|
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சி தீர்மானம் ; விருப்பு வாக்கின் அடிப்படையில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க ஆளும் கட்சி முடிவு
எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
ஆயுதக்குழுவான பிள்ளையான் குழுவினர் மற்றும் ஏனைய ஆயுதக் குழுவினரிடமிருந்து அரசாங்கம் ஆயுதங்களைக் களையவேண்டும், கிழக்கு மாகாணத்திலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட விசேட அதிரடிப்படையினரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் போன்ற மூன்று கோரிக்கைகளையே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகத் தீர்மானிப்பதற்கு இன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருக்கும் அந்தக் கட்சி, வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவிடம் ஒப்படைத்துள்ளது.
தலைவர் ரணில் விக்ரமசிங்க, தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா, சட்டநிபுணர் ஸிம்லி அசீஸ் மற்றும் தயாபெல்பொல ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். கிழக்கு மாகாணத் தேர்தல்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசையும் இணைத்துக்கொள்வது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீமை நாளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
கட்சியின் முதன்மை வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சி தீர்மானம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
எவர்ஒருவர் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனக் கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஏற்படுத்தும் கூட்டமைப்புக்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரம் சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தீர்மானித்துள்ளனர். பிள்ளையானையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு அந்தக் கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
- ஐ.என்.லங்கா இணையத்தளம்
|