|
தேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்
-தேவன் (கனடா)
பகுதி 2
புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டை அவதானித்த ஒரு வெள்ளை இனத்தவர் David Prater J.D (The University of Maryland School of Law) என்பவர் அண்மையில் எழுதிய The Transitional Justice Function of Multicultural Policies in Sri Lanka எனும் கட்டுரையில் அர்த்தமுள்ள ஆழமான பல விடயங்களை பதிவு செய்துள்ளார்.
அதாவது புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேலாக அர்த்தமற்ற போருக்கும் சாத்தியமற்ற ஈழம் எனும் இலக்குக்கும், அழிவுக்கும் பல பில்லியன்களை பங்களிப்பு செய்தது போல, போர் முடிவின் பின்னரான காலத்தில் இலங்கைத் தீவில் ஜனநாயக துஸ்பிரயோகமற்ற, இனவாதமற்ற, சமூக நீதியை பேணக்கூடியதான, ஐக்கிய இலங்கைக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கும், தமிழ் சமூகத்தை பன்முகப்படுத்துவதற்கும் புலம்பெயர் வாழ்வு அனுபவங்களை பங்களிப்பு செய்வதுடன், கடந்தகால தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடுவதுடன், போருக்கு பின்பான தேசத்தையும், தமிழ் சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கு தார்மீகரீதியாக முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்.
ஆனால் யதார்த்தம் என்னவோ யுத்தம் முடிந்து 3 வருடம் ஆகியும் நல்லாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, பன்மைத்துவம், இனங்களுக்கிடையிலான சமத்துவம், நிரந்தர அமைதி, அரசியல் தீர்வு போன்ற உன்னத விடயங்கள் வெகு தொலைவில் கலங்கரை விளக்கு போல் தெரிகிறது.
சுதந்திரத்துக்கு பின்னாலான இலங்கையின் வரலாற்றுச் சுவடுகள் இனங்களுக்கிடையில் கொந்தளிப்பானதாகவே இருந்து வருகிறது. இதற்கான காரணம், தேசத்தை ஆட்சி செய்த சிங்களத் தலைவர்களும் சரி, தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் தலைவர்களும் சரி, சிங்கள – தமிழ் சமூகத்தினரை இலங்கையர் எனும் ஒரு குடையின் கீழ் பன்முகத் தளத்தில் வழி நடத்துவதற்குப் பதிலாக, தமது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும், இருப்பை உறுதி செய்வதற்காகவும் இனத்துவ அடையாளங்களையே மூலதனமாக இனவாதத் தளத்தில் பாவித்து வந்துள்ளார்கள்.
தமிழ் சமூகத்தின் பின்னடைவுக்கும், தோல்விக்கும், தொடாச்சியான அழிவுக்கும் தமிழர்களை இனவாத, போலி தேசியவாத தவறான பாதையில் வழி நடாத்திய தமிழரசுக்கட்சியிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரையிலான தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ் சமூகத்தின் 60 வருடங்களுக்கு மேலான பின்னடைவுக்கு பின்பு கூட, த.தே.கூ முரண்பாடான அரசியலையே நடத்தி வருகிறது. இதற்கு அண்மைய உதாரணங்களாக சம்பந்தர் தேசியக் கொடியை ஏற்றுகிறார். பின்பு தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் பிரிவினைக் கருத்தை விதைக்கிறார். அதே கட்சியில் இருக்கும் விநாயகமூர்த்தி என்பவர் தேசியக் கொடி ஏற்றியதை மறுக்கிறார். உள்நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் மகிந்தாவின் கொடும்பாவி, தேசியக் கொடி, அரசியல் யாப்பு போன்றவைகள் எரிக்கப்படுகின்றன. இவைகளை வுNயு கண்டிப்பதுமில்லை. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமில்லை இவைகள் தவிர தமிழ்நாட்டிலும் தி.மு.க, அ.தி.மு.க, பல சிறிய கட்சிகள் என்பன இலங்கைக்கு எதிராகவும், தமிழர் வாழ்வோடு விளையாடும் வகையிலும,; தமது இருப்புக்காக போட்டியாக அரசியல் செய்து வருவதை வுNயு மௌனமாக அங்கீகரிக்கிறது.
இவ்வாறான இனவாத, பிற்போக்குவாத அரசியல் போக்குகள் எந்த வகையிலும் யுத்தத்துக்கு பின்னரான தேசத்தை கட்டி எழுப்புவதற்கும், இனங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நிரந்தர அமைதி, அரசியல் தீர்வு எட்டுவதற்கும் தடையாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தலைமைகள் கடந்த 60 வருட வரலாற்றில் தமிழ் சமூகத்துக்கு செய்தவை என்ன? சாதித்தவை என்ன? தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும், தேசிய ஒடுக்குமுறைக்கு பிரிவினையை தீர்வாக விதைத்த, வன்முறை கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என கொண்டாடினர்கள். அவரைத் தொடர்ந்து பிரிவினையை மேலும் உக்கிரமடையச் செய்து தனது பேச்சாற்றலால் தமிழர்களையும், இளைஞர்களையும் கவர்ந்து அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற அ.அமிர்தலிங்கத்தை ‘தளபதி’ என புகழ் பாடினார்கள்.
இவர்களின் வார்pசாக, தன்னை ஏகபோக தலைவனாக, தன்னைத்தானே தமிழர்களின் தலைவன் என்று கூறிக்கொண்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, எண்ணற்ற கொலைகள் செய்த – சிறார்களின் வாழ்வை பாழடித்த, தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த வளங்களை சேதத்துக்கு உள்ளாக்கிய – வாழ்வை நிர்மூலமாக்கிய, தமிழர்களின் அவமானத்தின் சின்னமான பிரபாகரனை தமிழ்த் ‘தேசியத்தின் தலைவர்’, ‘கடவுள்’, ‘மேதகு’ என்றெல்லாம் 2009ம் ஆண்டு மே மாதம் வரை பெரும்பான்மையான தமிழர்களால் போற்றி புகழப்பட்டது.
இலங்கைத் தமிழருக்கு தேசிய ஒடுக்குமுறை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அந்த ஒடுக்குமுறையை தீர்ப்பதற்கு தேர்வு செய்த அழிவுப்பாதைகளான “தமிழ் ஈழம்”, அதை அடைவதற்காக வன்முறைக் கலாச்சாரம், கொலைகள், மனித உரிமை மீறல்கள், சிறுவர்களை பலாத்காரமாக போரில் இணைத்தல், மாற்றுச் சிந்தனை, மாற்றுக் கோட்பாடு வெளிப்படுத்திய தலைவர்களை கொன்று ஒழித்தது, நம்மவர்களுக்கு சொல்லொணா துயரங்களை ஏற்படுத்தியது என, பல இரத்தக்கறை படிந்த சம்பவங்களை விமர்ச்சித்துக் கொண்டே போகலாம்.
இதில் உள்ள தார்மீகரீதியான கேள்வி என்னவென்றால், சிங்கள தேசியவாத ஒடுக்குமுறைக்கு தீர்வாக இரத்தமும் சதையும் பிணமுமாக ஆயுதக் கலாச்சாரத்தை தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டு, தேசமே கடந்த 30 வருடமாக எரியும்போது தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான தமிழ் தேசியவாத ஊடகங்கள், ஆன்மீக நிறுவனங்கள், தேசியவாத கவிஞர்கள், இலக்கியவாதிகள், வியாபார நிறுவனங்கள் புலித் தேசியவாத பாசிச ரத்தம் தோய்ந்த அவதூறுக் கலாச்சாரத்தின் மீது யாரும் தார்மீக ரீதியாக (Moral) கேள்வியோ, விமர்சனமோ, எதிர்ப்போ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 வருட இருள் சூழ்ந்த வரலாற்றில் ஒரு சில குறிப்பிட்ட நல்ல முற்போக்கான மனித நேயம் உள்ள மனிதர்கள் தர்மத்தின் மீதும், தார்மீகத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள், புலிகளின் கொலை வெறிப் பாசிசத்தை நோக்கி கேள்வி, விமர்சனம் செய்தவர்களுக்கெல்லாம் துரோகிப் பட்டமும், அவர்களின் வாழ்வின் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டது. ஒருசிலர்தான் (புலிகளின் சிறை அனுபவங்களை எழுதும் இடதுசாரி நண்பர் மணியம்) போன்றோரே அபூர்வமாகத் தப்பி உயிர் வாழ்கிறார்கள்.
தமிழ் சமூகத்தின் தேசிய இன முரண்பாட்டிற்கான வரலாறு இரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டு பார்க்கப்படுகிறது. முதலாவது வகையானது அகிம்சைப் போராட்டமாகவும், இரண்டாவது வகையானது ஆயுதப் போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
மொத்தமாக 60 வருடத்துக்கு மேற்பட்ட தேசிய இன முரண்பாட்டு வரலாற்றில் அகிம்சைப் போராட்டத்திலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி, குறைந்தபட்சம் சத்தியம், நேர்மை, தார்மீகம் வெளிப்படுத்தப்படவில்லை. தார்மீக அறநெறிகளுக்குப் பதிலாக இனவாதம், தேச விசுவாசமின்மை, தேசப்பற்றற்ற துரோகம், இரத்தத்தை உறைய வைக்கும் கொலைகள், வன்முறைக் கலாச்சாரம், அரசியல் அதிகாரங்களை, இருப்புக்களை, பாராளுமன்ற சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இன அடையாளங்களை தேர்தல் காலத்தில் பரப்புரை செய்தல், தேசிய வாழ்விலும், தேசிய நீரோட்டத்தில் இருந்தும் தமிழ் சமூகத்தை தனிமைப்படுத்தல், அவலங்களை உருவாக்குதல், அவலங்களை செழுமையான வாழ்வுக்காக பயன்படுத்ததல் போன்றவைதான் தமிழரின் அரசியல் வரலாறாக இருக்கிறது.
மிதவாத, இனவாத, பிற்போக்குவாத தமிழரின் அரசியல் தலைமையான தமிழ் காங்கிரசில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வரை, தமிழ் மக்களை கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக இரத்த ஆற்றில் மிதக்கவிட்டது தான் அரை நூற்றாண்டுக்கு மேலான அரசியல் தலைமைத்துவ சாதனையாக இருக்கிறது.
தமிழ்ச் சமூகத்தின் தேசிய ஒடுக்குமுறைக்கு “தீர்வு” – அதிகாரப் பகிர்வு தேவை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் தீர்வைப்பற்றி சிந்திப்பதற்கு முன்னால் தமிழ் தரப்பில் பல மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வு பற்றி சிந்திக்கும்போது ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது. புலிகள் வட கிழக்கில் சர்வாதிகார ஆட்சி நடாத்திய போது, ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கனடா வந்திருந்தார். அப்போது இனப்பிரச்சினை பற்றி, தீர்விவு பற்றி, பல கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் சமஸ்டி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் என பலவகையான தீர்வுகள் முன்மொழியப்பட்டிருந்தன. அனைவரது கருத்தையும் பொறுமையாக செவிமடுத்த அந்த ஐரோப்பிய நண்பர், தனது கருத்தை வெளிப்படுத்தும் போது, “புலிகள் அழிவதுதான் தமிழ் மக்களுக்கு பெரிய ஒரு தீர்வு” என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியிருந்தார்.
அந்த மனிதர் அப்படி ஒரு கருத்தை முன்வைக்கும் அளவுக்கு 2009க்கு முன்பு புலிகளின் அராஜகம் வட – கிழக்கில் தலைவிரித்தாடியது. ஆனால் 2009க்கு பின்பும,; 60 வருட வரலாற்றை கவனத்தில் எடுக்கும் போதும,; தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வாக அப்படி ஒரு கருத்தை இப்போது முன்வைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது, தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் கட்சிகள் ‘சோறா சுதந்திரமா?’, ‘தமிழ் ஈழத்துக்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்கமாட்டோம்’, ‘இலங்கை அரசியல் யாப்புக்கு கீழ் பேச்சுவார்த்தை நடாத்தமாட்டோம்’, ‘அபிவிருத்தி தேவையில்லை உரிமையே வேணும்’ என்று கூறி வந்த தமிழ்த் தலைமைகள், இறுதியாக ‘கிழக்கு மாகாணசபை தேர்தலானது கடவுளால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இறுதி சந்தர்ப்பம’; எனவும், ‘அனைத்து கிழக்கு தமிழ் மக்களும் TNA க்கு வாக்களித்து எங்களை நாங்களே ஆள வேண்டும்’ என்றும், மக்கள் தம்முடைய பக்கம் இருப்பதாகவும், உலகம் TNA க்கு பின்னால் நிற்பதாகவும், வரலாறு படைக்கும் படியும் மேடைக்கு மேடை முழங்கினார்கள்.
உலக வரலாற்றிலேயே பாராளுமன்ற பதவிகளை எந்தத் திட்டங்கள் இல்லாமலும், என்ன செய்தோம் என்று மக்களிடம் கூறாமலும், மக்கள் வரிப்பணத்தில் ஏப்பம் விட்டும், தேசத்துக்கு விசுவாசம் இல்லாமலும், எதிராகவும், சத்தியப் பிரமாணத்தை அரசியல் யாப்பை மீறும் வகையிலும் துரோகத்தனமான, சுயலாப, தேசத்துரோக, இனவாத அரசியல் செய்து வரும் அரசியல் தலைமைகள் தமிழ் காங்கிரஸ், தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையாகத்தான் இருக்க முடியும்.
குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழரின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் யாழ்ப்பாண மேட்டுக்குடி அப்புக்காத்து பாரம்பரியத்தாலும், அவர்களால் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பாசிச புலிகளின் பாரம்பரியத்தாலும் முழுத் தமிழ் சமூகமும் கோமா நிலையையே அடைந்தது.
முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களை பெரும் மானிடத் துயருக்கும், கோமா நிலைக்கும் அழைத்துச் சென்ற சம்பந்தன் தலைமையிலான TNAகட்சியினர், இறுதி யுத்தம் நடக்கும் போது தேசத்தை விட்டு தப்பியோடி இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் தஞ்சம் புகுந்ததுடன், தேசத்துக்கு எதிராகவும், புலிகளுக்கு ஆதரவாகவும் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடக்கும் போதும், அதற்கு முன்பும் பின்பும் போரால் அவதிப்பட்ட மக்களை விட்டுவிட்டு ஓடாமல் புலிகளால் இலக்கு வைத்து உயிர் தப்பிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களுக்கு அமைதியான முறையில், ஆர்ப்பாட்டம், பரபரப்பு இல்லாமல் விபரிக்க முடியாத பல சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பைபிள் கூறுகிறது, “பாவம் செய்தவர்களுக்கு மரணம் தான் முடிவு” என. ஆக கடந்த 30 வருடமாக தமிழ் மக்களுக்கு செய்த பாவத்துக்கு புலிகளுக்கு 2009 வைகாசி மாதம் சரியான தண்டனை கிடைத்தது. ஆனால் பாவம் செய்ய தூண்டினவர்கள் இன்னும் தமிழ் மக்களுக்கு பல பாவங்களை செய்தபடி வாழ்ந்து வருகிறார்கள்.
அத்துடன் தமிழர்கள் தாங்களே ஆள வேண்டும் என்றும், தங்களிடம் வட – கிழக்கு அதிகாரங்களை கொடுக்கும்படியும் அரசாங்கத்தை வற்புறுத்தி வருகிறார்கள். உண்மையிலேயே போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது செய்ய நினைத்தால், அதற்கு ஆட்சி அதிகாரம் தேவையில்லை. இறுதி ஈழப் போருக்காக சேகரித்த பல மில்லியன் டொலர் பணம் புலம்பெயர் புலி பினாமிகளிடம் புதைந்து போயுள்ளது. அந்தப் பணத்தை வன்னி மக்களின் தேவைகளுக்கு கொடுத்து உதவும்படி யாரும் கேட்பதில்லை.
அதன் முன்னேற்பாடாக செப்ரெம்பர் 8ம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் முகமாக ஐ.தே.கட்சியிடமும், முஸ்லீம் காங்கிரசிடமும் ஆதரவு வேண்டி நிற்கிறார்கள். என்னே ஒரு தார்மீகம், என்னே ஒரு சமூக அக்கறை. தமிழ் மக்களுக்கு பெரும் மானிடத் துயரை ஏற்படுத்திய ஐ.தே.க. இடம் ஆதரவு தேடுவதும், புலிகளால் 48 மணித்தியாலத்தில் விரட்டி அடிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்திடம் ஆதரவு கேட்பதும், TNAக்கும் முஸ்லீம் காங்கிரசுக்கும் புரிந்துணர்வு இருப்பதாக கூறுவதும், என்னே ஒரு தார்மீகம், என்னே ஒரு தலைமைத்துவ லட்சணம்.
உண்மையிலேயே சம்பந்தன் தலைமையிலான TNA இல் உள்ள 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மைத்தாமே பெரிய கண்ணாடியின் முன் நின்று சுய விமர்சனம் செய்ய வேண்டும். தமிழ் சமூகத்தை ஆள்வதற்கு தமக்கு தகுதி இருக்கா என, அத்துடன் 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற தலைவர்களா தாம் எனக் கேட்டு அரசியலிலிருந்தும், பொது வாழ்வில் இருந்தும் விலக வேண்டும். அப்போது தான் தமிழ் சமூகத்திற்கு புதுயுகம் பிறக்கும்.
தொடரும்
|