|
நிதிச் சுமையால் இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்'
பாக்தாத், ஜன.26: இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதற்கு முக்கியக் காரணமே, அந்நாட்டின் பொருளாதார நிலைதான் என்று அல்-காய்தா தெரிவித்துள்ளது. இராக்கில் படைகள் இருப்பதால் அமெரிக்காவுக்கு அதிகம் செலவாகிறது. செலவைக் கட்டுப்படுத்துவதற்காக படைகளைத் திரும்பப் பெறும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாக அல்-காய்தா தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் இணையதளத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. 9 ஆண்டுகளாக இராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகளின் கடைசி பிரிவு கடந்த மாதம் முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது. இதற்குப் பிறகு முதல் முறையாக இணையதளத்தில் இக்கருத்தை பயங்கரவாத அமைப்பான அல்-காய்தா தெரிவித்துள்ளது.
இராக்கில் அமெரிக்கப் படைகளின் பிரதான எதிரி அல்-காய்தா அமைப்புதான். அமெரிக்க படை வீரர்கள் மீது பயங்கரமான தாக்குதலை இந்த அமைப்பினர் நடத்தியதோடு, அமெரிக்க ஆதரவில் நடைபெறும் அரசு அலுவலகங்களையும் தாக்கினர்.
அமெரிக்க படைகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அல்-காய்தா அமைப்பினர் இப்போது சன்னி முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 170 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்கு வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இதைப் பார்க்கும்போது அங்கு உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று அல்-காய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ஒலி நாடா செய்தியில், தன்னை அபு முகமது அல்-அதானி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இராக் மண்ணில் அமெரிக்க படைகள் தோற்றுப் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க படைகள் இராக்கிலிருந்து முற்றிலுமாக வெளியேறிவிட்ட நிலையில், இப்போது சிதறுண்டு போயுள்ள அல்-காய்தா அமைப்பினர் மீண்டும் ஒன்று திரண்டு அமெரிக்காவுக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். புனிதப் போருக்கு (ஜிஹாத்) தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதற்கு பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் என்றாலும், அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது மற்றொரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
அதிக கடன் சுமையால் அமெரிக்கா திவாலாகிவிட்டது. இதனாலேயே படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அந்த நாட்டுக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இராக்கிலுள்ள சன்னி முஸ்லிம்கள் அல்-காய்தா அமைப்புடன் இணைந்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். எந்த காரணத்துக்காக அவர்கள் அமைப்பிலிருந்து வெளியேறியிருந்தாலும் அவை மன்னிக்கப்படும். எனவே மீண்டும் அமைப்பில் சேரலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதிலிருந்தே அல்-காய்தா அமைப்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பலர் வெளியேறியுள்ளது புலனாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அல்-காய்தா அமைப்பு நிதி திரட்டுவது தொடர்பாக ஒரு கோரிக்கையை விடுத்திருந்தது. அதில் அமைப்புக்காக உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு உதவ நிதி தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இராக்கில் அமெரிக்க படைகள் நுழைந்த பிறகு அல்-காய்தா அமைப்பிலிருந்த பல சன்னி முஸ்லிம்கள் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி அமெரிக்க படை ஆதரவாளராக மற்றும் இராக் அரசு பணிகளில் சேர்ந்தனர். இதனால் 2007-ம் ஆண்டு அல்-காய்தா அமைப்பினருக்கு எதிரான போரில் அல்-காய்தாவிலிருந்து வந்த சன்னி முஸ்லிம்களால் திருப்பு முனை ஏற்பட்டது. அமெரிக்க படைகளின் ஆதிக்கம் மேலோங்கியது. பலர் வெளியேறியதால் அல்-காய்தா அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. அரசுக்கு ஆதரவு தெரிவித்த சன்னி முஸ்லிம்கள் தனிக் குழுவை ஏற்படுத்தினர்.
நாளடைவில் சன்னி முஸ்லிம்கள் மீது அரசு சந்தேகப்படத் தொடங்கியது. பலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அல்-காய்தா அமைப்பினர் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு பாக்தாத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஒருவர் போலீஸப்ரால் கொல்லப்பட்டார்.
-Dinmani -
|