|
தமிழ் முற்போக்கு - ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்தை வலியுறுத்திய ரொறன்ரோ கருத்தரங்கு!
கனடாவிலிருந்து எஸ்.சிவபாலன்
பெப்ரவரி 21ம், 2010 அன்று கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கு பற்றிய அனைவரும், தமிழ் மக்களின் அரசியலில் கடந்த 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற தமிழ் பிற்போக்கு சக்திகளை, குறிப்பாக அவற்றின் தற்போதைய பிரதிநிதியான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சகல அரங்குகளிலும் தோற்கடிப்பதற்காக, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள இடதுசாரி – ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டும் என்ற கருத்தைப் பலமாக வலியுறுத்தினர். ‘கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்’ முதன்முதலாக ஏற்பாடு செய்த கருத்தரங்கிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. இக் கருத்தரங்கிற்கு மூத்த இடதுசாரித் தொழிற்சங்கவாதி எஸ்.தருமராசன் தலைமை வகித்தார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தான் வாழும் புலம்nhயர் நாட்டிலிருந்து தாயகம் சென்று, சுமார் நான்கு மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தமிழ் - முஸ்லீம் - சிங்கள அரசியல் தலைவர்களைச் சந்தித்து உரையாடி, பல விடயங்களையும், கண்ணோட்டங்களையும் திரட்டி வந்துள்ள பிரபல ஊடகவியலாளர் எஸ்.மனோரஞ்சன் அவர்களுடான ஒரு சந்திப்பை கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் பலரே மேற்கண்ட அபிப்பிராயங்களை முன் வைத்தனர். கருத்தரங்கில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட மனோரஞ்சன், தனது இலங்கைப் பயண அனுபவங்களை மிகவும் விஸ்தாரமாக எடுத்துரைத்தார். அவர் தனது பேச்சின் போது ஜனாதிபதி தேர்தலின் போது, ஆரம்பத்தில் இலங்கையில் நிலவிய சூழலையும், பின்னர் அது எவ்வாறு மாறிச் சென்றது என்பதையும் விபரமாக விளக்கினார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சுட்டிக்காட்டினாh. ‘அந்த தேர்தலில் மக்கள் மகிந்த ராஜபக்சவை அமோக வெற்றிபெற வைத்ததிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் களமிறக்கப்பட்ட ஒருவர் என மக்கள் கருதியதாகும். எனவே வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் எந்தவொரு சதி முயற்சிகளையும் திட்டவட்டமாக முறியடிக்க வேண்டும் என மக்கள் கருதினர். இரண்டாவது, சரத் பொன்சேகா மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் உருவான இரகசிய ஒப்பந்தம் காரணமாக, மீண்டும் புலிகளின் செயற்பாடுகள் புதுப்பிக்கப்படலாம் என மக்கள் அச்சம் கொண்டனர். இந்த இரண்டு காரணங்களாலும் சரத் பொன்சேகாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் கருதினர். அதன்படியே ஜனாதிபதி தேர்தலில் தமது தீர்ப்பை வழங்கி, தமது உயர்வான தேசபக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்’ என மனோரஞ்சன் விளக்கினார். முன்னதாக கருத்தரங்கில் ஆரம்ப உரையாற்றிய, இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட பிரதேசச் செயலாளர் ச.சுப்பிரமணியம், ‘ இன்று இலங்கை தமிழர்களின் பிரதான தேவை ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுவதே’ என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் இரண்டு அரசியல் போக்குகள் இருந்தன. ஒன்று இடதுசாரிகளின் சோசலிசத்துக்கான அரசியல் போக்கு. மற்றது தமிழ் தேசியத்துக்கான போக்கு. இரண்டு போக்குகளுமே ஜனநாயக ரீதியில் செயற்பட்டன. ஆனால் எப்பொழுது புலிப் பாசிசம் உருவாகியதோ அன்றே, இரண்டு அரசியல் போக்குகளினதும் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. அதன் பின்னர் சோசலிச இலட்சியத்தையும், தமிழ் தேசிய அபிலாசைகளையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகளிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை நடாத்த வேண்டிய தேவை அனைத்து தரப்பினருக்கும் முன்னால் எழுந்தது. அந்த நீண்ட நெடிய போராட்டத்தின் முடிவாக, கடந்த ஆண்டு மே 18ம் திகதியுடன் புலிப் பாசிசம் இலங்கை மண்ணிலிருந்து முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. புலிகள் அழிக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் பல்வேறு விதமான ஜனநாயக விரோதப் போக்குகள் நிலவி வருகின்றன. அவையும் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அத்துடன் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இன்னமும் புலிப் பாசிசத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் வலுவாகக் காணப்படுகின்றன. அதை முறியடிப்பதானால் தமிழ் இடதுசாரி – ஜனநாயக சக்திகள் இணைந்து செயற்படுவதுடன், தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் பற்றிய விழிப்புணர்வையும் தீவிரமாக ஏற்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டார். பிரதம பேச்சாளரின் உரையைத் தொடர்ந்து, கலந்துரையாடல் இடம் பெற்றது. அதன் போது, ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி) அமைப்பைச் சேர்ந்த ஜேம்ஸ், ஈ.பி.டி.பி அமைப்பைச் சேர்ந்த மகேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட ஏராளாமானோர் கருத்துரை வழங்கினர். கருத்துரை வழங்கிய பலரும் தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் அவசியத்தைப் பலமாக வலியுறுத்தினர். அத்துடன் தமிழ் மக்களின் பிரதான களமான யாழ்ப்பாணத்தில் வெளிவரும் மூன்று தினசரிப் பத்திரிகைகளும் கடந்த காலங்களில் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஆதரவாகத் தீவிரமாகச் செயற்பட்டதுடன், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பேரினவாதியும், போர் வெறியுடன் தமிழ் மக்களை வகை தொகையில்லாமல் கொன்று குவித்தவருமான சரத் பொன்சேகாவை ஆதரித்தன. இந்த தினசரிப் பத்திரிகைகள் தற்பொழுதும் தமிழ் இனவாத வெறியை தமிழ் மக்கள் மத்தியில் தீவிரமாக ஊட்டி, அவர்களை நாசகாரப் பாதையில் தள்ளி வருகின்றன. எனவே அவைகளை மக்கள் நிராகரிக்கும் பொருட்டு புலம் பெயர் தமிழ் ஜனநாயக சக்திகளின் நிதியுதவியுடன், இலங்கை தமிழ் மக்களுக்கென நடுநிலைமையுள்ள தினசரி பத்திரிகை ஒன்று அங்கு ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கருத்தரங்கில் பங்குபற்றியவர்கள் மிகவும் ஆக்கபூர்வமாகவும், உயிரோட்டத்துடனும் தமது கருத்துகளை முன்வைத்ததை அவதானிக்க முடிந்தது.
|