|
தமிழ் நாடு தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஓர் பகிரங்க வேண்டுகோள்: தமிழ்நாடு நியாயமாக செயல்பட வேண்டும்.
- வீ. ஆனந்தசங்கரி
விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள கிளிநொச்சி தொகுதி உட்பட நான்கு தடவைகள் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று 17 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபாடுள்ள ஒரு மூத்த தமிழ் இலங்கை பிரஜை ஒருவரினால் இவ் வேண்டுகோள் விடப்படுகிறது. விடுதலைப் புலிகளால் அடிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களை மீட்பதற்காக தமிழ்நாடு மக்களும் தலைவர்களும் அரசியல் வேறுபாடற்ற விசுவாசமான ஒத்துழைப்பை தருமாறு வேண்டப்படுகின்றனர்.20 மைல் கடலால் பிரிக்கப்பட்டு இலங்கையின் வடகிழக்கு பகுதியில் வாழுகின்ற தம் இனத்தையொத்த தமிழ், முஸ்லீம் மக்களில் தமிழ் நாட்டில் வாழும் அதே இனத்தை சேர்ந்த 6 கோடி மக்கள் அக்கறை படுவதில் நியாயம் உண்டு. ஆகவேதான் இலங்கையின் இனப்பிரச்சினை சம்பந்தமாக கவனமாகவும், அக்கறையுடனும் செயல்படுவதோடு, அரசியல் தலைவர்களின் உணச்சிமிக்க பேச்சுக்களால் தூண்டப்பட்டு மக்கள் செயல்படக் கூடாது. அத்தகைய பேச்சுக்கள் எதிர்பார்ப்புக்கு மாறுபட்ட நிலைமையை நாட்டில் உருவாக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
பல்வேறு காரணங்களுக்காக இலங்கையும் இந்தியாவும் முரண்படக்கூடாது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் செய்த மகாந்மாகாந்தி அவர்களின் கூற்றாகும். இலங்கையும் இந்தியாவும் குறிப்பாக தமிழ்நாடும் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர உறவும், புரிந்துணர்வும், நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். ஆகவே இரு தரப்பு தலைவர்களும் தமது பேச்சுக்கள் மற்றும் செயல்கள் மூலம் மக்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்திவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே சிங்களவர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் உறவாடுவதற்கு தடையாக சிலர் திட்டமிட்டு செயல்படுவதோடு இரு சாராருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ் நாடு இலங்கைப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ளுமாயின் தப்பான அபிப்பிராயங்கள் நீக்கப்பட்டு இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு உதவக்கூடிய நிலமை உருவாகும்.நாட்டுப் பிரிவினை பற்றி தமிழ்நாட்டில் பேசுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலானதாகும். எனவே, அதனை தவிர்த்து சமஷ்டி ஆட்சி முறையிலோ அன்றி இந்திய ஆட்சி முறையையொத்த தீர்வைப் பற்றியோ பேசுவதே இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும். இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் இந்தியாவின் தேசிய நலன்களுக்கும் பங்கம் ஏற்படாத வகையில் தமிழ்நாடு ஒரு நிலைப்பாட்டை எடுத்தல் வேண்டும். இந்தியாவில் எக்; கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எவர் பிரதமராக வந்தாலும் இலங்கையில் தமிழீழம் அமைப்பது சாத்தியமல்லவென வலியுறுத்தி வந்துள்ளனர். ஆகவே தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கையுடன் இத்தகைய தீர்வு பற்றி பேசுவார்களாக இருந்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.
அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது கொடூரமான முறையில் நடந்து அவர்களை கொடுமைப்படுத்தி அடிமைகள் போல் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழ் மக்கள் அவர்கள் நிரந்தர பயத்துடனும் பீதியுடனும் வாழ்கின்றனர். எனவே தமிழ் மக்களைப் பற்றி பேசுகின்ற அருகதை விடுதலைப் புலிகளுக்கு அற்று போய்விட்டது. மக்கள் பெருமளவு இடம்பெயர்ந்து வாழ்வதற்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகள் அவர்களை படுமோசமான முறையில் நடத்தியமையே. ஆபத்து நிறைந்த கப்பல் பயணத்தை மேற்கொண்டு இந்தியா வருவதிலும் பார்க்க விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் மிகவும் இலகுவாக இருந்தும் கூட அவர்களில் வசதியானோர் வெளிநாடுகளுக்கும், சிலர் இந்தியாவுக்கு வருகின்றார்கள். இந்தியாவுக்கு செல்கின்றவர்கள் அத்தனைபேரும் அகதிகள் அல்ல. அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை புலிகளின் சிறுவர் படையணியில் சேராது தடுப்பதற்கும், விடுதலைப் புலிகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், ஹர்த்தால் போன்றவற்றால் இயல்பு வாழ்க்கை சீரழிவதோடு மாணவர்களின் படிப்பும் சீரழிவதாலும் தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்தியா செல்கின்றனர். தமிழீழம் சாத்தியமற்றதென்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். இதனை சாதிக்க முடியாதென்பதை விடுதலைப்புலிகளும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
இந்தியா போன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் பிரிவினையை எதிர்க்கின்றன. உலகில் எந்த ஒரு நாடும் இலங்கையில் பிரிவினை ஏற்படுவதை விரும்பவில்லை. ஓஸ்லோ மற்றும் டோக்கியோ ஆகிய உடன்படிக்கையின்படி சமஷ்டி முறையே தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு முழுக்க உண்டு. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சிங்களத் தலைவர்;கள் தமிழ் தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அத்தனையும் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக ரத்துசெய்யப்பட்டன. பண்டா-செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் அத்தனைக்கும் ஏற்பட்ட கதி அனைவரும் அறிந்ததே. இன்று நிலைமை முற்றுமுழுதாக மாறுபட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் 50 ஆண்டுகாலமாக கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒவ்வொருவரும் சிறுபான்மை இனத்தவருக்கு ஏற்புடைய ஒரு நியாயமான தீர்வை விரும்புகின்றனர்.
50 ஆண்டுகாலமாக சமஷ்டி பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பீதி மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளமையால் சமஷ்டி என்ற வார்த்தை பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றையாட்சிக்குக் கீழ் 50 ஆண்டுகாலமாக பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாதபடியினால் இனியும் ஏற்படாது என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். சமஷ்டி, ஒற்றையாட்சி ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் பலருடன் நான் பேசியபொழுது பெரும்பாலானோர் இந்திய முறையை விரும்புவதை உணர்ந்தேன். அதனாலேயே என்னை இந்திய முறையை ஏற்குமாறு கோரவைத்தது. இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியா ஒரு இஸ்லாமியரை நாட்டின் தலைவராக ஏற்று பெரும் மதிப்பு கொடுத்து வருகிறது. இப் பதவியை முன்பும் இஸ்லாமியர்கள் வகித்துள்ளனர். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மிக்க மதிப்பை பெற்ற ஓர் சீக்கியர் நாட்டின் பிரதம மந்திரியாக விளங்குகின்றார். இத்தகைய பல முன்னுதாரணங்களை காட்டியே பலரை எனது ஆலோசனையை ஏற்க வைத்தேன். அத்தகைய முன்னுதாரணங்கள் எவையென கூறி ஒரு இந்தியன் இன்னுமொரு இந்தியனை அவருடைய இன, மத, மொழி ஆகியவற்றின் மூலம் அடையாளம் காணாது இந்தியனாகவே அடையாளம் காணும் இந்திய பெருமக்களுக்கு நான் அபகீர்த்தியை ஏற்படுத்த விரும்பவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையிலேயே தமது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதென இந்தியர்கள் பெருமையடைகின்றனர்.
நாட்டின் உள்ளும் வெளியிலும் வாழும் பல துறையிலும் செயல்படுகின்ற இலங்கையர் என்னால் சிபாரிசு செய்யப்படும் இந்திய முறையிலான ஒரு அரசியல் சாசனத்தை மிகவும் பாராட்டுகின்றனர். இனப்பிரச்சினை தீர்வுக்கு “எனது தீர்வே” பல மட்டத்திலும் விவாதிக்கப்படுகின்றது. சமயத் தலைவர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது. அதி வணக்கத்துக்குரிய ஒரு சிங்கள பிஷப் எனது தீர்வு வேகமாக வலுபெறுகின்றது என்று பாராட்டியுள்ளார். அதேபோல பலர் வாழ்த்தியுள்ளனர். மகாசங்கத்தைச் சேர்ந்த மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளான அதி வணக்கத்துக்குரிய உடுகம சிறி புத்தரஹித்த தேரர் அவர்களும், அதிவணக்கத்துக்குரிய திபத்துவாவே சுமங்கள தேரர் அவர்களும் என்னுடன் கலந்தாலோசித்தபோது நாட்டை பிரிக்க கூடாது என்பதை மட்டுமே வலியுறுத்தினர். எனது பிரேரணை எதிர்கட்சி தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க உட்பட ஆளும் கட்சி, எதிர்கட்சி தலைவர்கள், முஸ்லீம் தலைவர்கள், பிரதம மந்திரி கௌரவ ரட்ணசிறி விக்கிரமநாயக்கா, பல அமைச்சர்கள், தற்போதைய ஜனாதிபதி மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா போன்ற முக்கிய பிரமுகர்களுடனும் கலந்துரையாடியுள்ளேன். பல இலங்கை சமூகத்தவர்களை சேர்ந்த குழுக்கள் பலவற்றுடனும் வெளிநாட்டில் பேசியுள்ளேன். எவரும் கருத்து வேறுபாடுகளை தெரிவிக்கவில்லை. சமஷ்டி முறையிலும் பார்க்க இந்திய முறையிலான தீர்வுக்கு பெருமளவு ஆதரவு காட்டப்படுகின்றது. இந்திய முறை மூலம் இலகுவாகவும், விரைவாகவும் தீர்வு காணப்பட முடியுமென்று பலதரப்பட்ட மக்களும் கருதுகின்றனர். எனது ஜே.வி.பி தோழர்களும், மதிப்பிற்குரிய ஜாதிக ஹெல உறுமய தலைவர்களும் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணக்கூடிய வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு வழங்கி 70,000 இற்கு மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து உயிர் பலிகளை நிறுத்தவும் உதவுவர்.
பாக்குத்தொடுவாய்க்கு அப்பால் உள்ள தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்நாடு மிகவும் விரும்புகின்றது. ஆகவே 23 ஆண்டுகாலமாக அம் மக்கள் அனுபவித்து வந்த சொல்லொணா துயரங்களை மனதில் கொண்டு விடுதலைப் புலிகள் இந்திய ஆட்சி முறையை ஏற்க தமிழ்நாடு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இழந்த உரிமைகளில் ஜனநாயக உரிமை, அடிப்படை உரிமைகள், மனித உரிமை மீறல்கள் அடங்கும். இந்திய முறையிலான தீர்வை விடுதலைப் புலிகள் ஏற்பதாக பகிரங்கமாக கூறுவார்களேயானால் தீர்வு மிக அண்மித்து விட்டது என்பது மட்டுமன்றி முழு நாட்டுக்கும் தீர்வு காணும் மனநிலை ஏற்படும். தமிழ்நாட்டவர்களுக்கும் ஏற்புடையதாகிய இந்திய முறையிலான தீர்வை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறும் 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசை ஏன் கோரவில்லையென பலர் கேள்வி எழுப்பலாம். அவர்கள் மனித உரிமை மீறல்கள் பற்றியும் ஏ-9 வீதி திறப்பது பற்றியுமே பேசினர். பாராளுமன்ற உறுப்பினர் பதவி விடுதலைப் புலிகளின் முயற்சியால் அவர்களுக்கு கிடைத்தமையால் அவர்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாகவே பேசுகின்றார்களே அன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேசவில்லை என்பது துரதிஷ்டமானதாகும். விடுதலைப் புலிகளின் சண்டித்தனம், மிரட்டல், மோசடி ஆகியவையே அவர்களுக்கு வெற்றியை கொடுத்திருந்தும் அவர்கள் தாமே தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என கூறித்திரிகின்றனர். எனது குழு வேட்பாளர்கள் உட்பட வேறு எந்த வேட்பாளர்களையும் எதுவித தேர்தல் வேலைகளிலும் ஈடுபடவிடவில்லை. அரசியலில் ஈடுபட்டவர்கள் மட்டுமன்றி பெரும்பாலான தமிழ் மக்களும் வாக்களிப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. மோசடி மூலமே தேர்தல் நடைபெற்றது என்றும் வடகிழக்குக்கு புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் சிபாரிசு செய்திருந்தன.
டெல்லியில் திரு. ஆர். சம்பந்தன் தலைமையில் சென்ற த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த அறிக்கை ஒருதலைபட்ட பாராபட்சமான அறிக்கை. தமிழ் மக்களுக்கு புலிகளால் செய்யப்படும் கொடூர செயல்கள் பற்றி எதுவும் கூறவில்லை. இன்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் அரச படைகளின் மீறல்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு கூடுதலாகும் அண்மைக்காலமாக படையினர் மத்தியிலும் மீறல்கள் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகளால் ஏவப்படும் எறிகணை வீச்சுக்கள், கிளேமோர் குண்டுத்தாக்குதல்கள். கைக்குண்டுத் தாக்குதல்கள், பிஸ்டல் குழுவினரின் தாக்குதல்கள், பல இராணுவத்தினர் இறப்பதும் அப்பாவி மக்கள் பலர் இறப்பதும் காயப்படுவதும் தினமும் நடக்கின்ற சம்பவங்களாகும். இதுவே அரச படைகளை மனித உரிமை மீறல்களில் கூடுதலாக ஈடுபட வைக்கலாம். அப்பாவி மக்களின் மரணங்களை கூட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபிக்காதமை வருத்தத்துக்குரியதாகும்.
ஏ-9 பாதை மூடப்பட்டது சம்பந்தமாக கூறின் இப் பாதையே யாழ் குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைப்பதாகும். விடுதலைப் புலிகள் அப் பாதையில் வரி அறவிடுவதையும் ஆட்கள் கடத்துவதையும் முகமாலை சோதனைச் சாவடியை தாக்கமாட்டோம் என உறுதியளித்தால் பாதை திறப்பதற்கு மறுக்க அரசாங்கம் எதுவித காரணமும் கூற முடியாது. எட்டு கட்டை வரை அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவி தாக்கியதாலேயே பாதை மூடப்பட்டது. பல ஆண்டுகள் விடுதலைப் புலிகளால் மூடப்பட்டிருந்த இப்பாதை யுத்த நிறுத்தத்தின் பின்பே திறக்கப்பட்டது. அதற்கு முன்பு சொல்லமுடியாத துன்பங்களை மக்கள் அனுபவித்தனர். ஆறு, ஏழு மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளும் பிரயாணத்தை ரயில், கப்பல், பஸ் ஆகியவற்றில் 36 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்யவேண்டிய நிலை அன்று ஏற்பட்டிருந்தது. சிப்பந்திகளோடு மேலும் 44 பயணிகள் பயணம் செய்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். இன்று மூன்று வௌ;வேறு மாற்று ஒழுங்குகளை அரசு முன் வைத்தது. 1. வேறொரு தரை மார்க்கமான பாதை. 2. பல லொறிகளில் ஒரே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புதல். 3. கப்பல் மார்க்கமாக பொருட்களை அனுப்புதல். இம் மூன்று ஒழுங்குகளையும் தகுந்த காரணமின்றி விடுதலைப் புலிகள் நிராகரித்ததோடு கடல் பயணத்துக்கு துணை போக வேண்டாமென்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு எச்சரிக்கை விட்டிருந்தது. அப்படியிருந்தும் சில சிங்கள மாலுமிகள் தமக்கு ஏற்படும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச்சென்றனர். விடுதலைப் புலிகள் அரசியல் பணிகளுக்கு மட்டுமே யாழ்ப்பாணத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அரசியல் பணிகளை விடுத்து அரச ஊழியர்களை மிரட்டி அரச நிர்வாகத்தை கைப்பற்றுவதிலேயே ஈடுபட்டிருந்தனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இல்லாத பல்வேறு வரிகளை விதித்து தினமும் பலகோடி ரூபாய்களை சம்பாதித்தனர். இந்த வீதியால் அவர்களால் கடத்தப்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியாது. பாதை மூடப்பட்டதால் மக்கள் துன்பப்படுவதும் பொருட்களின் விலை பலமடங்கு கூடியதும் உணவு தட்டுப்பாடு இருப்பதும் உண்மையே. தனியார் துறையினர் யாழ்ப்பாணத்துக்கு பண்டங்கள் எடுத்துச் செல்வது புலிகளால் தடுக்கப்பட்டமையாலேயே இந் நிலைமை ஏற்பட்டது. அவர்களின் அக்கறை முழுதும் வரி மூலம் பணம் சேர்ப்பதே.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் எமது மக்கள் படுகின்ற கஷ்டங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். அவர்கள் சகல உரிமைகளையும் இழந்து அடிமைகள் போல் வாழ்கின்றார்கள். அவர்களுடைய பிள்ளைகள் கடத்தப்படுவதைக்கூட முறைப்பாடு செய்ய முடியாது தவிக்கின்றனர். அதேளை விடுதலைப் புலிகளது தலைவர்களின் பிள்ளைகள் போராளிகளாக சேர்க்கப்படுவதில்லை என்பதற்கு ஆதாரம் உண்டு. அதற்குப் பதிலாக அவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்று வருகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்கின்ற மக்கள் மௌனமாக கண்ணீர் விடுகின்றனர். புலிகளின் இரும்புத்திரைக்குப் பின்னால் நடப்பவற்றை யாரும் அறிய மாட்டார்கள். த.தே.கூ பாஉக்கள் இதுபற்றி நன்கு அறிந்திருந்தும் புலிகளின் பிரதிநிதிகளாக மட்டும் செயல்படுவதால் மௌனம் சாதிக்கின்றனர். புலிகளின் செயற்பாடுகள் வெளி உலகுக்கு தெரியமாட்டாது. ஆனால் அரச படைகளின் செயற்பாடுகள் அடுத்த நிமிடமே மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக அவர்களின் இணையத்தளங்களில் வெளிவந்து விடுகின்றது. உதாரணமாகக் கூறின் தமிழ்நாட்டு மக்களும் பிறநாடுகள் பலவற்றில் உள்ளவர்களும் முல்லைத்தீவு செஞ்சோலையில் இறந்த 52 பேரும் அனாதைகள் என நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில் அத்தனை பெண் பிள்ளைகளும் நான் 14 ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்திய கிளிநொச்சித் தொகுதியி;ன் பல்வேறு பாடசாலைகளை சேர்ந்த உயர் வகுப்பு மாணவிகளாகும்.
புலிகள் தடுப்பு முகாம்கள், இருட்டறைகள், சித்திரவதை முகாம்கள் பலவற்றை வெளி உலகுக்குத் தெரியாது தமது இரும்புத்திரைக்குப் பி;ன்னால் நடத்தி வருகின்றனர். அத்துடன் பலாத்காரமாக சிறுவர்களை போராளிகளாகச் சேர்த்தல், ஆட் கடத்தல் மற்றும் கொலைகள் தாராளமாக நடைபெறுகின்றது. புலிகளின் பிரதேசத்துக்கு உள்ளே இப்படி பல விடயங்கள் நடைபெறுகின்றன. மக்கள் அடிமைகள் போல் வாழ்கின்றனர். சிங்கள ஆதிக்கத்தை பற்றி பேசுவதற்கு முன்பு புலிகளிடமிருந்து தமிழ் மக்கள் மீட்கப்பட வேண்டும். சில விசேட காரணங்களுக்காக தகுந்த பொறுப்பு கொடுத்தால் மட்டும் ஒருவர் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்படுவர்.
தமிழ் நாட்டில் புலிகளின் செயற்பாடு பற்றி பிழையான தகவல்கள் கிடைக்கின்றமையால் புலிகளுக்கு எதிராக யாரும் ஒரு வார்த்தை பேசுவதில்லை. அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தனை வசதிகளையும் வைத்து அவர்கள் அங்கொரு சர்வாதிகார ஆட்சி நடத்துகின்றனர். மாவட்ட நிர்வாக அதிகாரியாகிய இந்திய கலெக்டருக்கு சமமான அரச அதிபர் தொடக்கம் சகல அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அரசிடமே சம்பளம் பெறுகின்றனர். சகல அபிவிருத்தித் திட்ட வேலைகள் மின்சாரம், நிவாரணப் பணிகள், அத்தனையும் அரச பணத்திலேயே நடைபெறுகிறது. சுருங்கக் கூறின் அவர்களுக்கு நிர்வாகச் செலவு ஒரு சதமும் இல்லாமலேயே தங்கள் பகுதிகளில் நிர்வாகம் நடத்துகின்றனர். பயங்கரவாதிகளின் தேவைகள் அத்தனையையும் கவனிக்கின்ற உலகிலேயே ஒரேயொரு அரசு இலங்கை அரசே. அவர்களின் மீது கொண்ட அனுதாபம் காரணமாக அல்ல மக்களின் தேவைகளை எங்கிருந்தாலும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் சகல பொருட்களிலும் முதல் உரிமை கோருவது புலிகளே.
கிளிநொச்சி மாவட்டத்தை 14 ஆண்டுகள் பிரதிநிதுத்துவப்படுத்தியதுடன் மேலும் 3 ஆண்டுகள் யாழ் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கையின் வடபகுதியை நன்றாகவும், கிழக்குமாகாணத்தை கணிசமான அளவும் தெரிந்த ஒருவரிடமிருந்தே தமிழ் நாட்டு தலைவர்களுக்கும் மக்களுக்கும் இச்செய்தி வருகின்றதேயன்றி ஓர் அந்நியனிடமிருந்தல்ல. எனது இவ்வேண்டுகோள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாடு பற்றி தமிழ் நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தி அவர்களுடைய கண்ணைத்திறந்து அவர்கள் விடுதலைப்புலிகளுக்காகப் பேசுவதை விடுத்து தமிழ் மக்கள் சார்பில் செயற்படுவார்களென வலுவாக நம்புகின்றேன். இந்திய மத்திய அரசையும் தமிழ் நாட்டு மாநில அரசையும் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய சட்டசபை உறுப்பினர்களை கொண்ட ஓர் தூதுக்குழுவை அனுப்பி எமது நாட்டு உண்மைநிலையை கண்டறிய வேண்டும் என மிகவும் ஆர்வத்துடன் வேண்டுகின்றேன். அத்தகைய குழு விடுதலைப்புலிகளின் அதிகட்டுப்பாட்டுப் பிரதேசமான இரும்புதிரையென விளங்கும் பகுதிக்கும் விஜயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு தலைவர்களுக்கும் மக்களுக்கும் இவ்வேண்டுகோளில் அடங்கிய அத்தனை விடயங்களும் எனக்கு தெரிந்தவகையில் முற்றிலும் உண்மையென உறுதியளிக்கின்றேன். முடிவில்லா இந்த யுத்தத்தால் வடகிழக்கில் வாழும் தமிழர்களும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும் வர்ணிக்க முடியாத அளவிற்கு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்த காரணத்தினாலும் விடுதலைப்புலிகளால் தாம் வாழும் அடிப்படை உரிமைகளையும் இழந்துள்ளமையாலும் புலிகள் மீது வெறுப்பு கொண்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் பைத்தியக்காரத்தனத்தால் 15 ஆண்டுகளுக்கு மேல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். பல தலைமுறைகளாக வட இலங்கையில் தமிழ் மக்களுடன் சகோதரர்கள் போல் வாழ்ந்து வந்த இஸ்லாமிய சகோதரர்கள் தமது சொத்துக்கள் அத்தனையையும் விட்டு 500 ரூபாவுடன் மட்டும் வெளியேற்றப்பட்டனர். கடந்த 15 ஆண்டு காலமாக இன்றும் தென்னிலங்கையில் அகதிமுகாம்களில் பல துன்பங்களுடன் வாழ்கின்றார்கள். இவர்களால் நாம் எமது கிராமங்கள், எமது வீடுகள், எமது பாடசாலைகள், எமது சேமிப்புக்கள், ஆண்டாண்டு காலமாக எம்மால் சேமித்து வைக்கப்பட்ட பல்வேறு பொருட்கள், எமது தொழில்கள், எமது உற்றார் உறவினர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக மிகப்பெறுமதி மிக்க எமது கலாச்சாரம் நாகரீகம் அத்தனையும் இழந்து நிற்கின்றோம். விடுதலைப்புலிகளால் வேண்டுமென்றே சிங்கள மக்கள், பல்வேறு ஜனநாயக கோட்பாட்டுக்கு கட்டுப்பட்ட அரசியற் கட்சிகள் வேறு குழுக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கசப்புணர்வை ஒரு புறத்தே வைத்துவிட்டு இனப்பிரச்சினை தீர்வுக்காக திறந்த மனத்துடன் செயல்படுமாறும் இனக்கலவரத்தை தூண்டிவிடும் நோக்கோடு அப்பாவி சிங்கள மக்களை படுகொலை செய்வதை நிறுத்துமாறும் விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகின்றேன்.
1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் யாழப்பாணத்தில் 13 சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாடே தீப்பற்றி எரிந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டு காலமாக இதனை விடவும் கூடுதலான எண்ணிக்கையில் இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்கள், கண்ணிவெடிதாக்குதல்கள், கைக்குண்டு தாக்குதல்கள் பேன்றவற்றில் தினமும் கொல்லப்பட்ட போதும் ஒரு வித பதில் தாக்குதல்களும் நடைபெறவில்லை. ஆண் பெண் குழந்தைகள் உட்பட 50க்கு மேற்பட்ட அப்பாவி சிங்கள பஸ் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட போதும் நாட்டில் அமைதியே நிலவியது. அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படையினர் லீவில் சென்று திரும்புகையில் தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்ட போதும் அமைதியே நிலவியது இவ்வாரம் பஸ்ஸில் குண்டுவைத்த இரு சம்பவங்களில் 21 அப்பாவி மக்கள் பலியாகியதோடு 70க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவ்வாறிருந்தும் பல்வேறு சமூகங்கள் மத்தியில் அமைதியே நிலவுகின்றது. இவை விடுதலைப்புலிகள் வகுப்புக் கலவரத்தை தூண்ட எடுக்கும் தந்திரோபாயங்களை பொருட்படுத்தாது இனப்பிர்ச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வுகாண மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட குண்டுவீச்சையும் அதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் நியாயப்படுத்த முடியாது. விடுதலைப்புலிகள் யுத்தப்பிரதேசத்திலிருந்து மக்களை தப்பியோட விடாது தடுத்துவிட்டனர் என காரணம் கூறுவதை ஏற்கமுடியாது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அன்றி அரச கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலோ வாழும் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாக்க வேண்டியது அரசினுடைய கடமையாகும். ஆகவே விடுதலைப்புலிகள் தம்மை பாதுகாப்பதற்காக பொதுமக்களை மனிதக் கேடயமாக பாவிப்பதாக கூறும் காரணமும் ஏற்கக் கூடியதல்ல. முழுப்பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும். விமானத்;தாக்குதலால் ஒரு உயிர் தன்னும் இழக்கப்படக் கூடாது என்பதனை அரசு தமது படைகளுக்கு கண்டிப்புடன் கூறிவைக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்கக் கூடிய நியாயமான தீர்வை கொண்டுவருவதற்கு தமிழ்நாடு முன்னின்று செயற்பட்டு இலங்கையில் குறிப்பாக தமிழ் பிரதேசத்தில் ஜனநாயகமும், சமாதானமும் தழைக்க உதவுமென நம்புகின்றேன். இனப்பிரச்சினை தீர்வுக்கு எவராலும் பங்கம் ஏற்பட இடமளியாது மக்களினுடைய சர்வதேச சமூகத்தினுடைய உற்சாகம் மறைய முன்பு செயற்படும் என எதிர்பார்க்கின்றேன். தமி;;ழ்நாட்டு முதலமைச்சர் அனுபவிக்கும் அதிகாரங்களை ஒத்த அதிகாரப்பகிர்வை இலங்கையின் பல்வேறு பிராந்தியங்களுக்கும் பெற்றுக்கொடுக்க தமிழ்நாடு தீவிரமாக செயற்படும் என நம்புவதோடு அதுவே அமைதியையும் மகிழ்;ச்சியையும் மக்களுக்கு கொடுக்கும் என்பதை கூறிவைக்க விரும்புக |