|
ஜ.தே.கூ.வின் வெற்றிக் கிண்ணத்தில் களம் இறங்குகிறார் சரத் பொன்சேகாசட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஊடாக தீர்மானத்தை அறிவித்தார்.
ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது தீர்மானத்தை அவரின் சட்டத்தரணியும் முன்னாள் எம்.பி.யுமான விஜேதாச ராஜபக்ஷ மூலம் கட்சிகளின் தலைவர்களுக்கு (எதிரணிக் கட்சிகளின்) அவர் அறிவித்திருக்கிறார்.
இதனை விஜேதாச ராஜபக்ஷ நேற்று உறுதிப்படுத்தினார்.பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவாகத் தீர்மானம் எடுக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ள நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐ.தே.மு.வில் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென இந்த முன்னணியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு என்பன தீர்மானம் எடுத்து வேட்பாளர் பட்டியலையும் 90 சதவீதம் பூர்த்தி செய்திருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் யாவும் ஒரே அணியில் ஒன்று சேர்ந்தது போன்றதொரு ஏற்பாட்டை பொதுத் தேர்தலிலும் மேற்கொள்வது தொடர்பாக துரிதமாக முடிவு எடுக்குமாறு ஐ.தே.க. ஜெனரல் பொன்சேகாவிடம் கேட்டிருப்பதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தது.
ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த ஜே.வி.பி.யானது வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் பொன்சேகாவின் அணியை இணைத்துக் கொண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் எதிரணியிலுள்ள கட்சிகள் யாவும் ஒரே அணியில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட வேண்டுமென்ற யோசனையை இன்னமும் கைவிட்டிருப்பதாகத் தெரியவில்லை.
வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே முழுதாக இருக்கும் நிலையில் எதிரணிக்கட்சிகள் ஒரே குடையின் கீழ் அணிதிரள்வது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது.எதிரணிக்கட்சிகள் பிளவுபட்டு தனித்தனியாக போட்டியிடுவதால் ஆளும் ஐ.ம.சு.கூ. வின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிக மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையிலேயே பொன்சேகா அணியை ஐ.தே.மு.வில் இணைந்துக் கொள்வதற்கான முயற்சிகளை ஐ.தே.க. தீவிரப்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐ.தே.க.வின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் தேர்தலில் நியமனப்பத்திரங்களில் வேட்பாளர்கள் கைச்சாத்திடவிருந்த போதும் அது இடம்பெறவில்லை. எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்தும் கலந்தாலோசனை இடம்பெறுவதாலேயே நியமனப் பத்திரங்களில் கைச்சாத்திடப்படுவது தாமதப்படுத்தப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.தே.க.விலோ அல்லது ஜே.வி.பி.யிலோ இணைந்து போட்டியிடுவதில்லை என ஜெனரல் பொன்சேகா முன்னர் கூறியிருந்தார். இதனடிப்படையிலேயே தனது கட்சியின் மணிச்சின்னத்தை கைவிட்டு ஜனநாயக தேசிய கூட்டணியின் சின்னமான வெற்றிக்கிண்ணத்தை ஜே.வி.பி. நேற்று தேர்ந்தெடுத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் அணியும் இச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக ஜே.வி.பி. கூறியுள்ளது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரலின் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடு இடம்பெறுமென ஜே.வி.பி. கூறியுள்ளது.இன்று ஜெனரலின் அலுவலகத்தில் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டில் பொன்சேகாவின் பாரியார் அனோமா கலந்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.வெற்றிக் கிண்ணத்தில் போட்டியிடுவதென பொன்சேகா தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலைப் போன்று எதிரணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது சாத்தியமற்றது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
|