|
புலிகள் பேச அழைத்தால் இலங்கை அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது?
- ஞானம் அருட்பிரகாசம்.
 கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவனேசனின் மரணச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய இன்னொரு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னியில் தங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், அரசாங்கத்துடன் தாங்கள் புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக சொன்னதாக கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பிரேமச்சந்திரன் வெளியிட்ட இத்தகவலைத் தொடர்ந்து மீண்டும் அரசுக்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுமா? புலிகள் உண்மையில் பேச்சுவார்த்தையில் நாட்டமாக இருக்கின்றனரா? புலிகளின் அழைப்புக்கு அரசாங்கம் என்ன பதிலளிக்கப் போகின்றது? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளன. இந்த விடயத்தை ஆராய்வதற்கு முன்னர் முதலில் ஒரு விடயம் தெளிவாக வேண்டும். அதாவது புலிகள் தமது விருப்பை சும்மா போகிறபோக்கில் தெரிவித்துள்ளார்களா அல்லது உத்தியோக ப+ர்வமாக அரசுக்குத் தெரிவித்துள்ளார்களா என்பதே அது. எது எப்படியிருப்பினும் புலிகள் பேச்சுவார்த்தைக்கான ஒரு அழைப்பை தந்திரரோபாய முறையில் விடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது உண்மையான நிலையே. அதற்கான காரணங்கள் பலவுள்ளன. மகிந்த ராஜயபக்ச ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் புலிகள் தமது வழமையான பாணியில் இலங்கை இராணுவத்துடன் ‘சொறிந்து’ பார்க்கப்போய் இப்பொழுது நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளனர். ஒன்றன் பின் ஒன்றாக அவர்களுக்கு பல இழப்புகளும் தோல்விகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கிழக்கு மாகாணம் முழுவதையும் மன்னாரில் சில பகுதிகளையும் புலிகள் அரச படைகளிடம் பறிகொடுத்துள்ளனர். புலிகளுக்கு வாய்ப்பாக அமைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. புலிகள் தமது அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட முக்கியமான இராணுவ, புலனாய்வு பொறுப்பாளர்களை இழந்துள்ளனர். புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் கடத்தி வந்த பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், புலிகளின் ஏராளமான பயிற்சி முகாம்கள் விமானப்படையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற முக்கியமான நாடுகள் இலங்கை இராணுவத்திற்கு நவீன ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி வருவதுடன், குறிப்பாக இந்தியா புலிகளின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி புலிகளுகெதிரான போரில் இலங்கை இராணுவத்திற்கு சகல வழிகளிலும் உதவி வருகின்றது. அரசாங்கம் இலங்கையின் பெரும்பான்மையான மக்களும் உலக நாடுகளும் ஏற்கும் வகையில் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தீர்வுகாணப்படும் என அறிவித்துள்ளதுடன், கிழக்கில் வெற்றிகரமாக உள்ள+ராட்சி தேர்தலையும் நடாத்தி முடித்துள்ளது. விரைவில் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் வடக்கிற்கு இடைக்கால சபையும் அமைய உள்ளது. இந்த நடவடிக்கைகள் எல்லாமே புலிகளை முன்னொருபோதும் இல்லாதவகையில் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி உள்ளன. முன்னைய அரசுகள் போலல்லாது மகிந்த ராஜபக்சவின் அரசு, புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து தமிழ் மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெளிவாகவும் பகிரங்கமாகவும் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அறிவித்துள்ளது. எனவே புலிகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மகிந்த அரசின் நிலைப்பாடு என்னவென்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் புலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிவரும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளான ஐக்கிய தேசியக் கட்சி, மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள், அவர்களது வளர்ப்பு பிராணிகளான மனித உரிமை அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன மகிந்த அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகளை மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்துவருகின்றன. அரசாங்கம் போர் வெறியில் இருப்பது போலவும் மனித உரிமைகளை மோசமாக மீறிவருகின்றது போலவும் அண்மைக்காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையைச் சார்ந்த அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்பு (HRW)), சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்க, பிரிட்டிஷ், ஐரோப்பிய அரசுகள் என்பன பெரும் எடுப்பில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றதின் பின்னணி விளங்கிக் கொள்ளக் கூடியதே. இவை எல்லாமே தமது தேவைக்கேற்ப விஷயங்களைக் கையாளும் ஏகாதிபத்திய சக்திகளின் செயற்பாடாகும். ஆனால் இதே அணியில் புலிகளைக் கடந்த காலத்தில் கடுமையாக விமர்சித்து வந்த மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் (UTHR) , இலங்கை ஜனநாயக அரங்கம் (SLDF) என்பனவும் சேர்ந்துள்ளதின் பின்னணி தான் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கின்றது. எனவே இவ்வாறான ஒரு சூழலில் புலிகள் தம்மை சமாதான விரும்பிகளாகவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாகவும் காட்டிக்கொள்வதின் மூலம் சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். அத்துடன் தமது வேண்டுகோளுக்கு அரசாங்கம் செவி சாய்த்தால் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை மீண்டும் அரங்கேற்றி காலத்தை இழுத்தடித்து தம்மை பலப்பபடுத்திக் கொண்டு, யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதே அவர்களது நோக்கமாகும். புலிகளின் தந்திரோபாயங்கள் எல்லோருக்கும் அத்துபடி என்றபடியால் அவர்களின் இப்போதைய சமாதான அழைப்பும் என்ன நோக்கத்துடனானது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் உண்மைகள் எதுவாக இருப்பினும் அரசியலில் தந்திரோபாய ரீதியானதும் இராஜதந்திர ரீதியானதுமான அணுகுமுறைகள் அவசியம் தேவை. அந்த வகையில் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தால் அதற்கு அரசாங்கம் பதிலளித்தே ஆகவேண்டும். ஏனெனில் யுத்தத்தின் மறுதரப்பு பங்காளிகள் புலிகள் என்றபடியால் அவர்களது அழைப்பை அரசாங்கம் தட்டிக் கழித்துவிட முடியாது. ஆனால் பேச்சுவார்த்தை என்ன நோக்கத்திற்காக என்ன அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை அரசாங்கம் தெளிவாக வரையறுக்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது யுத்தத்தை நிறுத்தி, சமாதான சூழலை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு களச் சூழ்நிலையை உருவாக்குவதற்காக அரசாங்கம் புலிகளுடன் பேசுவதில் தவறில்லை. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுவதற்கு முன்னர் அரசாங்கம் புலிகளிடம் சில உத்தரவாதங்களைப் பெறுவது அவசியம். முக்கியமாக பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளை புலிகள் முன்னைய காலங்கள் போலல்லாது சரியாகக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்ற வாக்குறுதியைப் பெறவேண்டும். அத்துடன் ஒரு புறம் சமாதானம் பேசிக் கொண்டு மறுபுறம் பிஸ்டல் குழுவையும் தற்கொலைக் குண்டு தாரிகளையும் அனுப்பி மாற்றுக் கருத்தாளர்களை கொலை செய்வதையும் ஆயுதப் படைகள் மீது தாக்குதல் நடாத்துவதையும் நிறுத்த வேண்டும் என்பதையும் உத்தரவாதமாய் பெறவேண்டும். மிக முக்கியமான விடயம் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு ஏகாதிபத்திய நாடுகளையோ அல்லது அவர்களது வால்பிடி நாடுகளான நோர்வே போன்ற நாடுகளையோ அல்லது அவர்களின் நலன்களுக்காகச் செயற்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளையோ அழைக்கக்கூடாது. மாறாக உள்நாட்டிலேயே தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த கல்விமான்கள், சமூக – சமய பெரியார்கள் கொண்ட ஒரு குழுவினரை மத்தியஸ்தர்களாக வைத்துப் பேசலாம். இல்லாவிடின் எமது தென்னாசிய நாடுகளின் கூடு;ட்டமைப்பான சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை மத்தியஸ்தர்களாக அழைக்கலாம். என்ன காரணம் கொண்டும் ஏகாதிபத்திய சக்திகளை மத்தியஸ்தத்திற்கு அழைக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மத்தியஸ்தத்திற்கு வந்தால் பல நாடுகளில் செய்தது போல ‘குரங்கு அப்பம் பங்கிட்ட கதை’யையே இங்கும் செய்வார்கள். புலிகளுடன் பேசி யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அவர்கள் சம்மதித்தபின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் மட்டும் இடம் பெற்றால் பயனளிக்கப் போவதில்லை. எனவே இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பங்குபற்றுவது அவசியமானது. குறிப்பாக தமிழர் தரப்பில் புலிகளுடன் ஏனைய தமிழ் ஜனநாயக கட்சிகளும் பங்குபற்றுவது அவசியம். அதேவேளையில் அரசுடன் பிரதான எதிர்க்கட்சியும் ஏனைய முக்கியமான தென்னிலங்கைக் கட்சிகளும் பங்குபற்றுவது அவசியம். முஸ்லீம் மக்களினது பிரச்சினை இலங்கையின் இனப்பிரச்சினையுடன் பின்னிப் பிணைந்து கிடப்பதால் அவர்களது பிரதிநிதித்துவம் பேச்சுவார்த்தையில் முக்கியமானது. இனப்பிரச்சினைக்கான தீர்வு ஐக்கிய இலங்கையை அடிப்படையாகவும் தமிழ், முஸ்லீம் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதாகவும் இருப்பது அவசியம். பேச்சுவார்த்தை காலவரையறையைக் கொண்டதாகவும் நிரந்தரத் தீர்வை நோக்கியதாகவும் இருக்க வேண்டும். வருங்காலத்தில் இவ்வகையான ஒரு அணுகுமுறையை கைக்கொள்வதன் மூலமே புலிகளுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் பயனுள்ளதாக்க முடியும். அதைவிடுத்து பேச்சுவார்த்தையை தம்மைப் பலப்படுத்திக்கொண்டு மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக புலிகள் பயன்படுத்துவதற்கு அனுமதித்தால் இப்போது இருப்பதைவிட மோசமான ஒரு நிலையே ஏற்படும். அவ்வாறு செய்வதற்கு அவர்கள் முற்படுவார்களாக இருந்தால் அவர்களை ப+ண்டோடு அழித்தொழிப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.
|