|
அடைக்கலம் தேடும் பின் லேடன் மகன்
ரியாத், மார்ச் 24: அல் காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன், அகதியாக வாழ அடைக்கலம் தேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பின் லேடனின் குடும்பத்தார் தெஹ்ரானிலிருந்து வெளியேற ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகள் உதவவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின் லேடனின் மகன்கள் 2001-ம் ஆண்டு முதல் ஈரானிலுள்ள தெஹ்ரானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒசாமாவின் மகனான உமர் பின் லேடனின் 2 மகன்களின் குடும்பத்தார் மட்டும் கடந்த 3 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
மற்றவர்கள் தொடர்ந்து தெஹ்ரான் நகரிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு பின் லேடனின் மகன் உமர் பின் லேடனிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: 2001-ம் ஆண்டு முதல் எங்களின் குடும்பத்தார் வீட்டுக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் என்னுடைய 2 மகன்களை மட்டுமே சிரியாவுக்கு அனுப்ப சம்மதித்தனர். மற்றவர்கள் அனைவரும் இன்னும் வீட்டுக் காவலில்தான் இருக்கின்றனர்.
எங்கள் குடும்பத்தாரை வீட்டுக் காவலிலிருந்து வெளியே விட ஈரான் அரசு மறுத்துவருகிறது. கிழக்கு நாடுகளோ அல்லது மேற்கத்திய நாடுகளோ எங்கள் குடும்பத்தாரைக் காப்பாற்ற முன்வர வேண்டும். அவர்கள் ஒன்றுமறியா அப்பாவிகள்.
எங்கள் குடும்பத்தாரை விடுவித்து ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது கத்தாரிலோ அகதியாக வாழ ஏற்பாடு செய்யவேண்டும். எங்களுக்கு அடைக்கலம் தர எந்த நாடாவது முன்வரவேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒசாமாவின் மகன்கள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் என மொத்தம் 23 பேர் வீட்டுக் காவலில் 2001-ம் ஆண்டு முதல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|