|
தொழிலாளர்களின் நலன்களில் அதிக அக்கறை வேண்டும்
-பசறையூர் க. வேலாயுதம்
மக்களைப் பொறுத்தளவில் பனித்துளிக்காக காத்திருக்கும் சமகிரவாக (சக்கிரவாக) பட்சியைப் போல் நல்லதொரு சமூக பிரதிநிதிகளுக்காக காத்திருக்கின்றார்கள். ஆக, அவர்களை தெரிவுசெய்கின்ற பொறுப்பு பதுளை மக்களுக்கு கிட்டியிருக்கும் நிலையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த சிலரினது கருத்துக்களை உள்வாங்கி அவற்றை அப்படியே இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.
பதுளை மாவட்டம் இம்மாவட்ட சதுர கிலோ மீற்றர் 2861 பூமி பரப்பினை கொண்டிருக்கிறது. 2008ம் ஆண்டின் சனத்தொகையை பார்க்குமிடத்து இங்கு 861,191 பேர் வாழ்கின்றனரென லாம். நகர சனத்தொகை 56,839 ஆக இருக்கும் போது கிராமிய மட்டத்தில் 626,085 பேரும், பெருந்தோட்டங் களில் 178,266 பேர் இருப்பதாக அரச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
2006/ 2007ம் வருடங்களில் மாவட்டத்தின் மொத்த உழைப்பு ஆளணிகளின் தொகை 413773 என்பதுடன், அதில் தொழில் செய்வோர் 386,764 தொழிலின்றி இருப்பவர்களினது தொகை 27,009 ஆகும். விவசாயத்துறை சார்ந்த பதுளை மண்ணில் 17,791.2 ஹெக்டேயர் நிலத்தில் விவசாய பயிர்ச்செய்கை செய்யப்படுவதுடன் 9,106 ஹெக்டாயர் நிலத்தில் தேயிலை உற்பத்தியும், 6,384 ஹெக்டேயர் நிலத்தில் மலைநாட்டு மரக்கறியும் 2,393 ஹெக்டேயர் நிலத்தில் கீழ்நாட்டு மரக்கறியும், 1,423 ஹெக்டேயர் நிலத்தில் கிழங்கு பயிர் செய்கையும் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் பதுளை மாவட்டத்தில் மாணிக்கக்கல் மற்றும் டொலர் மைட் போன்ற வளங்களும் கிட்டுகின்றன.
மாவட்டத்தில் 15 பிரதேச செயலகமும், 567 கிராமசேவையாளர் பிரிவுகளும் ஒரு மாநகர சபையும் 02 நகர சபைகளும், 14 பிரதேச சபைகளும் உள்ளன. இம்மாவட்டத்தில் எட்டு பிரதிநிதிகளும், ஒரு போனஸ் ஆசனமும் தெரிவாகுவது வழக்கமாகும். 1977 களுக்கு பின்னர் ஒரு தமிழரின் பிரதி நிதித்துவமும், இறுதியாக நடந்த தேர்தலில் இரண்டு தமிழ் பிரதிநிதிகளும் ஊவாவின் பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவாகியமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலைப்பாட்டு பின்புலனில் தொடருவதாவது, தேர்தல் பற்றி பதுளை வாழ் மலையக சமூகத்திற்கு கூறவிரும்புவது யாதெனக் கேட்டபோது தெரிவித்ததாவது;
இரா. மோகன், வித்தியாலய அதிபர் பூனாகல த. ம. வி.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு முக்கிய படிப்பினையை நமக்கு ஊட்டியுள்ளது. அதன்படி இன்னும் வரும் ஏழாண்டு களுக்கு இதே ஜனாதிபதியின் கீழ்தான் ஆட்சியமைய போகிறது. ஆகவே நாம் ஆளுங்கட்சியின் கரங்களை உயர்த்துவதே இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கடமையாகும். நடைபெற்ற தேர்தலில் மலையகச் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் வாக்களிக்கவில்லையென காரணங்காட்டி சில அரச காரியாலயங்களில் உதாசீனப்படுத்தப்படுவதை அனுபவ ரீதியாக அறிய முடிந்தது. ஆதலால் நாம் அவதானமாக செயற்பட வேண்டும்.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் பெருந்தொகையானோர் நம்மவர்கள் ஆசிரியர்களாகவும் அரச ஊழியர்களாகவும் உள்வாங்கப் பட்டதோடு, தபால் விநியோகம், வீதி புனரமைப்பு, வீடமைப்புகளும் ஓரளவாது முன்னெடுக்கப்படுகின்றன. எனவே நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் இவைபற்றி சிந்தித்து மலையகத்தின் அபிவிருத்திக்கான வழிமுறைகளை காண வேண்டும்.
வடக்கு கிழக்கில் தமிழர் கூட்டணி எதிரணியில் இருந்து எதிர்வாதம் புரிய முடிந்தளவிற்கு அம்மாகாண அபிவிருத்தியை செய்ய முடியவில்லை. அதேவேளை அங்கிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் அரசின் பணிகளோடு இணைந்து போனதால் பல்வேறு வாய்ப்பு வசதிகளை நமது சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்க முடிந்தது. எனவே எதிர்வரும் தேர்தலில் நாம் எதிர்காலம் பற்றிய சிந்தனையோடு வாக்களிப்பதோடு நமது சார்பாக போட்டியிடும் சரியானவர்களை இனங்கண்டு தெரிவு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். நமக்குத் தேவை சமூகத்தின் சுதந்திரமான சுபீட்சமே!
வி. சிவராஜா (சமூகசேவகர், காப்புறுதி முகவர் - ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்)
பதுளை மாவட்டத்தில் எஸ். எம். சுப்பையா இலங்கை இந்தியன் காங்கி ரஸ் சார்பாகவும், மற்றும் ஜெய் சி. டி. கொத்தலாவல போன்றவர்கள் போட்டியிட்ட காலமுதல் இன்றுவரை வாக்களித்து வருகிறேன். நான் இலங்கை இந்து பாகிஸ்தானிய சட்டத்தின் கீழ் பிரசாவுரிமை கிடைத்தமையால் வாக்களிக்கும் வாய்ப்பும் கிட்டியது. பதுளை சென் பீற்றஸிலும் தர்மதூதவிலும் கல்வி கற்று இளைஞராக விளங்கிய வேளை பதுளை பிரதேச தோட்டங்களுக்கு சென்று எங்கள் மாணவர் குழு பிரசாவுரிமைப் படிவங்களை இலவசமாகப் பூர்த்தி செய்து மலையகத்தவர் பிராசாவுரிமையுடனான வாக்குரிமையை பெறவேண்டுமென வலியுறுத்தியவர்களுள் நானுமொருவன். மடூல்சீமை, ரோபேரி, லுனுகலை, பசறை, மொனராகல தோட்டங்கள் பலவற்றுக்கு சென்று பணிகள் செய்தமை மறக்க முடியாததாகும்.
பல்லின சமூகம் வாழும் பதுளையில் பெரும்பான்மையின மக்களோடு இணைந்தே வாழ வேண்டியுள்ளது. அதேவேளை பெரும்பான்மையின பிரதிநிதிகள் ஒன்றும் செய்யவில்லை, தமிழர்தான் நமக்கு எதையும் செய்தார்கள் அல்லது செய்வார்களென நியாயப்படுத்த முடியாது. நமது பிரதிநிதிகளாக வாக்குகேட்டு வந்தவர்கள் வழுக்கல் அடையாமல் சமூகத்தை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். நமது தமிழ் மக்கள் இலகுவாக அணுகி காரியங்களை செயற்படுத்தவே தமது இனைப் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டியவர்களாயிருக்கின்றனர். அதேநேரம் தமிழ் மக்கள் எதிர்பார்த்ததை தமிழ் பிரதிநிதிகள் செய்து முடித்தார்களா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
மலையக சமூகத்தின் அரசியல் வரலாற்றில் அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பங்களிப்பு விசாலமானது அவரே 1983ல் 402 ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொடுத்து மலையக ஆசிரிய நியமனத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர். அவரது கனவு நனவாக வேண்டுமானால் தகுதியான நமது பிரதிநிதிகளின் தெரிவு அவசியமாகும். அதேபோன்று பிரதிநிதிகளும் தகுதியாக நடந்து கொள்ள தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கான வாக்கு சும்மா கிடைத்த சுதந்திரமல்ல. இரத்த செடியூற்றி வளர்க்கப்பட்ட போராட்டக் குழந்தையாகும்.
எஸ். சந்திரமோகன் (முன்னாள் பிரதிமேயர் - பதுளை, சிரேஷ்ட இணைப்பாளர் தேச நிர்மாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு)
இன்று சிறுபான்மை மலையக மக்களின் உணர்வுகளை அடக்கி யாளவே பெரும்பான்மை இன மக்கள் எண்ணியுள்ளதை யதார்த்தங்கள் எடுத்தியம்புகின்றன. இந்நிலை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் இதுவரை நாம் பெற்ற உரிமைகள், சலுகைகள், பறிபட்டுப்போகும். அதே வேளை அவற்றை நாம் கையேந்தி கெஞ்சி கேட்குமளவிற்கு தள்ளப்படுவோம். ஏதோவொரு வகையில் நமக்கென்று சில அமைச்சு அங்கீகாரங்கள் இந்ததால்தான் நமது சமூகத்திற்கு முன்நின்று பேசக்கூடியதாக இருந்தது. நூற்றுக்கு நூறு நமது உரிமைகள் கிடைக்காவிட்டாலும் கூட கணிசமான உரிமைகளையாவது பெறக்கூடியதாக இருந்தது. அதாவது அதனை Something is Better than Nothing எனலாம். சில தீய சக்திகள் நம்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நமது உரிமைகளுக்கு திட்டமிட்டு தடைபோட பார்க்கின்றனர். அத்தகைய சூழ்ச்சிக்காரர்களிடம் நாம் கவனமாக இருக்கும் அதேவேளை, நமது மக்களின் உரிமகளை உரிமை யோடு பெற்றுக்கொள்ள எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படல் வேண்டும். இதனை பதுளை மாவட்ட மக்கள் மனதிற் கொள்வார்களென நம்புகிறேன். அதேவேளை தகுதியான தெரிவும் தமிழர்களின் தெரிவும் அவசியமென உணர்வோமாக!
எஸ். அசோக் (ஊடகவியலாளர், ஊவா வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்)
நடைபெறப் போகும் ஏழாவது நாடாளு மன்ற தேர்தலானது எமது சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாகும். கடந்த நாடாளுமன்றத்தில் மலையக மக்களினது முக்கியத்துவம் கருதி பல்துறை சார்ந்த அமைச்சு பொறுப்புக்கள் மலையக மக்களை பிரதிநிதித் துவப் படுத்தும் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனூடாக மலையக மக்களுடைய முக்கியத்துவமும் உணரப்பட்டிருந்தது. எனவே இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மலையக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். கொடுக்கப்பட்ட அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக் கொண்டவர்கள் தத்தமது பொறுப்புக் களை சரிவர நிறைவேற்றினார்களா என்று எமது சமூகம் தற்போது வினாவெழுப்பிக் கொண்டிருக்கிறது. உடைந்த வீதிகளிலும், நட்டை வீடுகளிலும் மின்சாரம் இல்லாத நிலையிலும், போக்குவரத்து வசதிக்காக போராடும் சூழலும் கல்வித் தரம் கூடியுயர வேண்டும் என்ற அங்கலாய்ப்பும், சுகாதாரம் தொடர்பான சூடான செய்திகளை கேட்டாலும், சுகமாக வாழுகின்ற சூழ்நிலை இல்லையென்று கூறுபவர் களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த பிரச்சினைகள் இப்படி தொடர எங்களது உரிமைக்கான பிரச்சினை அப்படியே இருக்கிறது. மேலும் மலையக மக்களுடைய தனித்துவத்தைப் பேணும் அரசியல் கொள்கையொன்று இவதுவரை யாராலும் முன்னெடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசனமான சூழ்நிலை உருவாகுமானால் இந்நிலை களில் மாற்றம் கொண்டுவரமுடியும். ஆகவே கேட்டுப் பெறுகின்ற நிலமை மாறி, ஏனைய சமூகத்திற்கு கிடைப் பதுபோல் தானாகப் பெறும் சூழ்நிலை மலையகத்தில் மலரவேண்டும்.
வி. அந்தனிஸ் (இணைப்பாளர் ஊவா தொழிலாளர் அபிவிருத்தி நிலையம் – பதுளை)
இலங்கையில் பல்வேறு அரசியற் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் உள்ளன. இவை தேர்தல் காலத்தில் தேசிய கட்சிகளோடு இணைந்து போட்டியிடும் போது அவைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படு கின்ற மக்கள் சமூகத்தின் கோரிக்கைகளை நிபந்தனையாக முன்வைக்கின்றன. உதாரணத்திற்கு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் அந்த சமூகம் சார்ந்த பணிகளைச் செய்கின்றனர். ஆனால்... மலையகத்தின் அரசியற் தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? எடுத்ததே தீர்மானம். கொடுத்ததே வாக்குறுதி என்று எதுவித நிபந்தனையுமில்லாமல் ஆதரவு தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்களை வாக்களிக்கச் சொன்ன அரசியற் கட்சிகள் என்ன செய்தன? மக்களின் ஆலோசனை களை கேட்ட அரசியல்வாதி யார்? மலையக தலைமைகளுக்கும் நாட்டின் தேசிய தலைமைகளுக்கும் மாத்திரமே தொடர்பு இருந்தது. ஆனால் தலைவ ருக்கும் மக்களுக்கும் தொடர்பிருக்கவில்லை. இதனால் தலைவர்கள் தம்பக்கம் இருப்பதால் மக்களும் தம்பக்கம் இருப்பதாக தலைவர்கள் நினைத்தனர். ஆனால் விளைவோ வேறுவிதமாகிவிட்டது. மக்கள் எதிராக வாக்களித்தனர். இது எதைக் காட்டுகிறது? அரச தலைவர் மீது நம்பிக்கை இருந்தும் பெருந்தோட்ட அரசியற் தலைமைகளின் மீதான நம்பிக்கை இழப்பே என்பதை இது புலப்படுத்துகிறது.
எனவே நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஆளும் அல்லது எதிரணி வேட்பாளர்கள் இந்திய வம்சாவளி மக்களுக் கான ஆவணங்களை அல்லது நிபந்தனைகளை முன்வைத்து அரசியல் செய்வதே முக்கியமாகும். பரிந்துரைகள் பின்வருமாறும் என அமையலாம்.
இந்திய வம்சாவளி பெ. தோ. தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணை க்கப்படல் வேண்டும். பெருந் தோட்டங்கள் பிரதேச சபைகளுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும்.
அதனூடாக கிராமங்களில் போல், பிரதேச செயலகத்தினூடாக செயற் படுத்தப்படுகின்ற அபிவிருத்தி, புனர் வாழ்வு சமூக சேவை நிவாரண உதவி ஆகியன பெருந்தோட்ட மக்களையும் அடையச் செய்ய வேண்டும்.
பெருந்தோட்ட மக்களும் தமது வீடு, காணி போன்ற உடமைகளுக்கு வரி செலுத்தி உரித்துடையவராக வேண்டும். M.O.H. சுகாதார வசதி தேவை.
தோட்ட மக்கள் Indian Ordiance என்ற கட்டுமானத்துக்குள் இருந்து விலகி (இந்தியர்களுக்கான கட்டளைச் சட்டம்) இலங்கையின் அரசியற் யாப் பிற்கு அமைவான சட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டு மனித உரிமைகளை பெறுபவராக வேண்டும். மலையக மக்களுக்கான தனியொரு அரசியல் வியூகம் வகுக்கப்படல் வேண்டும்.
தோட்ட சமூகம் வாக்களிக்கத் தெரியாத சமூகமல்ல. செயலுருவாக்க முள்ள புதிய தலைமைகளையே வரவேற்கின்றனர். கூட்டு ஒப்பந்தம் காரணமாகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆகவே, மக்களின் உணர்வுகளை சரியாக இனங்காணுவது அவசியமாகும்.
|