|
லண்டனில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.6 ஆயிரம் அபராதம்
லண்டன், மார்ச் 24: லண்டனில் பான் பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை மென்று பொது இடங்களில் துப்புவோருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசிக்கும் இந்தியர்கள்தான் பான் பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை மென்று பொது இடங்களில் துப்பி வைப்பதாக புகார் எழுந்தது. இந்தியர்களின் இந்தச் செயலை தடுப்பதற்கு லண்டன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பிரென்ட் நகராட்சி, பொது இடங்களில் பான் பராக் எச்சிலை துப்புவோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை உடனே அமல்படுத்திவிட்டது.
""பிரென்ட் நகராட்சிக்கு உள்பட்ட வெம்ப்லே பகுதியில் எங்கு பார்த்தாலும் பான் பராக் கறையாக உள்ளது. இது பார்ப்பதற்கே அருவருப்பாகவுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நகரின் அழகு கெட்டுவிடும். பின்னர் பிரென்ட் நகராட்சி என்றாலே சுகாதாரமற்றது என்ற எண்ணம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுவிடும்.
எனவே, அப்படியொரு நிலை ஏற்படுவதை விரும்பவில்லை. இனிமேல் பொது இடங்களில் யார் எச்சிலை துப்பினாலும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஆபராதமும் விதிக்கப்படும் என்று அந்நகர கவுன்சிலர் கவின் ஸ்நெடான் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இனிமேல் பொது இடத்தில் எச்சிலை துப்ப நினைப்பவர்களுக்கு அரசின் எச்சரிக்கை ஞாபகத்துக்கு வரும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்
|