Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி.நியூஸ்
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
காந்தீயம்
நம்நாடு
தாயகம்
தம.வி.கழகம்(புளொட்)
தமிழலை
த.வி.கூட்டணி
தமிழ்நியூஸ்வெப்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
எங்கள் தேசம்

Asian Truth

Asian Guardian

Asientribune

Independentsl

Lines-Magazine

Lanka Muslims

lankaguardian.Blog

Srilankanmic

Membres.Lycos

Tamilaffairs

Sldf

The lka academic

Tamil Week

Uthr

a_Thenee_head02

19.04.2008                   Vol.8                       Issue: 54

தமிழக மாயையும் சர்வதேச அரசியல் யதார்த்தங்களும்

ஈழத் தமிழர்கள் நடாத்தும் ஊடகங்கள்தான் அவற்றுக்கு இந்தளவு முக்கியத்துவம் கொடுத்துப் பெருப்பித்துக் கூறுகிறதே தவிர, அந்தளவுக்கு அங்கே ஒன்றும் பெரிய எழுச்சி ஏற்பட்டுவிடவில்லை

nedumaran_05_63830_435பழ.நெடுமாறன், வை.கோபாலசாமி, திருமாவளவன், விஜயகாந்த் என்ற வரிசை விஜய ரி.ராஜேந்தர் வரையில் இப்போது நீண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக முழு நேரமாகக் குரல் கொடுப்பதற்காக தமிழக அரசில் தமக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய பதவி ஒன்றையே ராஜேந்தர் இராஜினாமாச் செய்திருப்பதாக தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் அதிகளவில் அரசியல், இராணுவ, மனிதாபிமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து எழும் இந்தக் குரல்கள் பலருக்கும் ஆறுதல் தரும் விடயமாகத்தான் தென்படுகிறது.

இலங்கை விடயத்தில் இந்தியா கடைப்பிடித்துவரும் அணுகுமுறை தொடர்பில்-குறிப்பாக இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் வழங்கப்படுவது தொடர்பில்-தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்ட விடுதலைப் புலிகள், தமிழக மக்கள் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் இவ்வாறான குரல்கள் அதிகளவில் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் உரத்துக் கேட்கத் தொடங்கியிருக்கும் ஈழத் தமிழர் ஆதரவுக் குரல்கள் குறித்து ஆசிரியர் தலையங்கம் வரைந்துள்ள கொழும்பு தமிழ்ப் பத்திரிகையொன்று, தமிழக அரசியல் தலைவர்கள் தம்மிடையேயான முரண்பாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. இவ்வாறு ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழகத்தின் ஆதரவு தொடர்பான நம்பிக்கை இப்போது இங்கே அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றில், ஈழத் தமிழர்களின் சர்வதேச ஆதரவுச் செயற்பாடுகளுக்கான திறவுகோல் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று ஒரு ஆய்வாளர் தனது கட்டுரையில் தெரிவித்திருந்தார். பரந்த மக்கள் எழுச்சிப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் எழுச்சி இந்திய மத்திய அரசின் மீது அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும், இதன்மூலம் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும், இது சர்வதேச சமூகத்தை நோக்கிய ஈழத்தமிழர் அரசியல் காய்நகர்த்தலில் ஒரு சாதனையாக அமையும் என்றும் அந்த ஆய்வாளர் எதிர்வுகூறியிருந்தார்.

ஆனாலும், தமிழகத்தின் இந்தக் குரல்களின் வலிமை என்ன? தமிழகத்தின் இந்த உதிரி அரசியல் தலைமைகளின் குரல்கள் பரந்துபட்ட மக்கள் ஆதரவுத் தளத்தைக் கொண்டிருக்கிறதா? அப்படியே அது வளர்த்தெடுக்கப்பட்டாலும் இது இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் எத்தகைய தாக்கமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது? என்ற யதார்த்தங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாமல் தமிழக எழுச்சி தொடர்பான எதிர்பார்ப்புக்களை வளர்ப்பது ஆபத்தானதாகவே அமையும்.

அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த நண்பர் ஒருவரிடம் ஈழத் தமிழர்கள் தொடர்பான தமிழக மக்களின் உணர்வலைகள் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். தமிழக மக்களுக்கு இப்போது ஈழத் தமிழர்கள் பற்றிச் சிந்திக்க எங்கே நேரமிருக்கிறது? எல்லோருமே இந்த அவசர பொருளாதார உலகில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.

"அப்படியானால் அங்கே அடிக்கடி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறதே..?" இது நான்.

'பாரிய' ஆர்ப்பாட்டங்களா? என்று ஏளனமாக என்னைப் பார்த்த அவர், ஈழத் தமிழர்கள் நடாத்தும் ஊடகங்கள்தான் அவற்றுக்கு இந்தளவு முக்கியத்துவம் கொடுத்துப் பெருப்பித்துக் கூறுகிறதே தவிர, அந்தளவுக்கு அங்கே ஒன்றும் பெரிய எழுச்சி ஏற்பட்டுவிடவில்லை என்று கூறிவைத்தார்.

இவர் சொன்ன இந்தக் கருத்தை இந்தியாவில் வசிக்கும் என் நண்பர்கள் பலரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள். வெளியேயிருந்து தமிழ் ஊடகங்கள் வாயிலாக நாம் பார்க்கும் அளவுக்கு அங்கே ஒன்றும் பெரிய எழுச்சி ஏற்பட்டுவிடவில்லை என்பதே அவர்களுடைய வாதமாக இருக்கிறது.

அதுசரி. எழுச்சி ஏன் ஏற்படவேண்டும்? ஏற்படுவதற்கான தர்க்க நியாயம்தான் என்ன? தமிழக மீனவர்கள் கடலில் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பாகவே பெரிய எழுச்சிகள் ஏற்படாத சூழ்நிலையில் ஈழத்தமிழர்களுக்காக எழுச்சி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தர்க்கம் இருக்கிறது?

சில தமிழக அரசியல் தலைமைகள் நடாத்தும் எழுச்சிகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து மயங்குவதற்கு தமிழக மக்கள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த அரசியல் தலைமைகளைப் பொருத்தவரையில் இவர்கள் பெரும் மக்கள் திரள் ஆதரவைக் கொண்டவர்கள் என்று கூறிவிட முடியாது. ஈழத் தமிழர்கள் தொடர்பான இவர்களது உணர்வுகளை நாம் கொச்சைப்படுத்திவிடக் கூடாது என்றாலும், இவர்களும் அரசியல்வாதிகளே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழகத்தின் அரசியலரங்கில் பலமான இடமெதனையும் பெற்றுவிட முடியாத இந்தத் தலைமைகள், தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிரான தமது கிளர்ச்சிக்கு ஈழத் தமிழர் பிரச்சினையையும் ஒரு பிரதான பேசுபொருளாக எடுத்துக்கொண்டுள்ளன என்று கருதுவது மிகையல்ல. இந்த உதிரிப் புரட்சிகள் தமிழக ஆட்சியாளர்களையே ஆட்ட முடியாத நிலையில் இதனால் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது சற்று மிகையான ஆசையே.

இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் அது பலமான ஒரு அரசியல் தலைமையின் கீழ் பெரும் பொருளாதார வல்லரசாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிரதமராக வந்துவிடக்கூடாது என்று கடும் எதிர்ப்புக் காட்டப்பட்ட முன்னாள் இத்தாலியப் பிரஜையான சோனியா காந்தி, மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பத்தாண்டுகள் பதவி வகித்த ஒரே நபர் என்ற பெருமையைத் தட்டிக்கொண்டு, பொருளாதாரத்துறைக் கலாநிதியான மன்மோகன் சிங்கை பிரதமராக நியமித்து இந்தியாவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு இணைந்த தலைமைகளின் கீழ் தெற்காசியாவின் பொருளாதார வல்லரசாக எழுச்சி கண்டிருக்கும் இந்தியா, உலக வல்லரசு என்ற நிலையை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.

அதனுடைய இந்த வளர்ச்சிப் போக்கில் முன்னெப்போதும் இருந்திருக்காத அளவுக்கு மாநிலங்களின் கைகளும் இணைக்கப்பட்டிருக்கிறது. பல மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைமையில் தேசிய முற்போக்கு முன்னணி இந்தியாவை இந்தளவு வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. மத்திய அரசோடு இவ்வாறு இணைந்துகொண்டுள்ள மாநிலக் கட்சிகளின் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான கட்சியாக விளங்குகிறது.

மத்திய அரசில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தி.மு.க. மாநில ஆட்சியையும் கைப்பற்றி பலம் பொருந்திய ஒரு நிலையில் இன்று இருக்கிறது. ஆனால் அவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பொருந்திய நிலையில் இருப்பதால் ஈழத் தமிழர்களுக்கு ஏதோ நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. தி.மு.க. மத்திய அரசிலும் பலத்துடன் இருக்கிறது என்பதால் அது மத்திய அரசின் நிலைப்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் என்பதைவிட, மத்திய அரசின் ஒரு அங்கம் என்ற வகையில் பரந்த இந்தியாவின் நலன் சார்ந்த அக்கறையும், பொறுப்புணர்ச்சியுமே அதற்கு அதிகரித்திருக்கிறது எனலாம். இதுவே யதார்த்தமும் கூட. இதனால், தி.மு.க. வின் மாநில அரசியல் கொள்கைகள் மத்தியில் பிரதிபலிப்பதைவிட, மத்திய அரசின் பரந்துபட்ட இந்திய நலன் சார்ந்த கொள்கைகள் மாநில அரசில் பிரதிபலிப்பதையே நாம் நேரில் கண்டுகொண்டிருக்கிறோம். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தி.மு.க.வின் நடவடிக்கைகள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இவ்வாறு மாநிலத்தில் பலம் பொருந்திய ஒரு கட்சியே மத்தியின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தாமல் இருக்கும் ஒரு சூழ்நிலையில், தமிழகத்தின் உதிரிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவிடும் என்று எதிர்பார்ப்பது தர்க்க முரணாகவே தென்படுகிறது. இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்பது இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் சார்ந்த வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, தமிழ்நாட்டு அழுத்தங்களால் இதில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

மேலும், தமிழ்நாட்டின் இந்த அரசியல் எழுச்சிகள் உதிரிக் கட்சிகளின் தனித்தனியான முயற்சிகளாகவே இருக்கின்றன என்பதையும் நாம் இங்கு கவனிக்கத் தவறக் கூடாது. ஒவ்வொரு கட்சியும், அதன் தலைமைகளும் தமது கட்சி நலன்சார்ந்த நோக்கிலேயே ஈழத் தமிழர் விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டுள்ளன என்பதையே இது காட்டுகிறது. இதனால்தான் கொழும்பு தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் தமிழகத் தலைவர்களை ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒன்றுபடுமாறு கோரிக்கை விட நேர்ந்திருக்கிறது.

ஆனாலும், ஈழத் தமிழர் விவகாரத்தில் அதன் நேரடிப் பிரதிநிதிகளான ஈழத் தமிழ் அமைப்புக்களும், கட்சிகளுமே ஒன்றுபடாத ஒரு சூழ்நிலையில் தமிழகத் தலைமைகள் இந்த விடயத்தில் ஒன்றுபடவேண்டும் என்று எந்த அடிப்படையில் கோரிக்கை விடுப்பது?

உண்மையில் இன்று அதிகளவு சர்வதேசப் பரிமாணம் பெற்றுள்ள ஈழத் தமிழர் விவகாரத்தை வெறுமனே இலங்கையின் உள்நாட்டு கட்சி அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழக உதிரி அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் என்பற்றின் அடிப்படையில் நோக்காமல், சர்வதேச அரசியல், அண்டை நாடான இந்தியாவை முதன்மையாகக் கொண்ட சர்வதேச நாடுகளின் பிராந்திய அரசியல், இராணுவ, பொருளாதார நலன்கள் போன்றவற்றின் கண்ணோட்டத்தில் நோக்கி, இதற்குள் ஈழத் தமிழர்களுக்கு அதிகளவு சாதகமான ஒரு சூழ்நிலையைக் கட்டியெழுப்புவதே நடைமுறைச் சாத்தியமான ஒரு அணுகுமுறையாக இருக்க முடியும்.

 - மூலம்- ஐ.என்லங்கா இணையம்
 

vaharai-makkal

ஒரு நேர உணவுக்குக் கூட கையேந்தும் அவலம்

இலங்கை அரசு முன்வைத்துள்ள மாகாணசபை தீர்வை தமிழ் மக்கள் நிராகரிப்பது சரியா?

ஜே.வி.பியும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும்.

வன்னியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு விடுதலைப்புலிகளே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

புலிகள் பேச அழைத்தால் இலங்கை அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது?

இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் தடுமாற்றத்தை டி. ராஜாவின் பேச்சு பிரதிபலிக்கின்றது.