|
தேர்தல் வேட்புமனு தாக்கல்
- தாயகக்குரல்
19ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யமுடியும். தேர்தல் களத்தில் இறங்குவற்கு அரசியல் கட்சிகள் தயாராகி தமது வேற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்த பொதுத்தேர்தலில் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் மூலம் 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அதாவது நாடு முழுவதும் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர்.
வடக்கில்; யாழ்ப்பாணத்தில் இருந்து - 9 உறுப்பினர்கள், வன்னியில் - 6 உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை - 4 உறுப்பினர்கள், மட்டக்களப்பு - 5 உறுப்பினர்கள், திகாமடுல்ல - 7 உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். கிழக்கில் மூவின மக்கள் தொகை விகிதாசாரத்தில் அதிக வித்தியாசம் இல்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இரு அணிகளிடையேதான் தீவிர போட்டி காணப்பட்டன. ஆனால் இந்த அணிகளில் உள்ள கட்சிகள் பொது தேர்தலில் தமது தனித்துவத்தை பேண தனியாக போட்டியிடலாம் எனத் தெரிகிறது. பொதுத் தேர்தலில் பல்வேறு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவது மாத்திரமல்ல தனித்தனிக் கட்சிகள் உள்ளே விருப்பு வாக்கை பெறுவதில் வேட்பாளர் மத்தியில் கடுமையான போட்டி காணப்படும்.
கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் தெரிவு முடிந்து வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் வேட்பு மனுவில் கையொப்பம் இட்டு தேர்தல் களத்தில் தயாராகிவிட்டனர்.
கடந்த காலங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து வடக்கில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி., கிழக்கில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியன பொது தேர்தலில் தனித்துவமாக போட்டியிடுவதை அரசும் அங்கீகரித்துள்ளது.
எதிர்கட்சி கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தனித்துவத்தை இழக்க தயாராக இல்லை. ஜனாதிபதி தேர்தலில் கூட்டாக போட்டியிட்ட கட்சிகள் தங்கள் தனித்துவத்தை பொது தேர்தலில் காட்டவேண்டும்;. அதே வேளை நாங்களும் எங்கள் தனித்துவத்தை காட்டவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தனது யானைச் சின்னத்தில் பொதுத்தேர்தல் போட்டியிடுவது எனத் தீர்மானித்துள்ள நிலையில் யானைச் சின்னத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இல்லை. ஆனாலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையிலும் ஜே.வி.பி. இல்லை.
2005ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜே.வி.பி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தது. ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் அவரை ஜனாதிபதியாக்கியது தாமே என ஜே.வி.பி. கூறி வந்தது. பின்னர் ஜனாதிபதிக்கும்; ஜே.வி.பி.க்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. தொடர்ந்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. பிரிந்தவர்கள் ஒரு கட்சியாக அரசுடன் இணைந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. யின் கோட்டை எனக் கருதப்பட்ட இடங்களில் அவர்கள் ஆதரவு பெற்ற சரத் பொன்சேகா மிகவும் குறைந்த வாக்குளையே பெற்றார். இந்த நிலையில் ஜே.வி.பி. தனித்து போட்டியிட்டால் அவர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். எனவே எப்படியும் ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதில் தீவிரமாக உள்ளது.
நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த ஒரு அறிக்கையில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஜே.வி.பி. உட்பட எதிர்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளின் யோசனையை மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கிறார். எதிர்கட்சிகள் கூட்டாகவா? தனித்தா? போட்டியிடுவார்கள் என்பது இன்னமும் சிலதினங்களில் தெரிய வரலாம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளதாகவும் அந்த முடிவை தமக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய எதிர்காலத்திலும் எதிரணியுடன் இணைந்து செயற்படுவதாக உறுதியளித்துள்ளதை வரவேற்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் நியமனம் தொடர்பாகவும் ஆராய நேற்று கூடிய கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இன்றும் அவர்கள் தேர்தல் தொடர்பாக தொடர்பாக கூடி ஆராய்கின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் தோல்வியால் சோர்வுற்றிருந்த எதிர்கட்சிக் கூட்டணிக்கு சரத்பொன்சேகாவின் கைது 'சும்மா மென்ற வாய்க்கு அவல் கிடைத்ததுபோல்' ஆயிற்று. சரத் பொன்சேகாவின் கைதை வைத்து அரசுக்கு எதிரான வெகுஜன போராட்டங்களை எதிர்கட்சி கூட்டணி ஆரம்பித்துள்ளது. சரத் கைதான விவகாரத்தின்மூலம் பௌத்த பீடங்களை அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வைக்கும் முயற்சியில் எதிர்கட்சிக் கூட்டணி ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. நான்கு பிரதான பௌத்த பீடாதிபதிகள் பொன்சேகாவை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு அரசும் வளைந்து கொடுப்பதாகக் தெரியவில்லை. அதேவேளை சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இப்பொழுது சரத்தின் மருமகன் தொடர்பான ஊழல்களை தோண்ட ஆரம்பித்:துவிட்டது அரசு. சரத்தின் மருமகனின் தாயார் பெயரில் உள்ள வங்கி பாதுகாப்பு பெட்டகத்தை புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சோதனை செய்போது ஐந்து இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர் கண்டுபிடித்துள்ளனர். அதை தொடர்ந்து சரத்தின் மருமகன் தலைமறைவாகிவிட்டார். இவர் பொய்யான ஆவணங்கள் மூலம் ஆயுத இறக்குமதியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் எதிர்கட்சிகள் சரத் பொன்சேகாவின் கைதை வைத்து நடத்தும் அரசியலால் சரத் பொன்சேகா மேலும் சிக்கலுக்கு உள்ளாகிவருகிறார் என்பது தெரிகிறது. அதாவது சரத் பொன்சேகா அரசியல்வாதிகளின் அரசியல் லாபத்துக்கு பலியாகியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
- தாயகக்குரல்
|