|
கட்சிகளின் அங்கீகாரம் பற்றிய மீளாய்வு வேண்டும்
இலங்கையில் எத்தனையோ அரசியல் கட்சிகள் களத்துக்கு வந்து போய்விட்டன. சில கட்சிகள் வந்த சுவடே தெரியாமல் மறைந்துவிட்டன. தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் உள்ளவற்றிலும் பெரும்பாலானவை பெயரளவில் மாத்திரம் உள்ளவை.
இக் கட்சிகள் இடைக்கிடை சின்னத்தை யாருக்காவது இரவல் கொடுப்பதைத் தவிர வேறெந்த செயற்பாட்டிலும் ஈடுபடுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் சில கட்சிகள் மாத்திரமே தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அரசியல் அரங்கிலிருந்து மறைந்து போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு தோன்றியதால் ஆரம்பிக்கப்படும் கட்சிகளில் பெரும் பாலானவை நீடிப்பதில்லை.
சுயலாப நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தீவிரமான அரசியலில் ஈடுபடுவதில்லை. தெளிவானதும் நிலையானதுமான கொள்கை இல்லாமல் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் கட்சிகள் காலப்போக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன.
இதற்கு மக்கள் விடுதலை முன்னணியை (JVP) உதாரணமாகக் கூறலாம்.
பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு களத்துக்கு வந்தது மக்கள் விடுதலை முன்னணி. சே குவேரா போன்ற புரட்சிகரத் தலைவர்களை ஆதர்சமாக முன்னிறுத்தினார்கள். பாட்டாளி வர்க்க சகோதரத்துவம் பற்றிப் பேசிக்கொண்டு அரசியல் வகுப்பு என்ற பெயரில் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணர்வலையையும் இனவாத சிந்தனையையும் சிங்கள இளைஞர்கள் மத்தியில் வளர்த்தார்கள்.
பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த போது அது வர்க்கத் துரோகம் எனக் கூறி எத்தனையோ தலைவர்களைக் கொலை செய்த மக்கள் விடுதலை முன்னணி, பொதுவான வேலைத் திட்டம் எதுவும் இல்லாமல் சந்தர்ப்பவாதமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் முன்வந்தது. இப்போது தனித்துப் போட்டியிட வேண்டிய நிலையில் பாராளுமன்றத்திலிருந்து முற்றாக ஒதுக்கப்படும் ஆபத்தை இக்கட்சி எதிர்நோக்குகின்றது. சந்தர்ப்பவாதம் காரணமாக மக்களால் ஒதுக்கப்படுவதற்கு இது உதாரணம்.
ஏராளம் கட்சிகள் இப்போது தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கீகாரம் பெற்ற எல்லாக் கட்சிகளும் அரசியலில் ஈடுபடுவதில்லை. அரசியலில் ஈடுபடாத கட்சிகள் தமது அங்கீகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்குத் தாராளமாக இடமுண்டு. துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. நேரடியான அரசியலில் ஈடுபடாதிருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துச் செய்வது காலோசிதமானது.
குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் போட்டியிடாதிருக்கும் கட்சிகளினதும் தேர்தல்களில் குறிப்பிட்ட விகிதாசாரத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறும் கட்சிகளினதும் அங்கீகாரத்தை ரத்துச் செய்யும் நடைமுறை இந்தியாவில் பின் பற்றப்படுகின்றது.
இதே நடைமுறையை இலங்கை பின்பற்ற வேண்டியதில்லையெனினும், அரசியல் செயற்பாடற்ற கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துச் செய்வதற்கான ஏற்பாடு பற்றி ஆலோசிப்பது நல்லது. தேர்தல் திணைக்களமும் அரசாங்கமும் இவ் விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
- தினகரன் ஆசிரியர் தலையங்கம்
|