப்பதுதான்.
|