|
வடக்கு-கிழக்கில் இம்முறை வாக்குகள் சிதறும் சூழ்நிலை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகள், அக் கட்சிகளில் பிளவுபட்டு நிற்கும் அணிகள் மற்றும் மக்கள் அபிமா னம் பெற்ற முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் என்றவாறு பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு கள் அதிகளவில் அமையும் பின் புலம் தொடர்பாக ஆராய்கிறது இக்கட்டுரை.
(பிரியந்த ஹேவகே "லங்காதீப' பத்திரிகையில் எழுதிய கட்டுரை யின் தமிழ் வடிவம் இது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் கருமம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவுற்றது. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு விகிதாசாரத்தின் அளவுப் பிரமாணத்தைப் போன்று அல்லாதுவிடினும் இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கின் வாக்காளர்கள் எவ்வித பிரதிபலிப்பை வழங்கக் கூடுமென்பதில் அதிகரித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வினா குறித்தே அதாவது வடக்கு , கிழக்கின் வாக்கு அடிதளம் எவ்விதம் அமையப்போகிறது என்பதே சர்வதேசத்தின் உன்னிப்பான அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. அதாவது 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இடம்பெற்ற வேளையில் வடக்கு, கிழக்குப் பகுதியின் பெருமளவு பிரதேசங்களின் நிர்வாகம் விடுதலைப் புலிகள் அமைப்பின் வசத்திலேயே இருந்தது. அன்றைய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின்கீழ் பகிரங்கமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதியாகவே களமிறங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பும் கூட, தமது குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்குமாறு தமிழ்மக்களுக்குப் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்து நின்றது.
மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவுடன் வன்னி மாவட்டம் மற்றும் கிளிநொச்சியும் உள்ளடங்கும் விதத்தில் யாழ். மாவட்டமும் சேர்ந்தது என வட மாகாணம் அமைகிறது. கிழக்கு மாகாணமானது, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய மாவட்டங்களுக்குரிய தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த 2004 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் 09 ஆசனங்களுள் 8 ஆசனங்களும், வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுள் 5 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுள் 4 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுள் 2 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுள் ஒரு ஆசனமும் என்றவாறு வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய 31 ஆசனங்களுள் 20 ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைக்குக் கிட்டியது. அதற்கு மேலதிகமாக தேசியப் பட்டியலிலிருந்து இரண்டு ஆசனங்களையும் ஈட்டிக்கொள்வதற்கு அது திறன் பெற்றிருந்தது.
ஆனால், இன்றைய நிலைப்பாடு அன்றைய நிலைக்கு முற்றிலும் மாறானதாகும். தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப்பட்டு அதன் சுவடே அற்றுப் போயுள்ளது. ஆனாலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தயவால் நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அரசியல் களத்தில் உள்ளது.
அவர்களது தற்போதைய தலைவிதி மற்றும் அவர்களுக்குத் தமிழ் மக்கள் மத்தியில் இன்று கிட்டியிருக்கும் ஸ்தானம் எத்தரத்தில் உள்ளது என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பெறுபேறுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
வடக்கு,கிழக்கில் முடிசூடிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலிலும் கூட வடக்கு,கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தனது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. ஆனாலும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைய அவர்களுக்கு 2004 இல் கிட்டியிருந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொள்ள இயலுமா என்பது சிக்கலுக்குரியதாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருந்த கருத்து இங்கு நோக்கத் தக்கதாகும். அதாவது, ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தொடர்பாக சிறுபான்மையினச் சமூகங்களின் வாக்குகள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன என்றவாறு அது தெரிவித்திருந்தது.
மேற்படி தேர்தலின்போது அவர்கள் ஒத்துழைப்பு வழங்கிநின்ற ஜெனரல் சரத் பொன்சேகா சிறுபான்மையினங்கள் பெருமளவில் வாழும் வடக்கு , கிழக்கில் வெற்றியீட்டிக்கொண்டிருந்தாலும் கூட, ஒட்டுமொத்த ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே வெற்றி கிட்டியது.
மேற்குறித்த பெறுபேறுகளுக்கு அமைய நோக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. உள்ளடங்கும் பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து பெற்றுக்கொண்ட வாக்குகளின் விகிதாரசாரமானது, 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010 ஆம் ஆண்டில் குறைவடைந்துள்ளதைக் காட்டி நிற்கிறது.
இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு, கிழக்கில் வெற்றியீட்டிக்கொண்டிராத போதிலும், அது பெற்றுள்ள வாக்கு விகிதாசாரத்தில் அதிகரிப்பைக் காட்டி நிற்கிறது. எவ்வாறான போதிலும், ஜனாதிபதித் தேர்தலும், பொதுத் தேர்தலும் வெவ்வேறானவையே என்றவாறு ஒருவரால் வாதிட முடிந்தாலும், பெரும்பாலும் கட்சிக்காரரொருவர் அண்மையில் இடம்பெற்ற தேர்தலொன்றில் தாம் வாக்களித்த கட்சிக்கே வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.
இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களுக்கு அமைய, வன்னிப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் கனகரத்தினம், யாழ். மாவட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் உள்ளடங்கும் சிலருக்கும் கிழக்கு மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பொன்றுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர்களில் பலரும் வேறு கட்சிகள் ஊடாகத் தத்தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அங்கு விசாலமானதொரு வாக்குத் தொகை மாற்றமுற வாய்ப்பமையாது போனாலும் கூட, அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கமாக இருந்த கட்சிக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சார்ந்து கட்சியையும் மாற்றிக்கொள்ளக்கூடும். அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பெறுபேற்றுக்கு ஒவ்வாத விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.
மேலும், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச்சென்றதோடு, கிழக்கு மாகாணத் தமிழ்மக்களும்கூட விலகிநின்று கருணா மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) இணைந்து கொண்டதன் காரணமாக 2004 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடமிருந்து கிட்டிய ஆதரவு 2010 இன் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிட்டும் வாய்ப்புகள் குறைவடையலாம். அத்தாக்கத்தின் இறுதிப் பெறுபேறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களின் எண்ணிக்கை அரைப்பங்கு வரையில் குறையலாம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்குத் தொடர்பாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள பிரதானமான கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியேயாகும். 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இங்கு அவர்களுக்குக் கிட்டியிருந்த ஆசனங்களின் எண்ணிக்கை மூன்றாகும். இன்றைய பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் அதாவுல்லா அணி, ஈ.பி.டீ.பி., ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஆனந்தசங்கரியின் அனுசரணையுடன் களமிறங்கியுள்ள கூட்டணியானது 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பலமானதொரு நிலையைக் காட்டி நிற்கிறது.
வன்னி மாவட்ட வேட்புமனுத் தாக்கலினுள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ரிஷாத் பதியுதீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் கனகரத்தினமும் உள்ளடங்குகின்றனர். ரூபவாஹினி சேவையின் ஊடகவியலாளரொருவராகப் பணியாற்றிய உபுல் பாலசூரியவும் வன்னி மாவட்ட வேட்புமனுவில் உள்ளடங்குகிறார்.
யாழ். மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களுள் டக்ளஸ் தேவானந்தாவும் உள்ளடங்குகிறார். திருகோணமலையின் வேட்புமனுவில் சுசந்த புஞ்சி நிலமேயும் உள்ளடங்குகின்றார். வடக்குக் கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி எவ்வாறான போதிலும் கடந்த தடவையை விட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.
ஐ.தே.கட்சியும்கூட வடக்குக் கிழக்கில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள முன்னணிக் கட்சியொன்றாகும். இங்கு, ஐ.தே.கட்சியின் முக்கிய பலமாக இருப்பது அவர்களது பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸேயாகும். விசேடமாக வடக்குக் கிழக்கில் வாழும் பெருமளவு முஸ்லிம் மக்களின் பலம் முஸ்லிம் காங்கிரஸூக்கு உள்ளது.
அதேவேளை, 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஆறு ஆகும். இத்தேர்தலில் ஐ. தே.கட்சியின் யாழ். மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவியான விஜயகலா மகேஸ்வரனும், வன்னி மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் முன்னணிப் பாத்திரமொன்றான நூர்தீன் மசூரும் உள்ளடங்குகின்றனர்.
இவற்றுக்கு மேலதிகமாக வன்னி மாவட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் சுயேச்சையாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் புதிய இடதுசாரி முன்னணியின் சார்பாகவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவே என்றபோதிலும் ஏனைய கட்சிகளின் ( குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்) வாக்கு அடித்தளத்துக்கு ஏற்படுத்தப்படும் தாக்கங்கள் அதிகமே.
புளொட் அமைப்பும் வன்னி மாவட்டம் தொடர்பாக இம்முறை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. அதன் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தனின் தலைமையிலான அணியும்கூட, நாடாளுமன்ற ஆசனமொன்றைத் தட்டிக்கொள்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
வவுனியா மாவட்டத்தில் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான நிலையான வாக்குவங்கியொன்றைக் கொண்டிருக்கும் அவர்களும் கூட குறைத்து மதிப்பிட இயலாததொரு குழுவினராவர்.
-Uthayan.- *
|